சென்னை, டிச. 24- திருநெல்வேலி: தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்து உடலுறுப்புகளைக் கொடையாக வழங்கியவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், இதுவரை 591 பேருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஹ.பிரின்ங்லின் (50) என்பவரது உடலுறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டன. அவரது உடலுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று, தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி, உடலுறுப்பு கொடையாளர்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி: மொத்த பயனாளிகள்: செப்டம்பர் 23, 2023 முதல் இதுவரை 591 பேருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 259 கொடையாளர்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த நடைமுறை மிகச்சிறப்பாகப் பின்பற்றப்பட்டு வருவதால், உடலுறுப்புக் கொடை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
விடுமுறை நாட்களில்
மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
கல்வித் துறை அறிவுறுத்தல்
கல்வித் துறை அறிவுறுத்தல்
சென்னை, டிச. 24- தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு விடுமுறை இன்று (டிசம்பர் 24) முதல் தொடங்குகிறது. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.
பள்ளி விடுமுறை
தமிழ்நாடு பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கின. தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், 24.12.2025 முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விடுமுறை காலத்தைப் பயனுள்ளதாகவும் பாதுகாப்பாகவும் கழிக்கச் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்:
சிறப்பு வகுப்புகளுக்குத் தடை: விடுமுறை நாட்களில் எந்தக் காரணத்தைக் கொண்டும் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது.
பாதுகாப்பு எச்சரிக்கை: நீர்நிலைகளான கடல், ஆறு, ஏரி மற்றும் குளங்களில் மாணவர்கள் குளிக்கச் செல்வதைப் பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. திறன் மேம்பாடு: இசை, நடனம், ஓவியம் போன்ற கலைகளில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு, அவற்றை விடுமுறை நாட்களில் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும்.
ஊட்டச்சத்து மற்றும் கலாச்சாரம்: மாணவர்களுக்குச் சத்தான உணவுகளை வழங்கு வதுடன், தாத்தா – பாட்டியுடன் இணைந்து உண வருந்துதல் போன்ற குடும்ப உறவுகளை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபட ஊக்கப்படுத்த வேண்டும். இந்த அறிவுறுத்தல்களைப் பெற்றோர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லுமாறு அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள்
பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு
ஜனவரி 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சென்னை, டிச.24- 2025-2026ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வில் (General Counselling) கலந்துகொள்ள 05.01.2026 வரை விண்ணப்பிக்கலாம் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் அறிவித்துள்ளனர்.
உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலன் கருதி 2025-2026ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்விற்கு (General Counselling) இணையவழியில் இன்று 24.12.2025 முதல் 05.01.2026 வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலன் கருதி 2025-2026ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல், கல்வியியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள். தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு 2025-2026ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்விற்கு (General Counselling) (24.12.2025) 05.01.2026 வரை இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.
இந்த பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் www.dcetransfer.in மற்றும் www.nonteaching.dcetransfer.in என்ற இணையதள முகவரியிலும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் www.tndotetransfer.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
