சத்னா, டிச.18- மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் தலசீமியா எனப்படும் வியாதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட மருத்துவமனையின் குருதி (ரத்த) வங்கி உதவியுடன் ரத்தம் செலுத்தப்பட்டது. இந்நிலையில், அவர்களில் 4 குழந்தைகளுக்கு எச்.அய்.வி. தொற்று ஏற்பட்டு உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
4 மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தபோதும், சமீபத்தில் இந்த தகவல் வெளிவந்து உள்ளது. இதனால், பலருடைய குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் ரத்தம் செலுத்த வேண்டிய தேவையில் உள்ளனர். சிகிச்சையின் ஒரு பகுதியாக பல முறை அவர்களுக்கு ரத்தம் செலுத்தப்பட்டு உள்ளது.
ரத்த வங்கி கொடுத்த ரத்தம் வழியேதான் இந்த தொற்று ஏற்பட்டு உள்ளது என குழந்தைகளின் குடும்பத்தினர் குற்றச் சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் 70 ஆயிரம் எச்.அய்.வி. நோயாளிகள் உள்ளனர். இதில், வயது வந்தோர் 0.1 சதவீதத்தினர் ஆவர். தேசிய வழிகாட்டு விதி களின்படி எச்.அய்.வி., ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி மற்றும் பிற பாதிப்புகள் உள்ளனவா? என பரிசோதனை செய்த பின்னரே ரத்தம் சேகரிக்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில், சத்னா தவிர்த்து பிற மாவட்டங்களில் இருந்தும் கூட ரத்தம் பெறப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
