“நிற்கையில் நிமிர்ந்து நில்!
நடப்பதில் மகிழ்ச்சி கொள்!”
என்னும் புரட்சிக்கவிஞரின் வரியை அடிக்கடி நினைவூட்டுவார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். யார் காலிலும் யாரும் விழுவதை அனுமதிக்க மாட்டார்கள் திராவிட இயக்கக் கொள்கையாளர்கள்.
‘மரியாதை என்ற பெயரில் ஒருவரைக் காலில் விழச் செய்வது தவறு’ என்று விழிப்பூட்டியது சுயமரியாதை இயக்கமே!
சுயமரியாதை இயக்கம் உருவாவதற்கு முன்பு தமிழ்நாட்டில், பெரியவர், சிறியவர் என்று பாராமல் பார்ப்பனர்களின் காலில் மற்றவர்கள் – குறிப்பாக உழைக்கும் மக்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்கள் – விழுந்து வணங்குவது வழக்கமாக இருந்தது. இது பிறப்பின் அடிப்படையில் ஒருவரை உயர்ந்தவராகவும், மற்றவரைத் தாழ்ந்தவராகவும் கருதும் பார்ப்பனியக் கட்டமைப்பின் வெளிப்பாடு; ஆன்மிகப் புனிதம் என்ற போர்வையில் மறைக்கப்பட்ட அடிமைத்தனம்.
தந்தை பெரியார் இதைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டினார்: “ஒரு மனிதன் மற்றொரு மனிதனைத் தன் காலில் விழச் செய்வது மனிதத்தன்மைக்கு மாறானது. சுயமரியாதை என்பது மனிதனின் பிறப்புரிமை.” 1920-களில் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் இந்தப் படிநிலை அமைப்பையே கேள்விக்குள்ளாக்கியது. சமத்துவம், சுயமரியாதை, சமூக நீதி ஆகியவை வெறும் கோஷங்கள் அல்ல; அவை அரசியல் இயக்கமாக வடிவம் பெற்றன.
தந்தை பெரியாரின் கருத்துகள் சட்டமாக…
1967-இல் அறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது வெறும் ஆட்சி மாற்றம் அல்ல. அது பல நூற்றாண்டுகளாக நிலைத்திருந்த சமூகப் படிநிலைகளை அசைத்த ஒரு புரட்சிகரத் தொடக்கம். அண்ணா கூறினார்: “எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது வெறும் பேச்சு அல்ல; அது ஒவ்வொரு மனிதனும் தன்மானத்துடன் வாழும் வாழ்வியல் முறை.”
இது அய்யாவின் கொள்கைப் பாசறைக்கான ஆட்சி என்பதற்கு ஒரு வரலாற்று நிகழ்வு சான்று: 137 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் அறிஞர் அண்ணா முதலமைச்சராக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றி பெற்ற பின் சென்னையில் கூட்டணிக் கட்சியின் எல்லாத் தலைவர்களையும் சந்தித்த போது, தேர்தல் வெற்றியின் மகிழ்ச்சியிலும் ஏதோ ஒரு ஏக்கம் அண்ணாவின் கண்களில் தெரிந்தது.
பட்டம் பெறும் மாணவன் தங்கப்பதக்கம் சூட்டிய போதும், கூட்டத்தில் தன் தாயைக் காணாமல் ஏக்கத்தோடு நிற்கும் நிலையில்தான் அண்ணா இருந்தார். “நம்மை உருவாக்கிய ஆசானை அவசியம் பார்த்து வாழ்த்துப் பெற வேண்டும்” என்ற ஏக்கம் அது.
அய்யாவைத் திருச்சியில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். காட்சிகள் மாறின. அந்தப் பாசப்பிணைப்பு அய்யாவின் கொள்கைப்பாசறை வழி ஆட்சியாக மாறியது.
சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் என எல்லாமே சட்டமாகின. காலில் விழுந்து நின்றவர்கள் அதிகாரத்தில் அமரத் தொடங்கினர். பின்னர் வந்த “அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற சீர்திருத்தத்தின் விதை அதுதான்.
சுயமரியாதை இயக்கம் வேரூன்றி ஆலமரமாய் நிமிர்ந்து நின்று, தனது கொள்கை வழி ஆட்சியின் மூலம் சட்டமாக்கி ஒழித்தது எதை? பிறப்பு அடிப்படையிலான ஆதிக்கம் மற்றும் அடிமைத்தனத்தை!
“நாங்கள் யாருக்கும் தாழ்ந்தவர்களும் அல்ல; யாருக்கும் மேலானவர்களும் அல்ல” என்ற எண்ணம் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
பழங்காலத் தமிழ் இலக்கியங்களும் இதை வலியுறுத்துகின்றன.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” – கணியன் பூங்குன்றனார்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” – திருவள்ளுவர்.
இந்த வரிகளுக்கு அரசியல் உயிர் கொடுத்ததுதான் சுயமரியாதை இயக்கமும், அதன் வழித்தோன்றலான திராவிட ஆட்சிகளும் பார்ப்பனர்களின் காலில் விழும் பழக்கம் மறைந்தது. ஒட்டுமொத்தத் தமிழ் சமூகம் நிமிர்ந்து நிற்கும் வளர்ச்சி ஆனது.
திராவிட இயக்கம் பார்ப்பன மேலாதிக்கத்தை அகற்றி, அனைவருக்கும் சுயமரியாதையை வழங்கியது.
