புதுடில்லி, டிச.14 ‘வந்தே பாரத்’ ரயிலில் உள்ளூர் உணவு என்று புதிய அறிவிப்பை ரயில்வே அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
ஏழைகள் பயணிக்கும் எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்களை காணாமல் ஆக்கி விட்டு, செல்வந்தர்களுக்கு என்றுமட்டுமே இருக்கும் வந்தே பாரத் ரயில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கம் என்ன? தனியாருக்கு எளிதாக தூக்கிக்கொடுக்கலாம் என்ற திட்டம் தானே?
இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் மற்றும் பிராந்திய உணவு வகைகளை பயணிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டம் படிப்படியாக அனைத்து ரயில்களிலும் விரிவுபடுத்தப்படும் என்றும் ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பயன்படுத்தும் சாதாரண ரயில்கள் மற்றும் பொதுப் பெட்டிகளில் இருக்கும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், அதிக கட்டணம் வசூலிக்கப்படும் ‘வந்தே பாரத்’ போன்ற அதிநவீன ரயில்களில் மட்டும் உணவு வகைகளை மேம்படுத்துவது, இனி ஏழைகள் ரயிலில் பயணத்தை கனவாக்குவது என்ற ஒரு மறைமுக வஞ்சகத் திட்டமே ஆகும்
‘ஏழைகளின் ரயில்கள்’ என்று அழைக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு, வசதி படைத்தவர்களுக்கான பயணத்தை மேம்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துவதா என்று ரயில்வே துறையின் மீது கேள்வி எழுப்பப்படுகிறது.
ஏழை மக்களின் பயன்பாட்டிற்கான ரயில்களைப் புறக்கணித்து, வசதி படைத்தவர்கள் மட்டுமே பயணம் செய்யக்கூடிய ரயில்களில் ‘உள்ளூர் உணவு’ என்ற ஆடம்பரத்தை அறிமுகப்படுத்துவது, ரயில்வேயின் சேவை சமநிலையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
ரயில்வேத்துறை தற்போது தனியார் மயமாக்கும் வேலை மும்முரமாக நடந்துகொண்டு இருக்கிறது, ஆகையால் தான் துவக்க கட்டணமே ரூ.1500 என்று நிலையில் உள்ள வந்தே பாரத் ரயிலக்ளை நாடு முழுவதும் விட மோடி அரசு ஓடி ஓடி உழைக்கிறது.
எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் இதர பயணிகள் ரயில் கட்டணங்கள் ரூ 7 துவங்கி சாதாரண கட்டணம் அதிகபட்சம் 250 ரூபாயில் மட்டுமே முடியும் ஆனால் வந்தே பாரத் அப்படி அல்ல.
சென்னை நெல்லை செல்ல நெல்லை எக்ஸ்பிரஸில் படுக்கை வசதிகொண்ட முன்பதிவு பெட்டிக்கு கட்டணம் ரூ 400 மட்டுமே!
ஆனால் வந்தே பாரத் அமர்ந்துசெல்ல மட்டுமே ரூ.1600 வசூலிக்கின்றனர். இந்த நிலைதான் நாடு முழுவதும் உள்ள வந்தே பாரத் ரயில்களில் கொள்ளைக்கட்டணம்! ஏற்ெகனவே சரக்கு ரயிகளின் பேட்டிகளை தனியார் கையாளும் வகையில், விதிமுறை மாற்றங்களைக் கொண்டுவந்து அதானி பெயரில் பல சரக்கு பெட்டிகள் சென்று கொண்டு இருக்கின்றன. தற்போது பயணிகளில் ரயிலான வந்தேபாரத் ரயிலும் ரயில் பயணத்தில் தற்போது 20 விழுக்காடு இடத்தைப் பிடித்துவிட்டது, இதை 50 விழுக்காடாக மாற்றத்தான் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்துகின்றனர். இதன்மூலம் எக்ஸ்பிரஸ் ரயில்களை மேலும் குறைத்து தனியார் மயமாக்கு அபாயம் உள்ளது.
