சுரேந்திர நகர், டிச. 27– குஜராத்தின் கட்ச் பகுதியில் நேற்று (26.12.2025) அதிகாலை 4.30 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.
நிலநடுக்கம்
ரிக்டா் அளவுகோலில் 4.6 என்று பதிவான இந்த நிலநடுக்கத்தால் பூமி அதிர்வதை உணர முடிந்தது. இதனால் கட்டடங்கள் லேசாக குலுங்கின. பீதியடைந்த பொதுமக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளிப் பகுதியில் கூடினா்.
கட்ச் மாவட்டத்தின் ராம்பா் பகுதியில் இருந்து 22 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் மய்யம் கொண்டிருந்தது. பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் மய்யம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் 4.6 என்ற அளவில் பதிவானது. இதைத் தொடா்ந்து அதே பகுதியில் 2.5 மற்றும் 3 என்ற அலகில் பின்னதிர்வுகளும் ஏற்பட்டன.
கடந்த 2001-ஆம் ஆண்டு கட்ச் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13,800 போ் உயிரிழந்தனா். 1.67 லட்சம் போ் காயமடைந்தனா். அந்த மாவட்டத்தின் பெரும்பாலான நகரங்களும், கிராமங்களும் முற்றிலுமாக தகா்ந்தன. கடந்த இரு நூற்றாண்டுகளில் இந்தியாவில் அதிக சேதத்தை ஏற்படுத்திய இரண்டாவது பெரிய நிலநடுக்கமாக அது இருந்தது. நிலநடுக்க பாதிப்பு அதிகமுள்ள புவித் தட்டு பகுதியில் கட்ச் மாவட்டம் அமைந்துள்ளது.
கிறிஸ்தவக் கோயில் மீது தாக்குதல் மாநில அரசுகளும், பிரதமரும்
நடவடிக்கை எடுக்க வேண்டும் தேவகவுடா வலியுறுத்தல்
பெங்களூரு, டிச. 27- இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தும் காணொலிகள் வெளியாகின. இந்தத் தாக்குதல்களுக்கு, நாட்டின் முக்கிய தலைவர்கள் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர். இந்த நிலையில், கிறிஸ்தவக் கோயில் மீதான தாக்குதல்களுக்கு, நாட்டின் முன்னாள் பிரதமரும் ஜனதா தளத்தின் மாநிலங்களவை உறுப்பினருமான எச்.டி. தேவகவுடா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “நாட்டின் பல்வேறு நகரங்களில், தேவாலயங்கள் மீது நேற்று (26.12.2025) நடத்தப்பட்ட தாக்குதல்கள் அனைத்தும் கடும் கண்டனத்திற்குரியவை.
இந்த நாடு இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் சொந்தமானது. இதுபோன்ற தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி ஒரு தேவாலயத்திற்குச் சென்று வழிபாடு செய்தார். தேவாலயங்கள் மீதான இந்த தாக்குதல்களுக்கு எதிராக அந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். பிரதமர் மோடி அவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
