காந்திநகர், டிச.14 பள்ளிக்கல்வித் துறையின் மோசமான நடவடிக்கை மற்றும் பள்ளிகள் கட்டமைப்பு சரியில்லாத காரணத்தால் குஜராத் மாநிலத்தில் 2025 ஆம் ஆண்டு மட்டும் 2.4 லட்சம் மாணவர்கள் பள்ளி செல்வதை நிறுத்தி உள்ளனர். இது நாட்டிலேயே மிகவும் அதிகமான எண்ணிக்கை ஆகும்.
குஜராத் மாநிலத்தில் 30 ஆண்டுகளாக தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. அங்கு 4 முறை மோடி முதலமைச்சராக இருந்தார்.
அங்குள்ள பல துறைகள் சீர்கெட்டு வளர்ச்சி விகிதம் சரிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.
ஊழல் மிக மலிந்து கிடக்கிறது
குஜராத்தில் எல்லாமே தனியார் மயமானதால் அரசுத்துறைகளின் வளர்ச்சி குறித்து எந்தஒரு அரசு நிறுவனமும் அக்கறை காட்டுவதில்லை. மேலும் அமைச்சர்களின் துறைகளில் ஊழல் மிக மலிந்து கிடக்கிறது.
இதன் பாதிப்பு அனைத்துத் துறைகளிலும் வெளிப்படையாகவே தெரிகிறது. மாநி லத்தில் முக்கியத்துறைகளில் ஒன்றான பள்ளிக்கல்வித்துறை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. அங்கு பல ஆசிரியர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டே வேலை செய்ததாக கூறி ஊதியம் பெற்று வந்த அவலம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளி நிலையில் நடக்கும் ஊழல்!
பள்ளி நிலையில் நடக்கும் ஊழல் இதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்ட நிலையில் அங்கு மாணவர்கள் இடை நிற்றல் விதமும் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது.
அங்கு இந்த ஆண்டு மட்டும் 2.4 லட்சம் மாணவர்கள் பள்ளியிலிருந்து நின்றுள்ளனர்.
இதில் 1,05,020 பேர் மாணவிகள் ஆவர்.
அங்கு உயர் ஆரம்பப் பள்ளி (6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை) இடை நிற்றல் விகிதம் 4.2 விழுக்காடாக உள்ளது இடைநிலைப் பள்ளி (9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு) இடை நிற்றல் விகிதம்21 விழுக்காடாக உள்ளது
பீகாரை விட மோசம்
பீகார் மாநிலத்தில் பள்ளிக்கல்வித் துறையில் மோசமான நிர்வாகத்தால் பள்ளி செல்வதை 21 விழுக்காடு பேர் விரும்புவதில்லை என்று தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரியவந்த நிலையில், குஜ ராத்தில் பள்ளியில் சேர்ந்த பிறகு, இடை நிற்கும் மாணவர்கள் அதிகம் உள்ளனர்.
காரணம்
மாணவர்கள் பள்ளிப்படிப்பை நிறுத்து வதற்கு ஜாதிய, பொருளாதார, பாகுபாடுகள் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் குடும்பத்தின் வருமானத்தைப் பூர்த்தி செய்வதற்காகக் குழந்தைகள் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம்.
பருவ வயதை அடையும் முன்பே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதால், அவர்கள் படிப்பைத் தொடர முடிவதில்லை.
கல்வியின் தரம்
பல அரசுப் பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள், ஆசிரியர்கள் இல்லாமை மற்றும் மோசமான உள்கட்டமைப்பு போன்றவை. கிராமப்புறங்களில் உயர் நிலைப்பள்ளிகள் வெகு தொலைவில் இருப்பதால், மாணவர்கள் உயர் வகுப்புகளில் சேர்வதில் சிரமம். முக்கியமான தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அரசுப் பள்ளி நிர்வாகத்தினர் செயல்பட்டு, மாணவர்களை தனியார் பள்ளியில் சேர்க்க வற்புறுத்துகின்றனர். இதன் காரணமாக ஏழை மக்கள், பிள்ளைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்ப மறுத்து விடுகின்றனர். இது கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துகொண்டு இருந்து தற்போது அந்தப் புள்ளிவிபரம் அபாயமான கட்டத்தைத் தாண்டி விட்டது.
ரூ.2000 கோடி என்ன ஆனது?
இந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை ஆண்டுக்கு ரூ.2000 கோடி நிதி ஒதுக்கி, இடை நிற்றலை தவிர்க்கத் திட்டம் தீட்டுகிறது. இந்த ரூ.2000 கோடி என்ன ஆனது? யார் வயிற்றில் அறுத்துக் கட்டியது?
இதுதான் வானதி சீனிவாசன் முதல் பத்ரி சேசாத்திரி வரை கூறிய ‘குஜராத் மாடலின்’ லட்சணம் ஆகும்.
