இந்தியாவில் உயர்கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதில் இருந்தே, கல்வி மீதான மாநிலங்களின் அதிகாரம் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. தற்போது ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள், குறிப்பாகப் பல்கலைக்கழகங்களின் சுயாட்சி மற்றும் மாநிலங்களின் கொள்கை முடிவுகளில் ஆளுநரின் தலையீடு போன்றவை உயர்கல்வித் துறையை முழுமையாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
‘விக்சித் பாரத் சிக்ஷா ஆதிக்சன்’ (விபிஎஸ்ஏ): அதிகாரக் குவிப்பு
யூஜிசி மற்றும் ஏஅய்சிடிஇ போன்ற அமைப்புகளை ஒன்றிணைத்து ‘விக்சித் பாரத் சிக்சா ஆதிக்சன்’ என்ற ஒற்றை அமைப்பை உருவாக்கும் முயற்சி, கல்வித்துறையில் மாநிலங்களின் பங்களிப்பை மேலும் முடக்கும் செயலாகக் கருதப்படுகிறது. இந்தத் தீர்மானம் தற்போது நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்வில் இருந்தாலும், இது நடைமுறைக்கு வரும்போது பல்கலைக்கழகங்களில் ஒன்றிய அரசின் நேரடி அஜெண்டாவை அமல்படுத்த வழிவகுக்கும்.
இட ஒதுக்கீட்டிற்கு வரும் ஆபத்து
தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சியில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் பிற்படுத்தப்பட்ட (பிசி) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட (எம்பிசி) மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு, ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வரும்போது 27 சதவீதமாகக் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. அதேநேரம், பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு திணிக்கப்படுவதால், காலம்காலமாகச் சமூக நீதியைப் பின்பற்றி வரும் தமிழ்நாட்டின் கல்விச் சமநிலை பாதிக்கப்படும்.
கல்விக் கட்டணமும் – நடுத்தர வர்க்கத்தின்
கனவு சிதையும்!
தமிழ்நாடு இன்று இந்தியாவின் கல்வி மய்யமாகத் திகழக் காரணம், இங்குள்ள குறைந்த கல்விக் கட்டணமே ஆகும்.
மாநிலக் கட்டுப்பாடு: அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கட்டணம் குறைவாக இருப்பதால், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கூட ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் கட்டணத்தை உயர்த்த முடியாத சூழல் உள்ளது.
ஒன்றியக் கணக்கீடு: ஒன்றிய அரசின் உயரதிகாரிகளின் ஊதிய விகிதத்தைக் கொண்டு கல்விக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டால், அது கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும்.
கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) பாதிப்பு: முதல் தலைமுறை பட்டதாரி சலுகை போன்ற மாநில அரசின் நலத்திட்டங்கள் இந்த மாற்றங்களால் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.
அண்டை மாநில மாணவர்களின் வருகையும், தரமான கல்வியும்!
சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆந்திரா, கேரளா மற்றும் வடமாநில மாணவர்கள் அதிகளவில் படிக்கின்றனர். அண்டை மாநிலங்களில் கல்விக் கட்டணம் மிக அதிகமாக இருப்பதும், தமிழ்நாட்டில் தரமான கல்வி மலிவான விலையில் கிடைப்பதும் இதற்குக் காரணம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளே இந்தக் கட்டணச் சமநிலையை (Market Balance) உறுதி செய்கின்றன.
‘புதுமைப்பெண்’ முதல் ‘தமிழ்ப் புதல்வன்’ வரை: மாநில அரசின் அரண்
தமிழ்நாடு அரசு உயர்கல்வியைப் பரவலாக்கப் பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது: பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம். புதுமைப்பெண் திட்டம் மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் மூலம் மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை. இத்தகைய திட்டங்கள் மூலம் ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்விக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால், கல்வி அதிகாரம் முழுமையாக ஒன்றியத்திடம் சென்றால், இத்தகைய பிரத்யேக மாநிலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் முட்டுக்கட்டைகள் ஏற்படலாம்.
எரிச்சலில் பார்ப்பனியம்
கலைஞரின் பள்ளி மாணவர்களுக்கான கட்டணமில்லா பேருந்துப்பயணம் நாடுகளைக் கடந்து சரித்திரம் படைத்துள்ளது. அன்று நகரங்களுக்குச் சென்று படித்தவர்கள் இன்று அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் கோலோச்சுகிறார்கள். இங்குதான் பார்ப்பனர்களுக்கு எரிச்சல்.
தான் படிக்கும் போது தனது வீட்டின் பின்னால் இருட்டிய பிறகு வந்து துணிவெளுக்க ஆடைகளை அள்ளிக்கொண்டும் போகும் குடும்பத்தைச் சேர்ந்தவன், இன்று அமெரிக்காவில் தனக்குச் சமமாக, சில நேரங்களில் தனக்கும் உயர் பதவியில் வந்து அமர்ந்து கொள்கிறானே என்ற எரிச்சல். இதற்குக் காரணமானது உயர்கல்வி; அதில் கை வைக்கவேண்டும் என்பதுதான் நீண்ட நாள் திட்டம். அதற்கான படிதான் பல்வேறு நெருக்கடிகள். இந்த நெருக்கடிகளைக் குறிப்பாகத் தமிழ்நாடு திராவிடக் கருத்தியலின் மய்யமாக உள்ளதால் இம்மண்ணிற்கே உரித்தான அறிவாற்றலைச் சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசு புதிய கல்விகொள்கையை உருவாக்கி உள்ளது.
பலர் புதிய கல்விக்கொள்கை என்பது பொதுவாக உருவாக்கப் பட்டது என்று கூறுவார்கள். ஆனால் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையைத் தயாரிக்க கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. டாக்டர் கே.ஜே.அல்போன்ஸ், டாக்டர் மஞ்சுள் பார்கவா, டாக்டர் ராமசங்கர் குரீல், டாக்டர் டி.வி.கட்டமணி, டாக்டர் கிருஷ்ணா மோகன், திரிபாதி டாக்டர் மஜார் ஆசிப், டாக்டர் எம்.கே.சிறீதர், ஜே.எஸ்.ராஜ்புத். இதில் மூன்றுபேரைத் தவிர்த்து மற்ற அனைவருமே பார்ப்பனர்கள். ஒருவர் உயர்ஜாதி. இவர்கள் யாருக்காகக் கொள்கைகளைத் தீட்டுவார்கள்.
எஸ்.கோபால்சாமி – இவர் இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) உருவாக்கத்திலும் பங்காற்றினார். அதில் சமஸ்கிருத மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று கூறி ஆணையம் அமைத்து அதன் தலைவராகவும் இருந்தார். இவர் கொடுத்த பரிந்துரையும் புதிய கல்விகொள்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது புதிய கல்விகொள்கையை உருவாக்க முக்கியத் தூண்களாக இருந்தவர்களில் இருவர் கஸ்தூரிரங்கன் – நெல்லையைச் சேர்ந்த பார்ப்பனர், எஸ்.கோபால்சாமி – திருவாரூரைச் சேர்ந்த பார்ப்பனர். இப்போது புரிகிறதா, புதிய கல்விகொள்கை எதனை மனதில் வைத்து உருவாக்கி உள்ளார்கள் என்று? ஆகையால் தான் சென்னை அய்.அய்.டி. ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
NEP 2020இன் (Multiple Entry-Exit) அமைப்பின் கீழ், பொறியியல் படிப்பில் 4 ஆண்டுகளுக்குப் பதில் 3 ஆண்டுகளில் வெளியேறினால் இளநிலை அறிவியல் (B.Sc.) பட்டம் வழங்கப்படும். இது B.Tech பட்டம் பெற்று உயர் தொழில்நுட்பத் துறைகளில், குறிப்பாக ஆய்வு மற்றும் பெரு நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்புகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதாவது பொறியியல் உயர் தொழில்நுட்பக் கல்வியைக் கற்று பல்வேறு துறைகளில் குறிப்பாக ஆய்வுத்துறையில் பெரு நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் வகையில் 4 ஆண்டுகள் படிக்கும் பொறியியல் தொழில் நுட்பப் பட்டத்திற்குப் (B.Tech.) பதில் 3 ஆண்டுகளில் வெளியேறினால் இளங்களை அறிவியல் (B.Sc.) பட்டம் தந்துவிடுவார்களாம்.
அதாவது. “பி.டெக் பட்டம் எல்லாம் வாங்கிகொண்டு எங்கவா பிள்ளைகளோடு சமமா அமெரிக்கா எல்லாம் போகாதடா அம்பி! பி.எஸ்சி. போதும் உனக்கு!” என்று மறைமுகமாக எச்சரிக்கும் வகையில் இந்த நடைமுறையை அய்.அய்.டி. சென்னை கொண்டுவந்துள்ளது.
