கேள்வி 1: நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தை முடக்குகின்ற ஒன்றிய அரசுக்கு எதிராக எழுகின்ற கண்டனத்திற்கும், மக்களின் உள்ளார்ந்த உணர்வுகளுக்கும் செவிசாய்த்து ஒன்றிய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளுமா?
– ஆர். கலைவாணி, மேடவாக்கம்.
பதில் 1: விவசாயிகள் சட்டத்தை எதிர்த்துத் தொடர் போராட்டத்தை விவசாயிகள் ஒன்று திரண்டு நடத்தியதால் எப்படி மன்னிப்புக் கேட்டு, அச்சட்டங்களை ரத்து செய்தனரோ, அதுபோன்று மகாத்மா காந்தி நூறு நாள் கிராமப்புற வேலை உறுதித் திட்ட சீர்குலைப்புக்குக் காரணமானவைகளை ரத்து செய்ய வைக்கவும் மக்கள் ஒன்று திரண்டு போராடினால் வெற்றி நிச்சயம் – மக்களுக்கு.
கேள்வி 2: “நம்முடைய அறிவுப் பாரம்பரியம் தொடரும் வரை, ஆரிய ஆதிக்கவாதிகள், வந்தவழி மறந்த அடிமைகள், அறிவற்ற அரைகுறைகள் என்று யாரும் தி.மு.க.வை அசைத்துகூடப் பார்க்க முடியாது” என்று ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காட்டமாகப் பேசியிருப்பது இன எதிரிகளுக்கு ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் அல்லவா?
– ம.அருள்ஜோதி, திருவான்மியூர்.
பதில் 2: மக்கள் மன்றத்தால் முடியாதது எது? நிச்சயம் முதல் அமைச்சரின் முழக்கம் அவர்களின் தீய சிந்தனைகளுக்கு வெடிகுண்டு. ஈரோட்டுப் பூகம்பத்தின் புதிய வெடியாகும்!
கேள்வி 3: “கட்சிப் பொதுக்கூட்டங்களிலோ, சமூக வலைதளங்களிலோ விஜய்க்கு எதிராக யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது” என சென்னையில் நடந்த மய்யக்குழுக் கூட்டத்தில் பா. ஜனதா நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் கட்டுப்பாடு விதித்திருப்பது எதைக் காட்டுகிறது?
– பி.தியாகராஜன், தியாகராயர் நகர்.
பதில் 3: “நடிகரின் புதிய கட்சி எங்களது செல்லக் குழந்தைதான்” என்பதை ஒப்புக் கொண்டதன் முதற்சாட்சியாகும்!

கேள்வி 4: “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக ஒழிக்க பாஜக முயற்சி செய்கிறது” என ஜெர்மனியில் மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி எழுப்பியுள்ள குற்றச்சாட்டு சரியா?
– ச.பிரபாகரன், மணிமங்கலம்.
பதில் 4: அசல் உண்மை! அதிலென்ன சந்தேகம்?
கேள்வி 5: ஒன்றிய அரசு, ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக ரயில் கட்டணத்தை திடீரென உயர்த்தியிருப்பது கிராமப்புற ஏழை எளிய மக்களை, சிறு-குறு வணிகர்களை, நடுத்தர மக்களை வாட்டி வதைக்கும் செயல் அல்லவா?
-இ.வேலாயுதம், மதுரவாயல்.
பதில் 5: எதிர்க்கட்சிகள் – போதிய அளவு இவற்றை மக்களிடம் விளக்கி பரப்புரை செய்வது முக்கியம். நாளும் ஒரு கொடுமை ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி., ஒன்றிய ஆட்சியிலே!
கேள்வி 6: தலைநகர் டில்லி சாலைகளில் குடும்பத்தோடு போராடிய விவசாயிகளை ஒன்றிய பிஜேபி அரசு ஓட ஓட விரட்டி அடித்ததை அடியோடு மறந்துவிட்டு, விவசாயிகளுக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருப்பதை 2025-ஆம் ஆண்டின் நகைச்சுவையாகக் கருதலாமா?
-த.ஏகாம்பரம், ஏனாத்தூர்.
பதில் 6: வழிமொழிகிறோம்!
கேள்வி 7: திராவிட நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனையின் பயனாய், இந்தியாவிலேயே தமிழ்நாடு காப்புரிமைப் பதிவில் முதலிடம் பெற்றிருப்பதை இன எதிரிகள் உணர்வார்களா?
-அ.அப்துல்சமத், வேலூர்.
பதில் 7: தூங்குவது போன்ற பாசாங்குக்காரர்கள் உணர்ந்தாலும் உணராதது மாதிரி காட்டிக் கொள்வார்கள்.
கேள்வி 8: உலகில் ஒவ்வொரு ஆண்டும் மனித உயிர்களை அதிகம் கொல்லும் உயிரினங்களில் கொசு முக்கியப் பங்கு வகிப்பதால், கொசுக்களின் உற்பத்தியை ஒழிப்பதற்கு ஒன்றிய – மாநில அரசுகள் முக்கியத்துவம் தராது அலட்சியம் காட்டுவது ஏன்?
-எஸ்.பத்ரா, படப்பை.
பதில் 8: கொசுவத்தி வியாபாரிகளுக்கு உதவுவதுபோல தோற்றம் அளிப்பதை மாற்றுவது மிக முக்கியமானதாகும். கொசு ஒழிப்பை முனைப்புடன் செயல்படுத்துவது அவசியம்!

கேள்வி 9: தீயசக்தி தி.மு.க. என்றும், தூயசக்தி த.வெ.க. என்றும் ‘பன்ச் டயலாக்’ பேசும் விஜய்க்கு 2026 – சட்டமன்றத் தேர்தலில் மக்கள் எப்படி பாடம் கற்பிப்பார்கள்?
-ச.சாந்தி, கரூர்.
பதில் 9: சினிமா வசனம் பேசும் புதுக்கட்சி நடிகருக்கு இறுதியில் விசனம் தான் மிஞ்சும்! அவரது தூயசக்தி மேக்கப்பை காலம் கலைத்துக் காட்டும்!
கேள்வி 10: இந்தோனேசியாவில் அமைந்துள்ள இந்து கிராமத்தில் 700 ஆண்டுகளாக குற்றச் சம்பவங்கள் ஏதும் நடக்காதது மட்டுமன்றி, உலகிலேயே தூய்மையான கிராமமாகப் போற்றப்படுவது வியப்புக்குரிய செய்தி அல்லவா?
– கு.கணேஷ், மரக்காணம்.
பதில் 10: மற்றைய நாட்டுத் தலைவர்கள் மகிழ்ந்து பாராட்ட வேண்டும். இதனைக் கற்றுக்கொண்டு பின்பற்றிக் கடமையாற்றிட முன்வருதல் தேவை!
