புதுடில்லி, டிச.18 அஞ்சல்துறையின் வருவாய் பற்றாக்குறை ரூ.24 ஆயிரத்து 915 கோடியாக அதிகரித்துள்ளது என்று மக்களவையில் டி.ஆர். பாலு எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் அளித்தார்.
அஞ்சல் துறையின் செயல்பாடு
மக்களவையில் தி.மு.க. குழு தலைவர் டி.ஆர். பாலு அஞ்சல் துறையின் செயல்பாடுகள் பிரச்சினை குறித்தபல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.
அண்மைக் காலங்களில் இந்திய அஞ்சல் துறை வங்கி, இன்ஷ்யூரன்ஸ் போன்ற நிதிசேவைகளில் கவனம் செலுத்துவதால் அஞசல் நிலை யங்களின் எண்ணிக்கை குறைந்துள் ளதா? அதன் பொருட்டு அலுவ லர்கள் புதிய பணிகளுக்கு மடை மாற்றப்பட்டு அஞ்சல் சேவைகள் பாதிப்புக்குள்ளானதால் தபால் நிலையங்களின் எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளதா? சென்ற அய்ந்தாண்டுகளில் நாடு முழுவதும் எத்தனை அஞ்சல் அலுவலகங்கள்மூடப்பட்டன? எத்தனை புதிய அலுவலகங்கள் திறக்கப் பட்டன? நிதிச்சேவைகளால் அஞ்சல்துறையின் வருவாய் மற்றும் லாபம் பெருகி உள்ளதா? அல்லது ,இழப்பு ஏற்பட்டுள் ளதா?பெருமளவிலான காலிப் பணியிடங்களால் அஞ்சல் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை சீர்செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று அவர் கேள்விகள் கேட்டு இருந்தார்.
8565 கூடுதல் அஞ்சல் நிலையங்கள் – அமைச்சர்
மக்களவையில் அதற்கு ஒன்றிய அஞ்சல் துறை இணை அமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திர சேகர் பதில் அளித்து கூறியதாவது: சென்ற அய்ந்து ஆண்டுகளில் 8565 புதிய அஞ்சல் நிலையங்கள் திறக்க பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்ற 2021 ஆம் ஆண்டில் 1லட்சத்து 56 ஆயிரத்து 434 ஆக இருந்த அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கை 2025இல் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 999 ஆக உயர்ந்துள்ளது. சென்ற நிதி ஆண்டான 2024-2025இல் அஞ்சல் துறையின் மொத்த செலவு ரூ.37, 528 இருந்த நிலையில் மொத்த வருவாய் ரூ.12613 மட்டுமே. எனவே, வருவாய் பற்றாக்குறை ரூ.24915 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், நிதிசார்ந்த சேவைகளை மேற்கொண்டதால் அஞ்சல் துறை செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்.
