அமராவதி, டிச.14– ஆந்திராவில் தனியார் பேருந்து ஒன்று மலைப்பாதையில் உள்ள பள்ளத்தில் அதிகாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. பேருந்தில் 37 பேர் பயணித்த நிலையில் 10 பேர் பலியாகி உள்ளனர். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் சீதாராம ராஜு மாவட்டம் சிந்தூரு – மரிதுமில்லி மலைப்பாதையில் நேற்று (13.12.2025) அதிகாலையில் தனியாருக்கு சொந்தமான பேருந்து சென்று கொண்டிருந்தது. திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
துலசிபக்கா அருகே 9ஆவது மைல்கல் உள்ள திருப்பத்தில் தடுப்புச் சுவரை இடித்து பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.
இதுபற்றி தகவலறிந்தவுடன் காவல் துறையினரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று மீட்புப் பணியை தொடங்கினர்.
அப்போது 10 பேர் பலியானது தெரியவந்தது. மேலும் 27 பேர் காயமடைந்து இருந்தனர். இவர்களில் சிலர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் சித்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் அவர்கள் பத்ராசலம் (‘புன்னிய’ சேத்திரம்) சென்றுவிட்டு, அன்னவாரத்துக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
பேருந்தில் 35 பக்தர்கள், 2 ஓட்டுநர்கள் இருந்தனர். நள்ளிரவில் அவர்கள் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. இதுபற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
