1870ஆம் முதல் இன்றுவரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து இறங்குபவர்களுக்கு முதலில் கண்களுக்குத் தெரியும் கட்டடம் விக்டோரியா அரங்கம், “சிதிலமைடைந்த மிகப் பிரமாண்டமான அரங்கம், இதனுள் என்ன இருக்கு, இதன் வரலாறு என்ன?” என்று தெரியாமல் தவித்த தலைமுறைகளுக்கு விருந்தாக முதலமைச்சர் கரங்களால் விக்டோரியா அரங்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பழமை மாறாமல் தற்போது (23.12.2025) திறக்கப்பட்டுவிட்டது.
தொடர் விடுமுறையின்போது இத்தனை நாளும் சென்னையை விட்டுச் செல்லும் மக்களுக்கு இந்த ஆண்டு முதல் விக்டோரியா அரங்கம் சுற்றுலாத் தலமாக அமைந்து “என்னைக் காண வாருங்கள்” என்று அழைக்கிறது.
இன்றைய சென்னை (மயிலாப்பூர்) ஈராயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. ஆனால், நவீன சென்னை வரலாறு 1639லிருந்து துவங்குகிறது. அதாவது பிரிட்டிஷார் “சென்ன பட்டினத்தை” குத்தகைக்கு எடுத்து கோட்டை கட்டினர்.
சுமார் 200 ஆண்டுகால கிழக்கிந்திய கம்பெனியார் ஆட்சி, அதன் பிறகு பிரிட்டிஷ் இந்தியா ஆட்சி என்ற மாற்றங்களைக் கண்ட பிறகு 1882இல் இந்த நகரத்தை நகர்ப்புரமாக மாற்றத் திட்டமிடப்பட்டது.
1882ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஜார்ஜ் டவுனில் உள்ள பச்சையப்பன் ஹாலில் நடந்த கூட்டத்தில், சென்னைக்கு (அப்போது மெட்ராஸ்) ஒரு பொது அரங்கம் கட்ட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
இதற்காக ஓர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, பொதுமக்களிடம் நிதி திரட்டப்பட்டது (முதலில் 1883 டிசம்பர் 17ஆம் தேதி, விஜயநகரம் மகாராஜா சர் புசபதி ஆனந்த கஜபதி ராஜு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.)
வடிவமைப்பாளர்: பிரபல பிரிட்டிஷ் கட்டடக்கலைஞர் ராபர்ட் ஃபெலோஸ் சிஷோல்ம். இந்தோ-சரசெனிக் (Indo-Saracenic) பாணியில் வடிவமைத்தார் கட்டியவர்: தாதிகொண்ட நம்பெருமாள் செட்டி.
காலம்: 1886-1890க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. 1887இல் திறக்கப்பட்டது (ராணி விக்டோரியாவின் பொன் விழா கொண்டாட்டத்திற்காக).
பெயரிடல்: 1888 ஜனவரியில் நகர மக்கள் கூட்டத்தில் விக்டோரியா பொது அரங்கம் என்று பெயரிடப்பட்டது.
சென்னை மாநகராட்சியால் 99 ஆண்டு குத்தகைக்கு எடுக்கப்பட்ட 57 கிரவுண்ட் (சுமார் 3.14 ஏக்கர்) இடத்தில் இது கட்டப்பட்டது. செங்கல் மற்றும் சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடம், இத்தாலியன் டவர் மற்றும் திருவிதாங்கூர் பாணி கூரை கொண்டது.இங்கு பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன:சென்னையில் முதல் திரைப்படக் காட்சி (1896இல் ஸ்டீவன்சன் அவர்களின் ஏற்பாட்டில்…) இங்குதான் நடைபெற்றது.
திராவிட இயக்கத்தின் கருவிழி
நீதிக்கட்சி உருவான விக்டோரியா அரங்கம் வெறும் பொழுதுபோக்கு மய்யம் மட்டுமல்ல, தமிழ்நாடு அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய திராவிட இயக்கத்தின் பிறப்பிடம்.
1916 நவம்பர் 20-ஆம் தேதி அன்று சர் பி.டி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் மற்றும் டாக்டர் சி. நடேசனார் ஆகியோர் ஒன்றிணைந்து தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தை (South Indian Liberal Federation) இங்குதான் தொடங்கினர்.
இதுவே பின்னர் நீதிக்கட்சி (Justice Party) என்று அழைக்கப்பட்டது. சமூக நீதி, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஆகிய கொள்கைகளுக்கு வித்திட்ட இந்த இயக்கம் உருவான வரலாற்றுச் சாட்சியாக இந்த அரங்கம் இன்றும் நிற்கிறது.
இந்த அரங்கம் சினிமா, இதர பொழுதுபோக்குகள் மட்டுமின்றி சுதந்திரமாகத் தங்கள் உரிமைகளைப் பேசும் அரங்கமாக இருந்தது.
இந்திய நாட்டு விடுதலைக்குப் பிறகும் இங்கு சில நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு வசதிகள் கொண்ட அரங்கங்கள் நகரம் எங்கும் கட்டப்பட்டதால் இந்த விக்டோரியா அரங்கம் ஆரவாரமின்றிப் போனது.
1967இல் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களால் புதுப்பிப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டு சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. 1996-இல் மீண்டும் முறையாக இந்த கட்டடத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது மேயராக இருந்த மு.க. ஸ்டாலின் அதைத் தொடங்கினார். அந்தக் காலகட்டம் விரிவாக்கத்தின் புதிய யுகத்திற்குள் சென்னை காலடி எடுத்துவைத்த காலமாகும். அதன் பிறகு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் விக்டோரியா அரங்க புனரமைப்பு தாமதமானது.
சமீபத்திய புதுப்பிப்பு (Restoration) திட்டம் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.32.62 கோடி செலவில் 2023 மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. 2025இல் முழுமையாக முடிக்கப்பட்டு, 2025 – டிசம்பர் 23ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்டது.
அசல் கட்டட அமைப்பை மாற்றாமல், பூகம்பத்திற்கு எதிரான வலுவூட்டல், ஏ.சி., நவீன வசதிகள் சேர்க்கப்பட்டன. தரைதளத்தில் அருங்காட்சியகம் (museum), மேல் தளத்தில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளன.
இப்போது இது சென்னையின் வரலாறு, கலாச்சாரம், போக்குவரத்து வரலாறு (ரிக்ஷா, டிராம் மாடல்கள்) போன்றவற்றை காட்சிப்படுத்தும் இடமாகவும், பொது நிகழ்ச்சிகளுக்கான மய்யமாகவும் திகழ்கிறது. இந்த அரங்கம் சென்னையின் கலாச்சார மற்றும் அரசியல் வரலாற்றின் சாட்சியாக இன்றும் நிற்கிறது. சென்னையில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம்!
இந்தோ-சரசெனிக் கட்டடக்கலை என்பது 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (குறிப்பாக 1850-1910 க்கு இடைப்பட்ட காலத்தில்) பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது இந்தியாவில் உருவான ஒரு தனித்துவமான கலப்பு கட்டடக்கலை பாணி ஆகும். இது முகலாய கட்டடக்கலை, பிரிட்டிஷ் கோதிக் மற்றும் நியோ-கிளாசிக்கல் என பல்வேறு கட்டடக்கலை அம்சங்களுடன் இணைத்து உருவாக்கப்பட்டது.
1857ஆம் ஆண்டு – முதல் சிப்பாய்க் கலகத்துக்குப் பிறகு, பிரிட்டிஷார் தங்கள் ஆட்சியை இந்தியர்கள் ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால், பழைய இந்திய கட்டடக்கலையை (முகலாய, ராஜபுத், தென்னிந்திய) பயன்படுத்தி, தங்கள் ஆட்சியை “இந்தியாவின் தொடர்ச்சி” போலக் காட்ட முயன்றனர். இது “ஓரியண்டலிசம்” (Orientalism) என்று அழைக்கப்படும் கருத்தியலின் வெளிப்பாடு.
இந்தோ-சரசெனிக் கட்டடங்களில் பொதுவாகக் காணப்படும் சிறப்பியல்புகள்:வெங்காய வடிவ குவிமாடங்கள் (Onion/Bulbous domes) கூர்மையான வளைவுகள் (Pointed arches, horseshoe arches) மினார்கள் போன்ற கோபுரங்கள் (Minarets, towers)ஜாலி (Jali – சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கல் ஜன்னல்கள்) சாய்வான சாளரங்கள் (Chhajja – overhanging eaves) திறந்த மண்டபங்கள் (Open pavilions) செங்கல் மற்றும் சுண்ணாம்பு பயன்பாடு, சிவப்பு-வெள்ளை வண்ணங்கள் கோதிக் அம்சங்கள்: ஸ்டெய்ன்ட் கிளாஸ் ஜன்னல்கள், வளைந்த கூரைகள் இக்கட்டடத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
இந்தப் பாணியில் கட்டப்பட்ட சில மிகச் சிறந்த கட்டடங்கள்: சென்னை பல்கலைக்கழக செனட் ஹவுஸ், சென்னை உயர்நீதிமன்றம். இது இந்தியாவிலேயே மிகப்பெரிய நீதிமன்ற கட்டடங்களில் ஒன்றாகும்.
