சென்னை, டிச.27–- மேடைகள் மறுக்கப்பட்ட கலைகளை, மேடை ஏற்றி கவுரவிக்கும் வகையில், இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மய்யம் `மார்கழியில் மக்களிசை’ என்ற நிகழ்ச்சியை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான இந்த நிகழ்ச்சி நேற்று (26.12.2025) தொடங்கியது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோர் பறை அடித்து மார்கழியில் மக்களிசை நிகழ்வை நேற்று (26.12.2025) தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பேசிய கனிமொழி,
“என் வாழ்த்துகளை ரஞ்சித்திற்கு தெரிவிக்கிறேன். 6 ஆண்டுகளாக மக்கள் கொண்டாடும் இசையை நிகழ்த்தி கொண்டிருப்பதே மிகப்பெரிய வெற்றி. மார்கழியில் மக்களிசை என்பது மாற்று அரசியல் பேசுவதற்கான மேடை. கலை என்பது சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக மட்டும் இருக்கக்கூடாது. கலை என்பது சமூகத்தை செதுக்கக்கூடிய உளியாக, சம்மட்டியாக இருக்க வேண்டும். அப்படியான மேடையைத்தான் ரஞ்சித் உருவாக்கியிருக்கிறார்.
நம்முடைய கலை வடிவத்தை பிடுங்கிக் கொண்டார்கள். பறையையும் யார் யாரோ பிடுங்கிக் கொண்டார்கள். அதை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார். பறை எங்கள் இசை, நம்முடைய இசை என்பதை நாம் மறுபடியும் உரக்கச் சொல்வோம்.” என தெரிவித்தார்.
