புதுடில்லி, டிச. 16- டில்லியில் காற்று மாசு: காணொலி விசாரணைக்கு டில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது.
டில்லியில் காற்றின் தரக் குறியீடு மிக மோசம் அடைந்துள்ள நிலையில், வழக்கு விசாரணைக் காக நீதிமன்றத்துக்கு நேரில் வருவதைத் தவிர்த்து, காணொலி விசாரணையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வழக்குரைஞர்கள் மற்றும் நேரில் ஆஜராகும் தரப்பினருக்கு டில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
காற்றின் தரக் குறியீடு (AQI)
ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 0 முதல் 500 வரையிலான புள்ளிகள் அடிப்படையில் காற்றின் தரத்தை கணக்கிடுகிறது. இது காற்றின் தரக் குறியீடு (AQI) எனப்படுகிறது.
இதில் AQI அளவு 0-50க்குள் இருந்தால் சுத்தமான காற்று என்றும், 401 புள்ளிகளுக்கு மேல் இருப்பது மிக மோசமான மாசுபாடு கொண்டது என்றும் வரையறுக்கப்படுகிறது.
டில்லியில் காற்றின் நிலை
தலைநகர் டில்லியில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்து, காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இந்நிலையில், டில்லியில் 38 நிலையங்களில் நேற்று (15.12.2025) காற்றின் தரம் கடுமையானதாகவும், 2 நிலையங்களில் மிக மோச மானதாகவும் இருந்தது.
ஜஹாங்கீர்புரியில் காற்றின் தரக் குறியீடு (AQI) அதிகபட்சமாக நேற்று காலை 498 என்ற மிக மோசமான நிலையை எட்டியது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு
டில்லி உயர் நீதிமன்றத்தில் தற்போது நேரடி மற்றும் காணொலி என இரு முறைகளிலும் வழக்கு விசாரணைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, உயர் நீதிமன்றத்தில் பட்டிய லிடப்பட்டுள்ள வழக்குகளில், வழக்குரைஞர்கள் மற்றும் வழக்கில் நேரடியாக ஆஜராகும் தரப்பினர் நீதிமன்றத்துக்கு நேரில் வருவதைத் தவிர்த்து, காணொலி விசாரணையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் இதே அறிவுறுத்தலை கடந்த 14ஆம் தேதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
