சென்னை, டிச. 27- அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மகப்பேறு விடுப்பு
தி.மு.க. அரசு பொறுப் பேற்ற பின்னர் எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களுக்கு தொடர்ச்சியாக பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை 4,825 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மீதமுள்ள 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டு மென கோரிக்கை எழுந்தது.
இதில், 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், 169 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 831 ஒப்பந்த செவிலியர்களுக்கும் விரைவில் பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும்.
2,146 பேரை
பணி நிரந்தரம்
எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்கள் முறை என்பது 2015ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப் பட்ட திட்டம். 2015ஆம் ஆண்டு முதல் 2021 வரை 1,871 இடங்களை மட்டுமே அ.தி.மு.க. அரசு நிரப்பியது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கரோனா காலத்தில் பணியாற்றியவர்களை பணி நிரந்தரம் செய்ய வில்லை. ஆனால், தமிழ் நாடு அரசு 2,146 பேரை பணி நிரந்தரம் செய்தது.
அரசாணை
போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தின் மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எனவே, எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கும் அரசாணை விரைவில் வெளியிடப்படும். நீதிமன்றம் உத்தரவுப்படி இதற்கு முன்பு மகப்பேறு விடுப்பு எடுத்தவர்களுக்கும் நிலுவை தொகை வழங்கப்பட இருக்கிறது. பொங்கலுக்கு முன்பு இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
