விருதாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இனி சாகித்ய அகாடமிக்குக் கிடையாதாம்! ஒன்றிய அரசுடன் கலந்து முடிவெடுக்க வேண்டுமாம்!

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஒன்றிய பி.ஜே.பி. அரசின் யதேச்சதிகாரத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை!

விருதாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இனி சாகித்ய அகாடமிக்குக் கிடையாதாம்! ஒன்றிய அரசுடன் கலந்து முடிவெடுக்க வேண்டுமாம்! ஒன்றிய பி.ஜே.பி. அரசின் யதேச்சதிகாரத்தைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், சில அமைப்புகள், எந்தச் சார்பும் அற்றவையாக, பொதுவானதாக இருக்க வேண்டும் என்னும் நோக்கில் தான், கடந்த காலங்களில் அரசு இயந்திரத்தை இயக்கும் அமைப்புகளும், கண்காணிக்கும் அமைப்புகளும் அரசியலமைப்புச் சட்டப் படியும், சிறப்புச் சட்டங்களின் படியும் உருவாக்கப்பட்டன, சுதந்திரமாக இயங்கும் வண்ணம்.

தன்னாட்சி அமைப்புகளை ஆக்கிரமிக்கும் ஆர்.எஸ்.எஸ்.

ஆனால், தற்போது ஆளும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு பாசிசப் போக்குடன் எல்லா அமைப்புகளையும், நிறுவனங்களையும் தங்க ளின் கருவிகளாகவும், கைப்பாவைகளாகவும் மாற்றி வைத்து வருகின்றன! நாளும் அபகரித்துக் கொண்டே இருக்கிறது; அதன் அதிகாரமிக்க பதவிகளில் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவாவினரைக் கொண்டு நிரப்புவது வாடிக்கையாகி வருகிறது!

மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.அய்.), அமலாக்கத் துறை (ஈ.டி), வருமான வரித் துறை (அய்.டி), உயர்கல்வித் துறை அமைப்புகள், தேர்தல் ஆணையம் இப்படி நீளும் பட்டியலில் தற்போது கலை, பண்பாட்டுத் துறையில் எஞ்சியிருந்த அமைப்புகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆர்.எஸ்.எஸ்.-சின் ஆக்டோபஸ் கரங்கள் நீண்டுள்ளன.

கலை – பண்பாட்டுத் துறையை நோக்கி நீளும் ஆர்.எஸ்.எஸ். ஆக்டோபஸ்!

லலித் கலா அகாடமி, சாகித்ய அகாடமி, சங்கீத நாடக அகாடமி, தேசிய நாடகப் பள்ளி போன்ற அமைப்புகளையும்–   ஆர்.எஸ்.எஸ். ஆக்டோபஸ் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது.

ஆண்டுதோறும் வழங்கப்படும் புகழ்பெற்ற இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது களில், 2025-ஆம் ஆண்டுக்கான விருதுகளை அறிவிக்கக் கடந்த 18-ஆம் தேதி அன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தத் திட்டமிடப்பட்டு, செயற்குழு உறுப்பினர்களும் இந்தியா முழு வதுமிருந்து வந்துவிட்ட நிலையில், ஒன்றிய அரசின் கலாச்சாரத் துறையிடமிருந்து வந்த ஆணை காரணமாக செய்தியாளர் சந்திப்பு நிறுத்தப்பட்டது.

விருதாளர்கள் யாரென்பதை முன்பே உரிய குழுக்கள் கூடி முடிவு செய்துவிட்டன. அது குறித்த செய்திகளும் விருதாளர்களுக்கு வந்து சேர்ந்துவிட்டன என்றாலும்,

ச.தமிழ்ச்செல்வனுக்கான
விருதும் நிறுத்தி வைப்பு

தமிழில் மூத்த எழுத்தாளரும், முற்போக்குச் சிந்தனையாளரும், த.மு.எ.க.ச.வின் மேனாள் தலைவருமான ச.தமிழ்ச்செல்வன் அவர்க ளுக்கு விருது அறிவிக்கப்படவிருந்தது.

சாகித்ய அகாடமி குழு வழங்கும் பட்டியலை, ஒன்றிய அரசின் கலாச்சார அமைச்சகம் ஒப்புக் கொள்வது வழமை. ஆனால், இனி மேற்கூறிய பண்பாட்டு, கலை அமைப்புகள் ஒன்றிய அரசுடன் கலந்து ஆலோசித்த பிறகுதான் விருதாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது! என்னே கொடுமை!

சாகித்ய அகாடமி

இந்தியாவின் தேசிய இலக்கிய அமைப்பாக சாகித்ய அகாடமி, 1954 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி நிறுவப்பட்டது. இது நாட்டின் இலக்கிய உரையாடல்கள் நிகழவும், பொன்மொழிகளில் வெளியீடுகளைக் கொண்டுவரவும், விருதுகள் மூலம் பாராட்டவும், இலக்கிய மேம்பாட்டிற்குமாக அமைக்கப்பட்ட நிறுவனமாகும். ஆங்கிலம் உட்பட இந்திய மொழிகளில் இலக்கியச் செயல்பாடுகளை மேற்கொள்ளும் இந்த அமைப்பு, அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் உள்ள இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் 24 விருதுகளையும், மொழிபெயர்ப்புகளுக்கு அதே எண்ணிக்கையிலான விருதுகளையும் வழங்குகிறது.

அரசாங்கத்தால் நிறுவப்பட்டிருந்தாலும், இந்த அகாடமி, பெயரளவிலேனும் ஒரு தன்னாட்சி அமைப்பாகவே செயல்பட்டு வந்தது. இப்போது முற்றாக அதன் செயல்பாடுகளைத் தங்கள் வசம் கொண்டு செல்ல ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. அரசு பணிகளை விரைவுபடுத்தியுள்ளது.

ஒன்றிய பா.ஜ.க. அரசின்
பாசிசப் போக்கு!

ஒரு நாட்டின் எழுத்து, கலை, இலக்கி யம், நாடகம் / திரைப்படம், ஊடகம், பண்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூல மும், ஆக்கிரமிப்பதன் மூலமும் தான் அந் நாட்டில் ஃபாசிசமும், சர்வாதிகாரமும் நிறுவப்படுகின்றன. படிப்படியாக இந்தியாவின் செய்தி, தொலைக்காட்சி ஊடகங்களை ஆர்.எஸ்.எஸ். தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. திரைப்படத்துறையில் பல்லாயிரம் கோடிகளைச் செலவழித்து, திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. இலக்கியத் துறையில் இருக்கும் முற்போக்குச் சிந்தனையை, ஸநாதன எதிர்ப்புக் குரலை நசுக்கவே இப்போது இந்த அமைப்புகளையும் தங்கள் கொடுங்கரங்களுக்குள் கொண்டு வந்துள்ளது ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க அரசு.

இதை ஒருபோதும் அனுமதிக்க முடி யாது. நாடு முழுவதும் எழுத்தாளர்கள், கலை ஞர்கள் கொதித்துப் போயுள்ளனர். மூத்த எழுத்தாளர்களுக்கு நேர்ந்த அவமதிப்பு இது என்று நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. ஆனால், எதைக் குறித்தும் கண்டுகொள்ளாமல், தனது பாசிச யதேச்சதிகாரப் போக்கை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறது ஒன்றிய அரசு.

கருத்துச் சுதந்திரம் காக்கப்படட்டும்!

சாகித்ய அகாடமியின் விருதுப் பட்டியலில் எப்போதும் சர்ச்சைகள் இருப்பது உண்டு. ஒரு சில சமயம் சார்புகளும் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், அதையெல்லாம் மீறித் தான் ஓரளவு தன்னாட்சியுடன் அந்த அமைப்பு செயல்படுகிறது. (புரட்சிக் கவிஞரது ‘பிசிராந்தையார்’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.)  இப்போது அதையும் அழிப்பதற்கு ஒன்றிய அரசு முயல்கிறது.

இந்தப் பிரச்சினையில் எழுத்தாளர்கள், கலைஞர்களுடன் கருத்துரிமையை விரும்பக் கூடிய அனைவருடனும் நாமும் முன் களத்தில் நிற்கிறோம். பாசிசத்தின் கூறுகள் எந்த வடிவில் வந்தாலும் அவற்றை நசுக்குவோம்.
ஆர்.எஸ்.எஸ். ஆக்டோபஸ் கரங்கள் எங்கு நீண்டாலும் அதனை வெட்டியெறிவோம்!

கண்டனக் கணைகள் பாயட்டும் –

கருத்துச் சுதந்திரம் காக்கப்படட்டும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை   

30.12.2025

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *