புதுடில்லி, டிச.22- ஊரக வேலைத்திட்ட புதிய சட்டத்தை நிறைவேற்றிய ஒன்றிய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் காந்தியார் பெயரில் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றி, அதற்கு பதிலாக ‘வி.பி. ஜி ராம் ஜி’ என்ற 125 நாள் வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தை ஒன்றிய அரசு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றியது. இதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று (21.12.2025) ஒரு காணொலிப் பதிவை வெளியிட்டார்.
போராட்டம்
அதில் அவர்,” கிராமப்புற ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இந்த திட்டம் வேண்டுமென்றே பலவீனப் படுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தை மோடி அரசு முற்றிலுமாக ஒழித்துவிட்டது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தின் ஒருமித்த கருத்துடன் இயற்றப்பட்டது. கோடிக்கணக்கான கிராமப்புற குடும் பங்களுக்கு, குறிப்பாக ஏழைகள், ஓரங் கட்டப்பட்ட மற்றும் சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு வேலை வாய்ப்பு மற்றும் கண்ணியத்தை வழங்கும் ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாக அது இருந்தது.
அந்த சட்டம் கிராமப்புற குடும்பங் களுக்கு வேலைவாய்ப்பை பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையை வழங்கியது. மக்கள் தங்கள் சொந்த கிராமங்களில் வாழ்வாதாரத்தை ஈட்ட உதவுவதன் மூலம் துன்பகரமான இடம்பெயர்வைத் தடுக்க உதவியது. மேலும் காந்தியாரின் கிராம சுயராஜ்ஜியக் கண்ணோட்டத்தை நனவாக்குவதற்கான ஒரு உறுதியான படியாக மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டம்” இருந்தது.
ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக, கிராமப்புற வேலையற்றோர், ஏழைகள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் நலன்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தன. கரோனா காலத்தில் பல லட்சக் கணக்கானவர்களுக்கு உயிர்நாடியாக இருந்தது. ஆனால் சமீபத்தில் அந்த திட்டத்தை புல்டோசர் கொண்டு தாக்கி விட்டது மோடி அரசு.
காந்தியார் சட்டத்தின் கட்டமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்கள் பற்றி எதிர்க்கட்சிகளிடம் கலந்துரையாடல் நடத்தப்படவில்லை. காந்தியாரின் பெயர் கூட இந்த திட்டத்திலிருந்து நீக்கப் பட்டுள்ளது. யாருக்கு வேலை, எங்கே, எப்படி? என்பது குறித்த முடிவுகள் இனி டில்லியில் இருந்துதான் எடுக்கப்படும்.
“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை”க் கொண்டு வந்து செயல்படுத்தியதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்தாலும், இந்த திட்டம் ஒருபோதும் எந்தவொரு கட்சியை பற்றியதாகவும் இல்லை. மாறாக தேசிய மற்றும் பொது நலனைப் பற்றியதாகவே இருந்தது. தற்போது அந்த சட்டத்தை பலவீனப்படுத்தி இருப்பது, கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நிலமற்ற கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதலுக்குச் சமம்” என்றார்.
மேலும், இந்த புதிய சட்டத்தை “கருப்புச் சட்டம்” என அழைத்த அவர், அதனை எதிர்த்து போராடுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்களும், லட்சக்கணக்கான தொண்டர்களும் உறுதுணையாக நிற்பதாகவும் கூறினார். ஏற்கனவே இந்த விவகாரத்தை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதனை ஏற்று தற்போது சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
