கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு ஆனந்த், ஆதவ் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகளிடம் 9 மணி நேரம் விசாரணை டில்லி சி.பி.அய். அலுவலகத்தில் நடந்தது

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச. 30–– கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டில்லியில் உள்ள சிபிஅய் தலைமை அலுவலகத்தில் கரூர் ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி. ஜோஷ் தங்கையா, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர்.நிர்மல் குமார் உள்ளிட்டோர் ஆஜராகினர். அவர்களிடம் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழப்பு

கரூர் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர்.. இதுதொடர்பாக, சிபிஅய் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடைபெற்றது. பின்னர் அடுத்தகட்ட விசாரணைக்காக டில்லி சிபிஅய் தலைமையகத்தில் ஆஜராகுமாறு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, டில்லியில் உள்ள சிபிஅய் தலைமையகத்தில் அனைவரும் திங்கள் அன்று (29.12.2025)  ஆஜராகினர்.

கரூர் ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி.ஜோஷ் தங்கையா, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரேம்ஆனந்தன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ், கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோரும் விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை 9 மணி நேரம் நீடித்து,இரவு 7.30 மணி அளவில் முடிந்தது. விசாரணை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டதால், அனைவரும் இன்றும் (30.12.2025) ஆஜராக உள்ளனர்.

விஜய்யிடம் விசாரிக்கத் திட்டம்: தேவைப்பட்டால் விஜய் உட்பட மேலும் சிலரிடமும் விசாரிக்க சிபிஅய் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

 

நுகர் பொருள் வாணிபக் கழகத்தில்

1400 பேரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை

அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

சென்னை, டிச. 30- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் 1,400 பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்தார்.

1,400 பேரை பணி
நிரந்தரம் செய்ய நடவடிக்கை

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

“கடந்த ஆண்டு குறுவைப் பருவத்தில் 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு 15 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மேலும், 2024இல் சம்பா, குறுவை, தாளடி மூலம் மொத்தம் 48 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு 53 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையில் அறுவடை இயந்திரங்கள் தேவைப்பட்டால், பிற மாவட்டங்களில் இருந்து கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்பது அல்லது முறைகேடு நடைபெறுவது குறித்து விவசாயிகள் புகார் அளிக்கலாம். இதற்காக நெல் கொள்முதல் நிலையங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

கொள்முதல் பணிக்குத் தேவையான ஆட்களைத் தேர்வு செய்துகொள்ள மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி வரும் 1,400 தற்காலிகப் பணியாளர்களை விரைவில் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

 

அரசு உதவி பெறும் பள்ளிகளில்

உபரி ஆசிரியர்களை உடனே பணி நிரவல் செய்ய உத்தரவு

சென்னை, டிச. 30- அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை உடனடியாகப் பணிநிரவல் (Deployment) செய்யத் தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்குத் தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நடப்பு (2025-2026) கல்வியாண்டில் பணியாளர் எண்ணிக்கை நிர்ணயம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, மாணவர் – ஆசிரியர் விகிதப்படி கணக்கிடப்பட்டு, அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களால் ஒப்புதல் பெறப்பட்ட பட்டியல்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

தனியார் பள்ளிச் சட்டம் மற்றும் விதிகளின்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தப் பணியாளர் நிர்ணய அறிக்கைகளைப் பள்ளி நிர்வாகங்களுக்கு வழங்க வேண்டும். தொடர்ந்து பள்ளிகளில் உபரி பணியிடங்கள் கண்டறியப்பட்டால், உடனே பணிநிரவல் அல்லது மாற்றுப்பணி வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து இதுவரை எந்த அறிக்கையும் பெறப்படவில்லை. உபரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் அல்லது மாற்றுப்பணி ஆணைகளை உடனே வழங்கி, அதன் விவரங்களை ஜனவரி 23-க்குள் இயக்குநரகத்திற்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1,200-க்கும் மேற்பட்டோர் உபரியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *