புதுடில்லி, டிச.15 நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், பகல் பன்னிரண்டு மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது . எஸ்.அய்.ஆர். பணி, வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டு உள்பட பல்வேறு விவாதங்களில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன . பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது
இந்தச் சூழலில் இன்று ( 15.12.2025) காலை பதினொன்று மணிக்கு மக்களவை கூடியது. அவை கூடியதும், காங்கிரஸ் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது குறித்து மக்களவை எதிர்க்கட்சி உறுப்பினர் ராகுல், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ,
ஜே.பி. நட்டா ஆகியோர் வலியுறுத்தினர்.
பின்னர் காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. பேரவைத் தலைவர் ஓம்பிர்லா அமைதியாக இருக்குமாறு உறுப்பினர்களிடம் கேட்டு கொண்டார். ஆனால் தொடர்ந்து அமளி நீடித்ததால், அவையை பன்னிரண்டு மணி வரை ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.
அதேபோல் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சித் தலைவர் கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை பன்னிரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
