சென்னை, டிச.30- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை நேற்று (29.12.2025) செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை யாராலும் முறிக்க முடியாது. காங்கிரசை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாடு அரசின் கடன் குறித்து விமர்சித்து இருப்பது அவரது சொந்த கருத்து.
கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்ற அவரது பகல் கனவு பலிக்காது. உத்தரப்பிரதேச புல்டோசர் ஆட்சியின் யோகி ஆதித்யநாத் குரலாக பிரவீன் சக்கரவர்த்தி பேசுகிறார்.
தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். பிரவீன் சக்கரவர்த்தி தன்னுடைய வளர்ச்சி மற்றும் விளம்பரத்திற்காக பேசுகிறார். அவர் மீது அகில இந்திய தலைமையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஜோதிமணி
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், ‘தமிழ்நாட்டை உத்தரபிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் செயல்பாடுகள் ஆளுநர் மூலம் முடக்கப்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நம் மாநிலத்தின் சாதனைகளை நாமே குறைத்து மதிப்பிடுவது சரியல்ல. பா.ஜ.க.விற்கு ஆயுதம் எடுத்து கொடுப்பது நமது வேலையல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கோயிலில் சிறப்பு மரியாதை வழங்க மடாதிபதிகள் உரிமை கோர முடியாது
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, டிச. 30- ‘கோயிலில் முதல் மரியாதை எப்போதும் தெய்வத்துக்கு தான். சிறப்பு மரியாதைகளை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது’ என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிறப்பு மரியாதை
காஞ்சிபுரம், தேவராஜ சாமி கோயிலில், தங்கள் ஆசிரம மடாதிபதிக்கு 1992ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த பஞ்ச முத்திரை மரியாதை நிறுத்தப்பட்டதை எதிர்த்து சிறீரங்கம் சிறீமத் ஆண்டவன் ஆசிரமம் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத் துறை தரப்பில், ‘காஞ்சி காமகோடி பீடம் – சங்கர மடம், சிறீ அகோபில மடம், நாங்குநேரி சிறீ வாணாமலை மடம், மைசூர் சிறீ பரகால ஜீயர் மடம், உடுப்பி சிறீ வியாசராயர் மடம், சோசலே ஆகிய அய்ந்து மடங்களின் மடாதிபதிகளுக்கு மட்டுமே சிறப்பு மரியாதைகள் வழங்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘கோயிலில் முதல் மரியாதை எப்போதும் தெய்வத்துக்கு தான். சிறப்பு மரியாதைகளை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது’ எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
மடாதிபதிகளுக்கு மரியாதை வழங்குவது குறித்து, அறநிலையச் சட்டப்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரியை அணுகி நிவாரணம் கோரலாம் என மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளனர்.
பணியின்போது ஓட்டுநர்கள் கைப்பேசியைப் பயன்படுத்தக் கூடாது
போக்குவரத்துக் கழகம் உத்தரவு
சென்னை, டிச. 30- பணியின்போது ஓட்டுநர்கள் கைப்பேசியைப் பயன்படுத்தக் கூடாது என மாநகர் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
கைப்பேசி
இதுகுறித்து அனைத்து கிளை மேலாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது. சில ஓட்டுநர்கள் கைப்பேசி பேசிக் கொண்டே பேருந்தை இயக்குவது பொதுமக்களின் புகார் மற்றும் பேருந்தின் சிசிடிவி கேமரா மூலம் கண்டறியப்படுகிறது.
இவ்வாறு ஓட்டுநர்கள் கைப்பேசி பேசிக் கொண்டே பேருந்தை இயக்கும்போது கவனச் சிதறல் ஏற்பட்டு சாலை விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் ஓட்டுநர்கள் பணியின்போது தங்களது கைப்பேசிகளை தன்னுடன் பணி செய்யும் நடத்துநரிடம் கொடுத்து வைக்க வேண்டும்.
பணி முடிந்த பிறகு கைப்பேசியை நடத்துநரிடமிருந்து பெற்றுச் செல்ல வேண்டும். ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசிகள் வைத்திருப்பதாக பரிசோதகர்கள் மற்றும் அலுவலர்கள் மூலம் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
