புதுச்சேரி, தமிழ்நாடு இரண்டும் அரசியலால் பிரிந்திருந்தாலும்,
பண்பாட்டு ரீதியாக ஒன்றுபட்டு இருக்கின்றன!
‘மாநில அந்தஸ்து’ பெற்றுத் தருவோம் என்றவர்கள்
ஆளும் கட்சியான பின்னும் செய்யாதது ஏன்?
புதுச்சேரி, டிச.17 “பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். நண்பர்களே உங்கள் பிள்ளைகள் மருத்துவர் ஆக வேண்டாமா? அய்.ஏ.எஸ்.ஆக வேண்டாமா? அய்.பி.எஸ். ஆக வேண்டாமா? அதற்கு இங்கும் ‘திராவிட மாடல்’ அரசு அமைய வேண்டாமா?” என்று புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் எல்லா மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.
“இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் தொடர் பிரச்சாரக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, புதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தின் சார்பில், அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக் கூடம் எதிரில், கடந்த 15.12.2025 அன்று மாலை 6 மணி அளவில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக பழைய மேம்பாலம், புதிய மேம்பாலம் இரண்டிலும் கழகக் கொடிகள் வரிசையாகக் கட்டப்பட்டு நல்ல வண்ணம் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் புதுச்சேரி திராவிடர் கழகத்தின் மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தலைமை ஏற்று உரையாற்றி சிறப்பித்தார். புதுச்சேரி மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தி.மு.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள் பா.செ.சக்திவேல், ஜெ.வேலன், நா.கோபால், தி.மு.க. அரியாங்குப்பம் தொகுதிச் செயலாளர் வ.சீத்தாராமன், புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் அ,மு,சலீம், புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்.இராமச்சந்திரன், புதுச்சேரி ம.தி.மு.க. மாநில அமைப்பாளர் ஹேமா க.பாண்டுரங்கன், புதுச்சேரி வி.சி.க.மாநில முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன், புதுச்சேரி மனிதநேய மக்கள் கட்சி தலைவர் என்.எம்.எஸ்.சஹாபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். கழக பொதுக்குழு உறுப்பினர்கள் கி.அறி வழகன், விலாசினி ராசு, லோ.பழனி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார், புதுச்சேரி மாவட்டக் காப்பாளர்கள் இரா.சடகோபன், இர.இராசு, விடுதலை வாசகர் வட்டம் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், கழக தொழிலாளரணித் தலைவர் வீர.இளங்கோவன், கழக பொறியாளரணித் தலைவர் த.சக்திவேல், பகுத்தறிவாளர் கழகம் தலைவர் நெ.நடராசன், மாவட்ட கழக துணைத் தலைவர்கள் மு.குப்புசாமி, ஜீவன் சார்வாகனன், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, காரைக்கால் மாவட்டச் செயலாளர் பொன்.பன்னீர்செல்வம் மற்றும் கழகத் தலைவருடன் சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டுள்ள, கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். கழகத் தலைவர் இரவு 8.40 மணிக்கு, புதுச்சேரி நிகழ்விடத்திற்கு வந்து சேர்ந்தார். புதுச்சேரி தோழர்கள் மிகுந்த எழுச்சிகரமான வரவேற்பை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தனர். தொடர்ந்து, கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார்.
‘பெரியார் உலக’த்திற்கான நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது!
அதைத் தொடர்ந்து, பெரியார் உலகம் நிதியளிப்பு விழா நடைபெற்றது. புதுச்சேரி மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் நிதி அளித்தவர்கள் பட்டியலை வாசித்தார். உரியவர்கள் காசோலையுடன் வந்து, கழகத் தலைவரிடம் வழங்கி மகிழ்ந்தனர். இறுதியாக முக்கியப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நிதி அளித்தவர்கள் அனைவரும் கழகத் தலைவருடன் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். அடுத்து புதுச்சேரி மாநிலம் சார்பாக கழகத் தலைவருக்கு மரியாதை செய்யப்பட்டது. முன்னிலை ஏற்ற தோழர்களுக்கும் மரியாதை செய்விக்கும் பணி தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து ‘பெரியார் உலக’த்திற்கான நிதி ரூபாய் 8,51,000/- வழங்கப்பட்டது என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இறுதியாக, கழகத் தலைவர் உரையாற்றுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு பேசினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
தொடக்கத்தில் பெரியார் உலகத்திற்கு நிதி அளித்தவர்களுக்கு, ‘‘மனம் நிறைந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு, பெரியார் உலகம் பற்றி – பெரியார் உலகம் என்பது புதுமையான காட்சியகம் மட்டுமல்ல, கருத்தகமாகவும், திராவிட இனத்தின் மீட்சியகமாகவும் இருக்கும் – ஒரு சித்திரத்தை மக்கள் நெஞ்சில் பதிய வைத்தார். அடுத்து, “தமிழ்நாட்டில் உள்ளது போன்ற மதச்சார்பற்ற கூட்டணி என்பது புதுச்சேரிக்கும் சேர்த்ததுதான்” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து அவர், இந்தக் கூட்டணிக்கு எதிராக இருக்கும் சிலரை, “திரைப்படத்தில் மட்டும் ஆட்சி அமைத்தவர்கள், ஆட்சியிலே பங்கு தருகிறோம் என்கிறார்கள். அந்த ஒப்பனைகள் விரைவில் தானாகவே கலையும்” என்று நாகரிகமாக விமர்சனம் செய்தார். மேலும் அவர், “புதுச்சேரியில் மக்கள் தந்த ஆட்சி எது? இப்போது இருக்கும் ஆட்சி எது?” என்று கூறிவிட்டு, “உங்களுக்கேத் தெரியும். இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி” என்று அம்பலப்படுத்தினார். இன்னும் கூர்மையாக அவர், “புதுச்சேரியில் மாநில அந்தஸ்தைப் பெற்றுத் தருவோம் என்று எதிர்க்கட்சியாக இருந்த போது வாக்குறுதி கொடுத்தவர்கள் தான் இப்போது ஆட்சியில் உள்ளனர். கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை” என்றொரு கேள்வியை மக்கள் முன் எடுத்து வைத்தார்.
பண்பாட்டுத் தளத்தில்
ஒன்றுபட்டு இருக்கின்றன!
தொடர்ந்து, புதுச்சேரியும், தமிழ்நாடும் அரசியலால் பிரிந்து கிடந்தாலும் பண்பாட்டுத் தளத்தில் ஒன்றுபட்டு இருக்கின்றன. இது அரசியலிலும் எதிரொலிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து தமிழ்நாட்டின் திருப்பரங்குன்றம் விவகாரம் புதுச்சேரியிலும் எதிரொலிப்பதை சுட்டிக்காட்டி, “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்றால்… அய்யய்யோ… ஆகம விதிகள் என்னாவது? என்கின்றனர். அதையே திருப்பரங்குன்றத்தில் கடைபிடிக்க வேண்டும் என்றால், அய்யய்யோ… வேறு இடத்தில் ஏன் ஏற்றக் கூடாது என்று அலறுகின்ற ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. வின் இரட்டை நிலைப்பாட்டை பச்சையாக அம்பலப்படுத்தினார். தொடர்ந்து, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் எவ்வளவு தரம் தாழ்ந்து இருக்கின்றது என்பதை எண்பிக்க, “ஒருவர் எல்லா கட்சிகளுக்கும் தாவுகிறார். பிறகு வேறு வழியின்றி தனிக் கட்சித் தொடங்குகிறார். சில நாட்களில் அதை இன்னொரு கட்சியுடன் இணைத்து இணைப்பு விழா நடத்துகிறார்” என்று நகைச்சுவையாக உதாரணம் சொல்லி, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதை ஆழமாகச் சுட்டிக்காட்டினார்.
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் மதச்சார்பின்மையை சிதைத்து வருகின்றன!
தொடர்ந்து ஜாதிவெறி,மதவெறியைத் தூண்டி விடுகிறவர்களை தோலுரித்துப் பேசியபோது, இயல்பாக புதுவையின் புரட்சிக் கவிஞர் பாடலான, “இருட்டறையில் உள்ளதடா உலகம்; ஜாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே?” என்று சுரணையை சுண்டி இழுக்கின்ற பாடலை உச்சரித்துக் காட்டினார். மேலும் அவர் கடந்த 11 ஆண்டுகளாக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் மதச்சார்பின்மையை சிதைத்து வருவதை நினைவூட்டி, “பிரதமர் நேரு மட்டும் இந்தியாவில் இல்லாமல் போயிருந்தால் இந்த அளவுக்காவது அறிவியல் மனப்பான்மை ஏற்பட்டிருக்குமா? என்ற பொருள் பொதிந்த கேள்வியைக் கேட்டு, நேருவுக்குப் பதிலாக இந்துத்துவவாதிகள் பிரதமர் ஆகியிருந்தால் ஏற்பட்டிருக்கும் கொடுமையை சொல்லாமலேயே புரிய வைத்தார். தொடர்ந்து “அந்த நேருவின் மீது நமக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் இருந்த போது தானே காமராஜர் துணையுடன் இழந்த இட ஒதுக்கீட்டை நாம் பெற்றோம். புதுச்சேரியிலும் தோழர் விஸ்வநாதன் போன்றவர்கள் அமைச்சராக இருந்து சமூக நீதி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்” என்று சுட்டிக்காட்டினார்.
உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுகிறவர்கள்!
அதைத் தொடர்ந்து, ‘‘ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் கொள்கைகள் என்ன?” என்று கேள்வி கேட்டு, “ஜாதியை ஒழிக்கக் கூடாது; இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது. இதுதானே இவற்றின் கொள்கைகள்” என்று பளிச்சென்று சொல்லிவிட்டு, “ஆனால், அவர்கள் இதை நேரடியாக செய்ய மாட்டார்கள்” என்பதைச் சுட்டிக்காட்டி, அவர்கள் வரலாறு நெடுக எப்படி இரட்டை நாக்குடன் செயல்பட்டார்கள். Open agenda – Hidden agenda என்றும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறவர்கள் என்றும் அம்பலப்படுத்தினார். தொடர்ந்து, “உங்களுக்கும் எங்களுக்கும் ஒரே நீதிமன்றம்தான். அதில் இட ஒதுக்கீடு உண்டா?” என்று அக்கறையுடன் கேள்வி கேட்டார். நீதிமன்றங்களின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்ட, ”அசல் அநியாயம் அப்பீலில் அதுவே காயம்” என்ற பழமொழியைச் சொல்லி, காயம் என்பதற்கு ‘நிரந்தரம்’ என்ற பொருள் என்றும் விளக்கினார். தொடர்ந்து இப்படி எல்லாம் நாம் வஞ்சிக்கப்படுவதையும், அதைப் புரிந்து கொள்ளாமல் நம்மவர்களே ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற மனித விரோத அமைப்புகளில் இருந்து கொண்டு நம்மை எதிர்க்கும் அவலத்தைச் சுட்டிக்காட்ட, “ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வில் இருக்கும் நண்பர்களே! உங்கள் பிள்ளைகள் மருத்துவர் ஆக வேண்டாமா? அய்.ஏ.எஸ். ஆக வேண்டாமா? அய்.பி.எஸ். ஆக வேண்டாமா?” என்று உருக்கத்துடன் பார்ப்பனரல்லாத மக்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
புதுச்சேரி வாக்காளப் பெருமக்களே
ஏமாந்து விடாதீர்கள்!
மேலும் தகுதி, திறமை என்று பேசியே நமது வளர்ச்சியைத் தடுத்தவர்கள், ஒன்றரைக் கோடி ரூபாய் பணம் செலுத்தி உயர் மருத்துவக் கல்வியில் சேரும் உயர் ஜாதி ஏழைகளை அம்பலப்படுத்தி, “இந்தக்கொடுமை வேறு எங்காவது நடைபெறுமா?” என்றும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதை படிப்படியாக நிறுத்தியதோடு அல்லாமல், காந்தியாரின் பெயரையே நீக்கியிருக்கும் வன்ம அரசியலையும் மக்களுக்கு விளக்கினார். மேலும் நீதிபதிகள், “Without fear and without favour’’ என்று பதவிப்பிரமாணம் எடுத்தவர்கள், அதற்கு மாறாக நடந்து கொள்ளும் அவலத்தையும், இதைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்தியா எங்கும் கலவரத்தைத் தூண்ட முயல்வதையும் எடுத்துரைத்து, “புதுச்சேரி வாக்காளப் பெருமக்களே ஏமாந்து விடாதீர்கள். அப்படி ஏமாந்தால் இப்போதிருக்கும் பொது அமைதி கூட இங்கே மிஞ்சாது. எச்சரிக்கையாக இருங்கள். ஜனநாயகத்தை சவப்பெட்டியில் வைத்து மூடப்போகிறார்கள். அவர்கள் ஓட்டுப்பெட்டியை, எஸ்.அய்.ஆரை நம்புகிறார்கள். நாங்கள் மக்களை நம்புகிறோம். புரிந்துகொள்ளுங்கள். பிரெஞ்ச் நாட்டில் தேர்தல் நடந்தால், இங்கிருக்கும் உங்களுக்கு வாக்கு செலுத்த உரிமை இருக்கிறது. ஆனால், புதுச்சேரியில் நடக்கும் தேர்தலில் உங்களுக்கு வாக்குச் செலுத்தும் உரிமை மறுக்கப்படலாம். ஆகவே, உங்கள் வாக்குரிமையை உறுதி செய்யுங்கள். உரியவர்களுக்கு வாக்களியுங்கள்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
பங்கேற்றோர்
நிறைவாக, புதுச்சேரி திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் தி.இராசா நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைச் செயலாளர் இளவரசி சங்கர், கழகத் தோழர்களான தி.க.தொழிலாளரணிச் செயலாளர் கே.குமார், விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன், திராவிடர் கழக மகளிரணித் தலைவர் அ.எழிலரசி, திராவிடர் கழக இளைஞரணித் தலைவர் ச,சித்தார்த், திராவிடர் மாணவர் கழகத் தலைவர் பி.அறிவுச்செல்வன், பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா.குமரன், புதுச்சேரி வடக்கு நகராட்சித் தலைவர் எஸ்.கிருஷ்ணசாமி, புதுச்சேரி தெற்கு நகராட்சித் தலைவர் மு.ஆறுமுகம், புதுச்சேரி தெற்கு நகராட்சிச் செயலாளர் களஞ்சியம் வெங்கடேசன், அரியாங்குப்பம் கொம்யூன் தலைவர் செ.இளங்கோவன், திராவிடர் கழகத் தோழர் ஊடகவியலாளர் பெ.ஆதிநாராயணன், உழவர்கரை கிழக்கு நகராட்சித் தலைவர் சு.துளசிராமன், பாகூர் கொம்யூன் தலைவர் பொ.தாமோதரன், செயலாளர் இராம.சேகர், நெட்டப்பாக்கம் கொம்யூன் தலைவர் தெ.தமிழ்நிலவன், புதுச்சேரி திராவிடர் கழகத் தோழர் இரா.திருநாவுக்கரசு, புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் இரா.வெற்றிவேல், க.செல்வமணி, ஜெ.வாசுகி, உழவர்கரை கிழக்கு நகராட்சிச் செயலாளர் கா.நா.முத்துவேல் மற்றும் அனைத்துக் கட்சித் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசப்பட்ட உரைகளை செவிமடுத்து பயன் பெற்றனர்.
