கட்டாக், டிச. 21– ஒடிசா மாநிலத்தில் 187 ஊர்க்காவல் பணியிடத்திற்கு நடந்த தேர்வில் கலந்துகொள்ள 8000 முதுநிலைப் பட்ட தாரிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அவர்களை ஜமாலியாப்பூர் விமான ஓடுபாதையிலேயே அமர வைத்து தேர்வெழுத வைத்தது ஒடிசா அரசு நிர்வாகம்.
வேலையின்மை கொடுமையை மற்றும் இளைஞர்களைக் கடுங் குளிரில் வெட்டவெளியில் அமர வைத்து தேர்வெழுதக் கூறியதன் மூலம் அம்மாநில பாஜக அரசின் நிர்வாக திறமையின்மையை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
ஒடிசா மாநிலம் உருவான பிறகு முதல் முதலாக 2024ஆம் ஆண்டு அங்கு பாஜக ஆட்சியைப் பிடித்தது. அன்றுமுதலே நிர்வாகம் முடங்கிவிட்டதாக மேனாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் கூறி வந்தார்.
இந்த நிலையில் எழுதப் படிக்கத் தேவையான எழுத்தறிவு 5ஆம் வகுப்பு கல்வித் தகுதி மட்டுமே கொண்ட ஊர்க்காவல் படைவீரர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியானது சம்பல்பூர் மாவட்டத்தில் வெறும் 187 ஊர்க்காவல் படை வீரர்களுக்கான அறிவிப்பு வெளியாகி டிச. 19ஆம் தேதி தேர்வு அறிவிப்பு வெளியானது.
தேர்தல் அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேர்வெழுத ஆயிரக் கணக்கான மாணவர்கள் சேர்ந்துகொண்டே இருந்தனர்
இவ்வளவு பேருக்கு தேர்வெழுத இட வசதி இல்லாத காரணத்தால் அருகில் உள்ள கை விடப்பட்ட விமான நிலைய ஓடுபாதையில் தேர்வெழுத ஆட்சியர் உத்தரவிட்டார். இதனை அடுத்து விமான நிலைய ஓடுபாதையில் அத்தனை பேரும் வரிசையாக அமர வைக்கப்பட்டனர்.
இப்போது வட இந்தியா முழுவதும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்தக்குளிரில் வெட்டவெளியில் அமரவைத்து தேர்வெழுத உத்தரவிட்ட ஆளும் பாஜகவிற்கு காங்கிரஸ் மற்றும் நவீன் பட் நாயக்கின் கட்சியான பிஜு ஜனதாதளம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
