புரட்சிக் கவிஞர் பெரியார் மேல் கொண்டிருந்த தாளாப் பற்றைத் தமிழகம் அறியாததல்ல.
“மக்கள் நெஞ்சின் மலிவுப் பதிப்பு
வஞ்சகர்க்கோ கொடிய நெருப்பு
மிக்க பண்பின் குடியிருப்பு
விடுதலைப் பெரும் படையின் தொகுப்பு
தமிழர் தவம்கொடுத்த நன்கொடை
தன்மானம் பாயும் தலை மேடை
நமக்குத் தாண்டி அந்த வாட்படை
நமைஅவரின் போருக்கு ஒப்படை”
பெரியார் குறித்துப் புரட்சிக் கவிஞர் தீட்டியுள்ள இந்தப் பாட்டோவியம் எக்காலத்திற்கும் பொருந்துவதாகும்.
1908ஆம் ஆண்டு நடந்த புலவர் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராய்த் தேர்ச்சி பெற்றவர் அன்றைய கனக சுப்புரத்தினம். மயிலம் சிறீ ஷண்முகன் வண்ணப்பாட்டும், மயிலம் சுப்பிரமணியர் துதியமுதும் பாடிக்கொண்டிருந்த கனக சுப்புரத்தினம், அதே ஆண்டில் புதுவை வேணு நாய்க்கர் வீட்டுத் திருமண நிகழ்வு ஒன்றில் முதன்முதலாய்ப் பாரதியாரைச் சந்திக்கிறார். பின்னர் அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு அவருக்கு ஏற்படுகிறது. பாரதியால் தான்பெற்ற பயன்பற்றிப் பாரதிதாசன் எழுதினாலும் புரட்சிக் கவிஞரை புதுநெறி காட்டிய புலவராய்த் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியது சுயமரியாதை இயக்கந்தான்.
1928ஆம் ஆண்டுதான் அவருக்கும் பெரியாருக்குமான தொடர்பு அரும்புகிறது. அன்று தொட்டு 1964 வரை, அதாவது 36 ஆண்டுக்காலம் பகுத்தறிவியக்கப் புயலாய் திகழ்ந்தார். அவருக்கும் பெரியாருக்கும், அவருக்கும் சுயமரியாதை இயக்கத்திற்கும் அறுபட முடியாத ஓர் உறவுப் பாலத்தைக் காலம் தன்போக்கில் கட்டி அமைத்தது. அது வரலாற்றில் ஓர் இன்றியமையாத் தேவையாகவும் அமைந்து போயிற்று.
1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தந்தை பெரியார் ‘தமிழ்நாடு தமிழர்க்கே!’ என்ற முழக்கத்தைத்தான் முன்வைத்தார்.
பெரியாரின் தொடர்பு ஏற்பட்ட காலம் முதல் புரட்சிக் கவிஞர் ‘குடிஅரசு’, ‘பகுத்தறிவு’ போன்ற ஏடுகளில் இடைவிடாமல் எழுதிவந்தார். 1938இல் குத்தூசி குருசாமி – குஞ்சிதம் அம்மையாரின் முயற்சியால் ‘பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி’ வெளி வருகிறது. முதல் தொகுதியில் இடம்பெற்றுள்ள பெரும் பாலான படைப்புகள் தமிழின் இனிமை, தமிழ்மொழி யின் மேன்மை, தமிழ் வளர்ச்சி, தமிழர் முன்னேற் றம், மூடத்திருமணம், கைம்மைக் கொடுமை, பெண்ணுக்கு நீதி, தொழிலாளர் விண்ணப்பம், புதிய உலகு செய்வோம் போன்ற பல்வேறு பாடுபொருள்களைக் கொண்டவை.
1949ஆம் ஆண்டு பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி வெளிவந்தது. இந்நூலின் முதல் பாடலே, ‘வாழ்க வாழ்கவே – வளமார் எமது திராவிட நாடு வாழ்க வாழ்கவே’ என்னும் ‘திரா விட நாட்டுப் பண்ணோடு’ தான் தொடங்குகிறது.
“செந்தமிழர் உன்நாட்டின் பேரென்ன செப்பென்றேன்
இந்தியா என்றே இளிக்கின்றான் என்தாயே
பைந்தமிழ் நாட்டினையும் பாரதம் என்று சொல்வான்
எந்த வகையில் இச்சேய் உருப்படுவான் என்தாயே!”
என்று எழுதிய புரட்சிக் கவிஞர்.
“‘இனப்பேர் என்’என்று பிறன்எனைக் கேட்டால்
மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்
‘நான்தான் திராவிடன்’ என்று நவில்கையில்
தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்”
என்று மகிழ்ச்சி மீதூரக் கூவுவார்.
“சீர்த்தியால், அறத்தால், செழுமையால், வையப்
போர்த்தி றத்தால் இயற்கை புனைந்த
ஓருயிர் நான், என் உயிர்இனம் திராவிடம்
ஆரியன் அல்லேன் என்னும் போதில்
எத்தனை மகிழ்ச்சி எத்தனை மகிழ்ச்சி
விரிந்த வரலாற்றுப் பெருமரம் கொண்ட
‘திராவிடன்’ ஆலின் சிறிய வித்தே”
(பாரதிதாசன் கவிதைகள், தொகுதி-2) என்பார் புரட்சிக் கவிஞர்
‘ஆரியம்’ என்கிற நச்சுப் பார்ப்பனியக் கருத்தியலுக்கு எதிராக முன் நிறுத்தப்பட்ட கலகச் சொல்தான் திராவிடம். ஆரிய எதிர்ப்பு, வடமொழி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, வருணாசிரம ஜாதி எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு போன்றவற்றின் குறியீட்டுச் சொல்தான் திராவிடம்.
எனவேதான், அரசியல் வழி திராவிட நாட்டுக் கொள்கையை முன்நிறுத்திய தந்தை பெரியாரைப் பின்பற்றிப் புரட்சிக் கவிஞர் திராவிட நாட்டைப் பாடினார்; திராவிட நாட்டுக் கொடிக்கு வணக்கம் செய்தார்.
“வானில் உயர்ந்த திராவிட நாட்டு
மணிக்கொடி தன்னை வணங்குவோம்
ஊனுடைமை உயிர் யாவும் திராவிடர்
மானத்தைக் காப்பதற் கல்லவோ?
ஆனதைப் பார்க்கட்டும் ஆளவந்தார் – அவர்
ஆர்ப்பாட்டங்கள் நமை வெல்லுமோ?
திண்மையும் உண்மையும் வண்மையும் கொண்ட
திராவிடர் மாக்கொடி வாழ்கவே
ஒண்சுடர் வான்நிலை உள்ளளவும் புகழ்
ஓங்கித் திராவிடம் வாழ்கவே”
– குயில் 1-10-1947
“திராவிடம் என்று செப்பியதேன் எனில்
திருத்தமிழம் எனும் செந்தமிழ்ப் பெயரை
வடவர் திரமிளம் என்று வழங்கினர்
திரமிளம் பிறகு திராவிடம் ஆனது
வேட்டியை வடவர் வேஷ்டி எனினும்,அவ்
வேட்டி திரிந்த வேஷ்டியும் தமிழே
அதுபோல், திருத்தமிழகத்தைத் திராவிடம் என்றால்
இரண்டும் தமிழே என்பதில் அய்யமேன்?”
– குயில் 1-7-1947
பெரியார் பாசறையின் பாட்டு முரசம் பாரதிதாசன். அவரின் இடி முழக்கப் பேச்சுகளையும் எழுத்துகளையும் அப்படியே வெடிமருந்துப் பாக்களாய் வெளிப்படுத்தியவர் புரட்சிக் கவிஞர். பெரியாரைத் தம் வாழ்வின் தனிப்பெருந் தலைவராய் ஏற்றுக் கொண்டவர் புரட்சிக் கவிஞர்.
பயிர்போன்றார் உழவர்க்குப்! பால் போன்றார்
குழந்தைகட்குப் பசும் பாற்கட்டித்
தயிர் போன்றார் பசித்தவர்க்குத்! தாய் போன்றார்
ஏழையர்க்குத்! தகுந்த வாக்குச்
செயிர் தீர்ந்த தவம் போன்றார், செந்தமிழ் நாட்டிற்
பிறந்த மக்கட் கெல்லாம்
உயிர்போன்றார்! இங்கு வந்தார், யாம்கண்ட
மகிழ்ச்சிக்கோர் உவமை உண்டோ?
என்று பொதுவாழ்வில் பெரியார் வரவை எண்ணி மகிழ்ச்சிக் கூத்தாடியவர் பாரதிதாசன். 1956-க்குப் பின், திராவிட நாட்டுக் கொள்கையைக் கைவிட்டு, தனித் தமிழ் நாட்டுக் கொள்கையைப் பெரியார் உயர்த்திப் பிடித்த போது, அவரின் படையணியின் முதல்வரிசை வீரனாய் நின்றவர் அவரே! 1956ஆம் ஆண்டுக் குப் பிறகு அவர் எழுதிய பெரும்பான்மையான பாடல் கள் தமிழ்நாட்டு விடுதலையை முன்னி றுத்தியவையே ஆகும்.
“கேரளம் என்று பிரிப்பதுவும் – நாம்
கேடுற ஆந்திரம் பிய்ப்பதுவும்
சேரும் திராவிடர் சேரா தழித்திடச்
செய்திடும் சூழ்ச்சி அண்ணே – அதைக்
கொய்திட வேண்டும் அண்ணே!”
திராவிட நாட்டுக்கு ஆதரவாக எழுதப்பட்ட இப் பாடல் 1949ஆம் ஆண்டு வெளிவந்த பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுப்பில் இடம் பெற்ற படைப்பாகும்.
“தமிழர்க்குத் தமிழே தாய்மொழி என்றோம்
தமிழகம் தமிழர்க்குத் தாயகம் என்றோம்
தமிழ்நாட்டில் அயலார்க் இனி என்ன வேலை
தாவும் புலிக்கொரு நாய் எந்த மூலை
அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க – மற்
றயல் நாட்டைச் சுரண்டுதல் அடியோடு வீழ்க
துவளாத வாழ்க்கை உலகமெலாம் சூழ்க!
தூக்கிய கைகள் அறம் நோக்கித் தாழ்க!”
இப்பாடல் 4.11.1958 அன்று ‘குயில்’ ஏட்டில் இடம் பெற்றது.
திராவிடம் பற்றிய கருத்தோட்டத்திலும், தனித்தமிழ் நாட்டுக் கொள்கை நிலைப்பாட்டிலும் புரட்சிக் கவிஞர் வாழ்நாள் முழுவதும் பெரியாருடன் இணைந்து பயணித்தார்.
வாழ்க புரட்சிக் கவிஞர்!
தகவல்: சரவண ராசேந்திரன்