தற்போது வட இந்தியாவில் பால் பல் விழாத சிண்டு சிறுசுகளும் ‘கதாவாச்சக்’ (பகவத கதை) சொல்ல வந்துவிட்டார்கள்
அப்படி ஒருவர்தான் இந்த ‘பால் கோபிகானந்தா’. இவர் இந்தூரில் நடந்த கதாவாச்சக் நிகழ்ச்சியில் பேசும் போது, “வெங்காயம், பூண்டு சாப்பிட்டால் கிருஷ்ணனுக்குப் பிடிக்காது.” அதனால் வெங்காயம் பூண்டு சாப்பிடுபவர்கள் கடவுளை விட்டு விலக வேண்டும்” என்ற பேச்சு சமூக வலைதளங்களில் கேலிக்கும் விவாதத்திற்கும் உள்ளாகியுள்ளது.
அறிவியலும் பகுத்தறிவும் வளர்ந்த இந்த நூற்றாண்டில், மிகச் சாதாரண உணவு வாசனையை வைத்து ஒருவரின் பக்தியைத் தீர்மானிப்பது என்பது ஆன்மிகத்தை அறியாமையின் இருப்பிடமாக மாற்றுவதாகும்.
உணவு என்பது அந்தந்த நிலப்பரப்பு, ஆரோக்கியம் மற்றும் தனிமனித விருப்பம் சார்ந்தது. வெங்காயமும், பூண்டும் மருத்துவ குணங்கள் கொண்ட தாவரங்கள். அவற்றின் வாசனை சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் அந்த வாசனையாலேயே கடவுள் ஒருவரை விட்டு ஓடிவிடுவார் என்று கூறினால், அந்த வெங்காயத்தையும், பூண்டையும் கடவுள் படைக்கவில்லையா என்று கேட்க மாட்டார்களா?
வாசனைக்கும் – கடவுளுக்கும் என்ன தொடர்பு? ‘உள்ளத்தின் தூய்மையே பக்தி’ என்று சொல்கிறார்கள். ஆனால், உடல் வாசனைக்கு முக்கியத்துவம் தருவது மேலோட்டமான வாதம்.
பயம் கலந்த பக்தி: “இதைச் செய்யாவிட்டால் கடவுள் உன்னை விட்டுவிடுவார்” என்று மிரட்டுவது பக்தியல்ல; அது மக்களின் அறியாமையைப் பயன்படுத்திச் செய்யப்படும் மனரீதியான அடக்குமுறை ஒரு வகையான ஏமாற்றல் முறை!
இளம் வயதிலேயே சொற்பொழிவாற்ற வருபவர்களுக்குப் புராணக் கதைகளைத் தாண்டி, சமூகம் மற்றும் அறிவியல் குறித்த தேடல் இருக்க வேண்டும். பக்தி என்ற பெயரில் சிறு பிள்ளைகளின் மனதில் உணவுப் பாகுபாட்டையும், தேவையற்ற பயத்தையும் விதைப்பது ஆரோக்கியமான சமூகம் உருவாக எப்போதும் தடையாகத்தான் இருக்கும்.
“கிருஷ்ணனுக்குப் பிடிக்காது” என்று ஒரு தனிமனிதர் எப்படித் தீர்மானிக்க முடியும்? இது போன்ற கூற்றுகள் அனைத்தும் தனிநபர்களின் கற்பனையே தவிர, இதற்கும் இறைமைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
பூண்டையும் வெங்காயத்தையும் விட மனதின் பொறாமையும், வெறுப்புமே அதிக துர்நாற்றம் வீசுபவை. ஒரு கதாவாசகர் மக்களின் மனதில் அன்பு, சமத்துவம் மற்றும் மனிதாபிமானத்தை விதைக்க வேண்டுமே தவிர, வெங்காய வாசனையை வைத்து ஆன்மிகப் பட்டியல் போடக்கூடாது. இதுபோன்ற மூடநம்பிக்கைகளைத் தகர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
கன்னட கலாச்சாரம் மற்றும் உணவு முறையில் பூண்டு மற்றும் வெங்காயம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. அங்கு லிங்காயத்துகள் பூண்டை சாமிக்குப் படைப்பார்கள். அங்கேயும் சைவ, வைணவ சண்டை உள்ளது. ஆகையால் தான் கருநாடகத்தில் உள்ள மத்வ வைணவப் பார்ப்பனர்கள், பூண்டு மற்றும் வெங்காயத்தைத் தவிர்க்கின்றனர். அதாவது இரண்டு வழிபாட்டுப்பிரிவினருக்கு இடையே உள்ள போட்டி, பொறாமையின் காரணமாக இவர்கள் பூண்டு வெங்காயம் தவிர்ப்பார்களாம்
சீனாவில் 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் பார்வை இழந்த தனது தங்கைக்காக விரல் நுனியில் பார்வை நரம்பை கொண்டுவந்து எங்கு எங்கு கைகள் தொடுகிறதோ அது என்ன என்று உணரும் கருவி ஒன்றை கண்டுபிடித்துவிட்டார்.
ஆனால் இங்கோ, “வெங்காயம், பூண்டு சாப்பிடுபவர்களை சாமிக்குப் பிடிக்காது” என்று குழந்தையை வைத்து பேசச் சொல்லி பணம் பார்க்கிறார்கள். இந்தச் சிறுமியை (பால் கோபிகானந்தா) தமிழ்நாடு அழைத்து வந்து ‘திராவிட மாடல்’ பள்ளியில் சேர்த்து 6 விதவிதமாக சுவைமிகுந்த முட்டை சாப்பிட்டு மூளையை வளர்த்துக் கொள்ளட்டும்.
