உணவு வழங்கல் துறை இயக்குநர் உத்தரவு
வேலூர், டிச.26- கைரேகை, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் வழங்க இயலாத மூத்த குடிமக்களுக்கு கையொப்பம் வாங்கி ரேசன் பொருட்கள் வழங்க வேண்டும் என்று உணவு வழங்கல் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
உணவுப் பொருட்கள்
தமிழ்நாட்டில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகள் உள்ளன. இக்கடைகள் மூலம் 2.26 கோடி ரேசன் கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகிறது. இதில் 98.45 லட்சம் முன்னுரிமை பிஎச்எச் ரேசன் கார்டுகளில் 3 கோடி உறுப்பினர்களும், 18.64 லட்சம் அந்தியோதயா ஏஏஒய் ரேசன் கார்டுகளில் 62.88 லட்சம் பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த இரண்டு பிரிவினருக்குமான அரிசி ஒதுக்கீட்டில், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கோதுமையை ஒன்றிய அரசு தேசிய ஒதுக்கீட்டின் கீழ் இலவசமாக வழங்குகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே ரேசன் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யும் தாய்மானவர் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி ரேசன் கடைஊழியர்கள் வீடுகளுக்கு சென்று, அட்டைதாரரின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வழங்குகின்றனர். தொலைதொடர்பு சிக்னல் பிரச்சினையால், கைரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு செய்ய முடிவதில்லை. இதனால் பொருட்கள் வழங்கப்படாமல் ரேசன் அட்டைதாரர்களை அலைக்கழிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கையொப்பம்
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குநர் சிவராசு, அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று குடிமைப்பொருட்களை விநியோகம் செய்யப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தின் கீழ் நியாய விலை, அங்காடி பணியாளர்கள் பொது விநியோகத் திட்டப் பொருட்களை பயனாளர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கை ரேகை சரிபார்ப்பு முறை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பட்டியலிட முடியாததால் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படாமல் அலைக்கழிப்பதாக மாவட்டங்களிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
எனவே இத்திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும்போது கைரேகை சரிபார்ப்பு முறை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு முறைகளில் வழங்க இயலாத நிலையில், ப்ராக்ஸி முறையில் பயனாளர்களுக்கு உரிய பதிவேட்டில் கையொப்பம் பெற்றுக்கொண்டு பொருட்களை வழங்க வேண்டும். இத்திட்டத்தின்கீழ் பயனாளர்களுக்கு எவ்வித சூழ்நிலையிலும் பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்காமல் அலைகழிக்கக் கூடாது என்பதை அனைத்து நியாய விலை அங்காடி பணியாளர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
ஒரே ஆண்டில் வாழ்க்கையே தலைகீழாக மாற்றம்
1 லட்சம் அய்.டி. ஊழியர்கள் வேலை நீக்கம்!
சென்னை, டிச.26- உலகம் முழுவதும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவினங்களைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 2025இல் மட்டும் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 1 லட்சம் அய்.டி. ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
இது தொழில்நுட்பத் துறையில் ஒரு பெரிய ஆட்குறைப்பு என்று அழைக்கப்படுகிறது. Layoffs.fyi என்ற இணையதளத்தின் தகவல்படி, 2025 ஆம் ஆண்டில் சுமார் 218 தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துள்ளன. இதன் விளைவாக, 1,12,732 தொழில்நுட்ப ஊழியர்கள் வேலை இழந்தனர்.
1 லட்சம் பேர் வேலை இழப்பு
பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்த ஆட்குறைப்புகளுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த மாற்றங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி மந்தநிலை போன்ற காரணங்களைக் கூறுகின்றன. அமேசான், இன்டெல் மற்றும் டிசிஎஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் உலகளவில் தகவல் தொழில்நுட்ப சேவைகள், ஆலோசனை மற்றும் உற்பத்தித் துறைகளில் ஆயிரக்கணக்கான வேலைகளைக் குறைத்துள்ளன.
பி.ஜே.பி.யின் புத்தாண்டு பரிசு
இன்று முதல் ரயில்வே கட்டணம் உயருகிறது
புதுடில்லி, டிச. 26- புத்தாண்டு நெருங்கும் வேளையில், இந்திய ரயில்வே நீண்ட தூர பயணங்களுக்கான கட்டணத்தை உயர்த்தி இன்று (26.12.2025) முதல் அமல்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு, ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புதிய கட்டண விவரங்கள் இதோ:
சாதாரண வகுப்பு: 215 கி.மீ-க்கு மேல் பயணம் செய்தால், ஒவ்வொரு கி.மீ-க்கும் 1 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்கள்: ஏசி (AC) மற்றும் ஏசி இல்லாத (Non-AC) பெட்டிகளில் பயணம் செய்ய கி.மீ-க்கு 2 பைசா கூடுதல் கட்டணம்.
500 கி.மீ தூரம் ஏசி இல்லாத பெட்டியில் பயணம் செய்ய இனி கூடுதலாக ரூ.10 வரை செலுத்த வேண்டியிருக்கும். புறநகர் ரயில்கள் (Suburban Trains): மின்சார ரயில்களின் கட்டணத்தில் மாற்றமில்லை.
சீசன் பயணச்சீட்டு: மாதாந்திர சீசன் பயணச் சீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை.
குறுகிய தூர பயணம்: சாதாரண வகுப்பில் 215 கி.மீ-க்கு குறைவான பயணங்களுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்.
