மும்பை, டிச.30 மகாராஷ் டிராவின் மும்பை மாநகராட்சி தேர்தலில், ஆளும் ‘மஹாயுதி’ கூட் டணியில் உள்ள பா.ஜ., – சிவசேனா கூட்டணி வைத்துள்ள நிலையில், மற்றொரு கூட்டணிக் கட்சியான துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்
மகாராட்டிராவில் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ, – சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மஹாயுதி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, இருநூற்று நாற்பத்து ஆறு நகராட்சிகள், நாற்பத்து இரண்டு நகர பஞ்சாயத்துகள் என மொத்தம் இருநூற்று எண்பத்து எட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது.
இதில், இருநூறுக்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை , ஆளும் மகாயுதி கூட்டணி கைப்பற்றி சாதித்தது. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் – உத்தவ் தாக்கரேயின் சிவசேனா – சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய ‘மகா விகாஸ் அகாடி’ அய்ம்பதுக்கும் குறைவான உள்ளாட்சி அமைப்பு களையே கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து, ஆசியாவிலேயே பணக்கார மாநகராட்சியான மும்பை உட்பட மஹாராஷ்டிராவில் உள்ள இருபத்து ஒன்பது மாநகராட்சிகளுக்கு, அடுத்தாண்டு ஜனவரி 15 அன்று தேர்தல் நடக்கிறது; ஜன.16 அன்று ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன
மற்ற மாநகராட்சிகளை காட்டிலும், மும்பையை கைப்பற்ற அனைத்து கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன. காரணம், மற்ற மாநிலங்களின் பட்ஜெட்டைவிட மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் அதிகம். மும்பை மாநகராட்சி தேர்தலை சந்திப்பதில், மகா விகாஸ் அகாடி கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது.
தனித்து போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில், இருபது ஆண்டுகளாக எதிரும், புதிருமாக செயல்பட்டு வந்த உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் எந்த ஆர்வமும் காட்டவில்லை.
எதிர்க்கட்சி கூட்டணியில் நிலைமை இப்படியிருக்க, ஆளும் மகாயுதி கூட்டணியிலும் மும்பை மாநகராட்சி தேர்தலை சந்திப்பது தொடர்பாக குழப்பம் நிலவுகிறது. கூட்டணியில் உள்ள பா.ஜ., – சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் ஆகியவை முதலில் தனித்தனியாக போட்டியிட முடிவு செய்தன.
இந்நிலையில், மும்பை மாநக ராட்சி தேர்தலில், பா.ஜ., – சிவ சேனா இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக அந்த கட்சிகளின் தலைவர்களிடையே கடந்த சில நாட்களாக பேச்சு நடந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தொகுதிப் பங்கீடு
இது குறித்து, மும்பை மாவட்ட பா . ஜ , தலைவர் அமித் சதம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மும்பை மாநகராட்சியில் மொத்தம் இருநூற்று இருபத்து ஏழு வார்டுகள் உள்ளன. இவற்றில், இருநூற்று ஏழு வார்டுகளில் சிவசேனாவுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது . அதன்படி, நூற்று இருபத்து எட்டு வார்டுகளில் பா.ஜ.,வும், எழுபத்து எட்டு வார்டுகளில் சிவசேனாவும் களமிறங்கும். மீதமுள்ள இருபது வார்டுகளுக்கு, விரைவில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும்
யார் எத்தனை இடங்களில் போட்டியிடுகின்றனர் என்பது முக்கியமல்ல. மும்பை மக்களுக்கு ஊழலற்ற நிர்வாகத்தை வழங் குவதே முக்கியம். எங்கள் கூட்டணி, ஹிந்துத்துவா மற்றும் ஊழலற்ற மும்பைக்காக உரு வாக்கப்பட்டுள்ளது. நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆளும் மகாயுதி கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான அஜித்பவார், மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளார். இது கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
