‘‘ஆர்எஸ்எஸ் என்பது இந்துக்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்டது. அது இந்துக்களுக்கான சங்கம் என்பதால், முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு எதிரானது அல்ல” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசினார். திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி, கல்வியாளர்கள், பிரபலங்களை சந்தித்து ஆர்.எஸ்.எஸ் தேசியத் தலைவர் மோகன் பாகவத் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள பிரபலங்கள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் ஆர்எஸ்எஸ் தேசியத் தலைவர் மோகன் பாகவத் பேசியது: “ராஷ்டிரிய சுவயம் சேவக் என்ற ஆர்.எஸ்.எஸ். சங்கம் துவங்கப்பட்டு தற்போது 100 ஆண்டுகளை கடந்துள்ளது. கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாகத்தான் ஆர்எஸ்எஸ் உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. தற்போது சங்கத்தை பற்றி விவாதங்கள் நடைபெற்றாலும் அதில் அதிகாரப்பூர்வமாகவோ அல்லது சங்கத்தை பற்றி தெளிவான தகவல்களோ ஏதும் இடம்பெறவில்லை. குறிப்பாக நமது சங்கத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது உலகளவில் வேறு எந்தச் சங்கமும் இல்லை. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இதுபோன்ற ஒரு சங்கத்தை நாம் பார்த்ததில்லை. சங்கத்தை வெளியில் இருந்து பார்த்தால் புரிந்துகொள்ள முடியாது. எப்படி வானத்தைப் பார்த்தால், கடலைப் பார்த்தால் புரியாதோ, அதுபோன்றுதான் சங்கத்தை வெளியில் இருந்து பார்த்தால் ஒன்றும் புரியாது. விஹெச்பி வழியாகவோ, பாஜக வழியாகவோ சங்கத்தை புரிந்துகொள்ள முடியாது. சங்கத்தின் உள்ளே வந்து பார்த்தால்தான், அதாவது சகா கூட்டங்கள், சுவயம் சேவகர்கள், அவர்களுடைய குடும்பத்தை நேரில் சந்தித்து பார்த்தால்தான் அதனுடைய முழுமையும், முக்கியத்துவமும் புரியவரும். சங்கம் என்பது சக்திவாய்ந்த ஒரு தனியான அமைப்பு கிடையாது.
ஒட்டுமொத்த சமூகத்தையும் ஓரணியில் ஒன்று திரட்ட வேண்டும் என்று நோக்கத்தில்தான் சங்கம் செயல்பட்டு வருகிறது. மொத்தத்தில் ஒட்டுமொத்த சமுதாயத்துக்காக சங்கம் செயல்படுகிறது. சங்கத்துக்கும், சமூகத்துக்கும் இடையேயான இடைவெளி களையப்பட வேண்டும். எனவே, நாம் அனைவரும் சங்கத்தின் முக்கியத்துவத்தை அனைவரிடமும் எடுத்துரைக்க வேண்டும்.’’ என்று பேசியிருக்கிறார்.
ஒன்றை வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
ஆர்.எஸ்.எசுக்குச் சமுதாயத்துக்கும் இடைவெளியிருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார் –
ஏனிந்த நிலை? ஆர்.எஸ்.எஸின் கொள்கையும், செயல்பாடும் மக்களைப் பிளவுபடுத்துவதாகும். ஷாகா என்ற பெயரில் சிறிய வயதிலேயே வன்முறைப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கும் இயக்கமாகும்.
இந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்டது. பல மதங்களையும், கலாச்சாரத்தையும் கொண்டது.
இந்த நிலையில் இந்தியா ஒரே நாடு – அது ஹிந்து நாடு – ஒரே மதம் – அது ஹிந்து மதம், ஒரே கலாச்சாரம் – அது ஹிந்துக் கலாச்சாரம், ஒரே மொழி – அது சமஸ்கிருதம் என்று கூறும் ஓர் அமைப்பு எப்படி ஒட்டு மொத்த சமுதாயத்தோடு ஒட்டி உறவாடி வாழ முடியும்?
மற்ற மதங்களைச் சார்ந்தவர்களோடு ஒட்டி உறவாடுவது ஒரு பக்கம் இருக்கட்டும்; ஆர்.எஸ்.எஸ். சொல்லும் அந்த ஒரே மதமான ஹிந்து மக்களிடத்தில் பிளவு இல்லாமல் இருக்கிறதா? இருக்கத்தான் முடியுமா?
ஜாதி என்பது தானே ஹிந்து மதத்தின் அடிக்கட்டுமானம்! ஜாதிக்குள் உள்ஜாதி என்ற நிலையும் உண்டு; ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கலாச்சாரமும் பழக்க வழக்கங்களும் உண்டு; கடவுள்கூட ஒத்த நிலையில் இல்லை.
உயர் ஜாதி பார்ப்பனர்கள் கிராம தேவதைகளை ஏற்றுக் கொள்வார்களா? பூஜைகளை நடத்துவார்களா?
உயர் ஜாதிக் கடவுள்களுக்கே ஜாதியின் அடையாளமாகப் பூணூலை அணிவிருக்கிறார்களே!
உயர்ஜாதி என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களுக்குள்ளேகூட ஒத்த நிலை உண்டா? சங்கராச்சாரியாரும், ஜீயரும் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்வார்களா? ஸ்மார்த்தர்கள், வைணவர்கள் என்ற பிரிவினர் ஒரே சமுதாயமாக வாழும் நிலை உண்டா?
ஜீயரை ஏற்றுக் கொள்பவர்களிடம்கூட வடகலை, தென் கலை பிரிவுகள் இருக்கின்றனரே!
கோயில் விழாக்களில்கூட முதலில் வேதம் பாட வேண்டுமா? பிரபந்தம் பாட வேண்டுமா? என்ற பிரச்சினை எவ்வளவுக் காலமாக இருந்து வருகிறது?
பட்டப் பகலிலேயே தெருக்களில் வடகலைக்காரர்களும், தென் கலைக்காரர்களும் ஒருவருக்கொருவர் கை கலப்பில், அடிதடியில் இறங்குகிறார்களே!
சீரங்கம் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென் கலை நாமம் போடுவதா என்ற பிரச்சினை லண்டன் பிரிவு கவுன்சில் வரை செல்லவில்லையா? இன்றுவரை அந்தச் சண்டை ஓயவில்லையே!
உண்மை நிலை இவ்வாறு இருக்க; ஆர்.எஸ்.எஸ்சுக்கும் சமுதாயத்துக்கும் இடையே உள்ள இடைவெளிபற்றி மூக்கால் அழுவது கண்டு, அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை!
ஒரே சமுதாயம் என்ற நிலையை உறுதிபடுத்த, முதலில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கூறுவதுபோல எல்லாவற்றுக்கும் ‘ஒரே, ஒரே’ என்று சொல்லும் ஹிந்துத்துவாதிகள் ‘ஒரே ஜாதி’ என்றுசொல்லட்டும் பிரச்சாரம் செய்யட்டுமே பார்க்கலாம்!
ஆட்சி அதிகாரம் தான் கையில் இருக்கிறதே – தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று சட்டம் செய்யட்டுமே!
அப்படி செய்து விட்டு ஒன்றுபட்ட சமுதாயத்தைப் பற்றிப் பேசுவதுதான் அறிவு நாணயமாக இருக்க முடியும்.
உண்மையைச் சொல்லப் போனால், கடவுளையும், மதத்தையும் ஏற்றுக்கொள்ளாத தந்தை பெரியார் கண்ட இயக்கமும், அதன் தொண்டர்களும்தான் ஒன்றுபட்ட சமுதாயத்துக்காக ஓயாமல் உழைக்கிறார்கள் – பிரச்சாரம் செய்கிறார்கள், களமாடுகிறார்கள் என்பதை ஆர்.எஸ்.எஸ். தலைவர் புரிந்து கொள்ளட்டும்!
