புதுடில்லி, டிச.17 ராம ராஜ்ஜியத்தை நிறுவவே VP-G RAM G மசோதா தயாராகியுள்ளதாக மக்களவையில் ஒன்றிய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். மசோதா குறித்து உரையாற்ற அவர் எழுந்த போது, காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அமளிக்கு இடையே பேசிய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், ராம ராஜ்ஜியத்தை நிறுவவே VP-G RAM G மசோதா தயா ராகியுள்ளதாகவும், காந்தியைத் தாங்கள் மறக்கவில்லை எனவும் கூறினார். இதனால், தொடர்ந்து முழக்கங்களை எழுப்பிய இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், காந்தியார் படத்துடன் மக்களவைத் தலைவர் இருக்கையை முற்று கையிட்டதால், அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், நாடாளுமன்ற வளா கத்தில் ஊர்வலமாகச் சென்ற இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், காந்தியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் காந்தியார் படத்துடன் நாடாளு மன்றக் கட்டடத்தின் மீது நின்று போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், புதிய மசோதா குறித்து, ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை சார்பில், நாளை (18.12.2025) விளக்கம் அளிக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய பா.ஜ.க. அரசு, ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட’’த்தின் பெயரை, மாற்றியதைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் ஊர்வலமாகச் சென்ற இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், காந்தியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் (புதுடில்லி, 16.12.2025).
