வழக்குரைஞர் சோ.சுரேஷ்
மாநில இளைஞரணி துணை செயலாளர்
திராவிடர் கழகம்
உலகம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, உடல் உழைப்பினை நம்பியே வாழும் மனித இனத்தின் உண்மையான ஓர் உற்சாக உள்ளக்களிப்பூட்டும் நாளென்றால் அது சமதர்ம நாளான மே தினம் மட்டுமே!
அந்த சுதந்திர நாளும் அவர்களுக்கு சாதாரணமாக கிட்டிடவில்லை. எண்ணற்ற போராட்டங்களும், பல உயிர்களையும் பலிகொண்டு தான் கிடைத்திருக்கிறது. மே 1 என்றால் ஒரு நாள் விடுமுறை என்று மட்டும் நினைத்துக் கொண்டிருக்கும் எண்ணற்றோருக்கு இந்த தொழிலாளத் தோழர்களின் ஈகை வரலாறு நீங்கா நினைவைப் போற்றிடட்டும்.
இந்தியாவில் ஆண்டாண்டு காலமாக ஒரு குலத்திற்கு ஒரு நீதி எனும் மனுவின் பெயராலும், ஜாதியின் பெயராலும் அடுக்குமுறை ஜாதி அடிப்படையில் பரம்பரை பரம்பரையாகவும், அடிமைகளாகவும் தொழிலாளர்களின் ரத்தத்தினை உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளின் ஆதிக்க சமூகம் இருந்து வந்தது. 18ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள பல்வேறு தீவுகளிலிருந்தும், பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட கைதிகள் மற்றும் அடிமைகளைக் கொண்டு கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தினர். இவர்கள் இரவு பகல் பாராது கடுமையான வேலைகளைச் செய்யப் பலவந்தப்படுத்தப்பட்டனர்! பலர் சரியான உணவின்மையாலும், ஓய்வின்மையாலும் மரணத்தைத் தழுவினர்.
தங்களைப் பாதுகாக்க யூனியன் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பத் துவங்கினர். தங்களுக்கென ஓர் அமைப்பை ஏற்படுத்த முயல்வதைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் அய்ரோப்பிய நாடுகளுடன் ஆலோசித்தது. ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு வந்தாலும் அவர்கள் கடுமையான சிறைத் தண்டனை அல்லது மிகக் கடுமையான வேலைகளைச் செய்யுமாறு வற்புறுத்தப்பட்டனர்.
1791ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் முதன் முதலாக மர வேலை செய்யும் தச்சர்கள் வேலை நேரத்தைப் பத்து மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என தங்கள் குரலை உயர்த்தினர். அதனைத் தொடர்ந்து 1810இல் சமூகவியலாளர் ராபர்ட் ஓவென் இங்கிலாந்தில் பத்து மணி நேர வேலைக்குக் குரல் கொடுத்தார்.
1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைத்துக் கொண்டிருந்தனர். பின்னாள்களில் இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834 களில் ஜனநாயகம் அல்லது மரணம் எனும் முழக்கத்தினை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆயினும் அவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்து போயின. அமெரிக்காவில் 1832இல் பாஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதே நேரத்தில் தி மாஸ்ட்டர் அன்ட் சர்வன்ட் என்ற சட்டத்தை ஆஸ்திரேலிய அரசாங்கம் பிரிட்டன் 1823ஆம் ஆண்டு இயற்றிய சட்டத்தைப் போலவே 1845இல் இயற்றி முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டது.
1848ஆம் ஆண்டு பிப்ரவரியில் வேலை நேரம் 12 மணி நேரமாகக் குறைக்கப்பட வேண்டும் என்று பிரெஞ்சுத் தொழிலாளர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிரான்சினைப் போன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரில் கட்டடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தான் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளர்கள் போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.
பென்சில்வேனி யாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது.
அமெரிக்காவில் 1890ஆம் ஆண்டில் 8 மணிநேரம் வேலை, 8 மணிநேரம் ஓய்வு, 8 மணிநேரம் உறக்கம் எனும் கோரிக்கையை வலியுறுத்தியும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கேட்டும் தொழிலாளர்கள் போராடினர். இந்தப் போராட்டத்தை எதிர்த்து அமெரிக்க அரசு ஈவிரக்கமற்ற தாக்குதலை நடத்தியது . ஏராளமான தொழிலாளர்கள் இதில் பலர் கொல்லப்பட்டனர்.
1886 மே மாதம் 1ஆம் தேதி அமெரிக்காவின் பல மாநிலங்களில் முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர் அமைப்புகள் ஒன்று பட்ட இயக்கமாக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை ஆங்காங்கே நடத்தின.
தொழிலாளர்கள் நியூயார்க் யூனியன் சதுக்கத்திலும், கென்டக்கியில் லூயிஸ்வில்லியிலும் மற்றும் பால்டிமோரில் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் சற்று வித்தியாசமாக அனைவரின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. வெள்ளையர் – கறுப்பர் என்ற பேதமின்றி ஒருங்கிணைந்து புரட்சிக் குரல் எழுப்பினர். மெய்னி முதல் டெக்சாஸ் வரையிலும், நியூஜெர்சியிலிருந்து அலபாமா வரையிலும் ஒருங்கிணைந்த தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல சிகாகோவில் ஹேய் மார்க்கெட் பகுதியில் 1886ஆம் ஆண்டு “மே” மாதம் 4ஆம் தேதி 90,000 தொழிலாளர்கள் “எட்டு மணி நேர வேலை” என்கிற பொது கோரிக்கைக்குப் பேரணி ஒன்றை இதற்கான ஏற்பாட்டை அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு செய்தது.
சிகாகோவின் அந்நாள் மேயரும் அந்தப் பேரணியில் கலந்து கொண்டார். பேரணி அமைதியாக நடந்து முடிந்து பொதுக்கூட்டம் ஹேய் மார்க்கெட்டில் நடந்து கொண்டிருந்த வேளையில் மேயர் பொதுக் கூட்ட மேடையை விட்டு வெளியேறியதும் அங்கிருந்த காவல் துறைத் தலைவர் கூட்டத்தைக் கலைக்கத் தடியடி – கண்ணீர் புகைக் குண்டுகளை வீச… தொழிலாளர் தரப்பிலிருந்த சிலர் காவல் துறையினரிடமிருந்த ஆபத்தான வெடி குண்டுகளைக் கைப்பற்றி ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டிருந்த காவலர்கள் மீதே வீச நூற்றுக்கணக்கான காவலர்கள் காயமுற, 66 காவலர்கள் உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்தனர். எண்ணற்ற தொழிலாளர்கள் காயமுற்றனர்.
கிட்டத்தட்ட காவலர்கள் அதிக அளவில் உயிரிழந்த தொழிலாளர் போராட்டமாய் அன்றைய தினம் அமைந்தது. தொழிலாளர்களின் மன உறுதி, போராட்ட வேகம் எத்தகையது என்பதைக் கொஞ்சம் கற்பனைக் கண் கொண்டு பார்க்க இயலும். காவலர்கள் களப்பலியானதும் காவலர்களின் சினம் முழுக்கத் தொழிலாளர்கள் மீது திரும்ப நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையான காயங்களோடும், ஏழு தொழிலாளர்கள் இறக்கவும் நேரிட்டது. இல்லி நாய்ஸ் ஆளுநர் ஜான் கடுமையான விசாரணைக்கு உத்தரவிட்டார். அரசு ஏராளமான தொழிலாளர்கள் மீது வழக்குத் தொடுத்தது. இதன் மூலம் தொழிற்சங்க அமைப்பை நசுக்கிடத் திட்டமிட்டது அரசு. ஆனால் நடந்தது வேறு.
சிகாகோவில் நடைபெற்ற கலகம் உலகம் முழுக்க உள்ள தொழிலாளர்களைக் கொதித்தெழ வைத்தது. இங்கிலாந்து, ஹாலந்து, ரஷ்யா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாட்டுத் தொழிலாளர்களின் கடும் கண்டனத்தைப் பெற்றதோடு சிகாகோ கலகத்திற்குக் காரணமான இல்லிநாய்ஸ் மாநில அரசினைக் கண்டித்து கண்டன ஊர்வலங்களை நடத்தினர்.
உலகெங்கும் தொழிலாளர் அமைப்புகள் உருவாகவும், உலகலாவிய பேரியக்கமாக மலரவும் சிகாகோ கலகம் காரணமாகிப் போனது.
அன்றைய ஜெர்மானியப் பிரதமர் பிஸ்மார்க்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நேசக்கரம் நீட்டியதும் தொழிலாளர் வரலாற்றில் மிக முக்கியமாய் குறிப்பிடத்தக்கது.தொழிலாளர் ஒற்றுமையும், தொழிலாளர் இயக்க வலிமையும் இறுதியில் “எட்டு மணி நேர வேலை” என்ற அரசின் அங்கீகாரத்தை வென்றெடுத்தன. தொழிலாளர் வர்க்கத்தின் கனவு நனவானது 1888ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதியாகும். முதலில் அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் கிடைத்த அங்கீகாரம் படிப்படியாக ஒவ்வொரு நாடும் பெறக் காரணமாய் அமைந்தது.
மே தினத்திற்காக லெனின் எழுதிய சிறு வெளியீட்டில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் – அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் “பன்னாட்டு தொழிலாளர் நாடாளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
1891ஆம் ஆண்டு மே1ஆம் தேதி முதன் முதலாக ரஷ்யா, பிரேசில் மற்றும் அயர்லாந்தில் “மே” தினத்தைக் கொண்டாடினர். சீனாவில் 1920இல் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் சென்னை மாநகரில் 1923-ஆம் ஆண்டில் மெரினா கடற்கரை மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும், தலைசிறந்தசீர்திருத்தவாதியுமான ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள மெரினா கடற்கரையில், இந்தியாவின் முதல் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. 14.05.1933 அன்று ‘குடிஅரசு’ இதழில் தந்தை பெரியார் அவர்கள் சமதர்ம நாளாகிய மே தினத்தில் சுயமரியாதைச் சமதர்ம சபைகள் யாவும் , சமதர்ம கொள்கைகளை ஏற்றுக் கொண்ட சங்கங்கள் யாவும் அத்தினத்தைப் “பெருந்தினமாக கொள்ளல் மிக்க நலமாகும்” என்று அறிவித்தார். தொழிலாளர்களைப் போற்றும் விதமாக நினைவுச் சின்னத்தினையும், இந்தியாவிலேயே மே தினத்திற்கு முதன் முதலாக விடுமுறை அளித்ததும், தொழிலாளர் தினத்தினை பெருமைப்படுத்தும் விதமாக மே’தினப் பூங்காவையும் ஏற்படுத்தியிருக்கிறது தமிழ்நாடு அரசு. பின்னர் 1990ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுமைக்கும் மே தினம் விடுமுறை நடைமுறையில் இருந்து வருகிறது. சமதர்ம நாளினை விடுமுறையாக கழித்திடாமல் தொழிலாளர்களின் தியாகத்தினையும், அவர்களது போராட்ட வரலாறுகளையும் அசைபோட்டு உழைப்பாளர்களின் ஒற்றுமை உணர்வினைப் பெறுவோம்,
90 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் திட்டக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டமானது இரண்டு நாளில் நான்கு தடவை கூடி சுமார் 20 மணி நேரம் நடந்தது. பல விஷயங்களைப் பற்றியும் பலமான வாக்குவாதங்களும் நடந்தன என்றாலும் முடிவில் ஏகமனதாகவே பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதில் எந்த ஒரு “தொழிலாளியும் 7 மணி நேரத்திற்கு மேலாக வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது “சுயமரியாதை இயக்கத்தின் லட்சியம்” என்றாலும், “சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையாக” கொண்டது.