கண்காட்சிச் சாலைகளில், புதிய கற்பனைகள் பல மலர்ந்திருக்கும்; வாழ்க்கை வசதி மேம்பாட்டிற்கான பல புதிய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும்; பல நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட நுண்ணிய கருவிகள் கண்காட்சியில் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு துறையிலும் எழுத்து, இயந்திரம், கைத்தொழில், சித்திரம் ஆகிய சகல துறைகளிலும் அது பெரிய படிப்பினையாக அமைந்திருக்கும். கண்காட்சி சாலையில் ஒரு பக்கத்தில் நுழைந்து மறுபக்கத்தில் வெளிவதற்குள் ஒருவன் சகல துறைகளிலும் தன் அறிவை வளர்த்துக் கொண்டு விடுவானா? இல்லையா? அவன் உலகத்தின் முன்னேற்ற வளர்ச்சியைத் தன் கண்முன் கண்டு களித்துத் தெளிவு பெறுகிறான். பல ஆராய்ச்சி நுணுக்கங்களை அறியும் வாய்ப்புப் பெறுகிறான். பல அதிசய கருவிகளைக் கண்டு அக மகிழ்கிறான். சுருங்கக் கூறின் கலாசாலை சென்று பல ஆண்டுகள் படித்துப் பெற வேண்டிய அறிவு வளர்ச்சியை அவன் அந்தக் கண்காட்சி மூலம் ஒரு சில மணி நேரத்திலேயே பெற்று விடுகிறானல்லவா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1844)
Leave a Comment
