இந்திய நாட்டு விடுதலைப் போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட்டது; மறைத்து எழுதப்பட்டது; மறந்து போகவில்லை, மறைத்து எழுதப்பட்டது – மாற்றி எழுத வேண்டும்!
‘திரித்து’ எழுதுங்கள் என்று சொல்லவில்லை; ‘திருத்தி’ எழுதுங்கள்!
புதுடில்லி, டிச. 13 – இந்திய நாட்டு விடுதலைப் போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட்டது; மறைத்து எழுதப்பட்டது; மறந்து போகவில்லை, மறைத்து எழுதப்பட்டது. மாற்றி எழுத வேண்டும் இதையெல்லாம். நான் திரித்து எழுதுங்கள் என்று சொல்லவில்லை; திருத்தி எழுதுங்கள். இனியாவது, எல்லாவற்றிற்கும் ஒரு சாயத்தைப் பூசுவது; எல்லாவற்றிற்கும் ஒருவர் உரிமை கொண்டாடுவது என்பதாக இல்லாமல், ‘எனக்கே எல்லாம் எனக்கே எல்லாம்’ என்று சொல்வதற்கு மாறாக, இதற்கெல்லாம் ஒரு தீர்வு காணுங்கள். எல்லோரையும் ஒன்றாகக் கருதுங்கள்! நீங்கள் பேசுகிற தேசியம் உண்மை என்றால், ‘காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஒன்று’ என்று நடத்துங்கள்! எல்லோரையும் ஒன்றாக நடத்துங்கள்! எல்லா மொழிகளையும் ஒன்றாக நடத்துங்கள்! எல்லா இனத்தவருடைய தியாகத்தையும் போற்றுங்கள் என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
ஒரு மிக முக்கியமான இந்த விவாதத்தில் கடமை உணர்வோடும், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவன் என்கின்ற பெருமிதத்தோடும் உங்கள் முன்னால் நான் நின்று உரையாற்றுகின்றேன்.
வந்தே மாதரம் என்ற பாடல் இயற்றப்பட்டு, 150 ஆண்டுகள் ஆவதையொட்டி, இரு அவைகளிலும் விவாதம் நேற்றும் நடைபெற்றது; இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்தப் பாடலில் உள்ள சிறப்பைப்பற்றி எல்லோரும் பேசி னார்கள். இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், இந்த விவாதத்தை நடத்தவேண்டும் என்பதில், அரசாங்கம் மிகுந்த அக்கறையோடு இருந்தது.
எதிர்க்கட்சிகள் பல முக்கியமான, இன்றைக்குக் கொழுந்து விட்டு எரிகிற பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தவேண்டும் என்று கேட்டபொழுது, முதலில் வந்தே மாதரம்தான் பேச வேண்டும் என்று அவ்வளவு வலியுறுத்தி, இந்த விவாதத்தை முன்னால் கொண்டு வந்தார்கள்.
வந்தே மாதரம் என்ற பாடலைப்பற்றி பேச விழைந்தவர்கள், பெரும்பாலும் குற்றச்சாட்டை, காங்கிரஸ் கட்சியின்மீதும், மறைந்த பண்டித நேரு அவர்கள்மீதும் வைத்தார்கள்.
பதிலுக்கு அவர்களும் வைத்தார்கள். விளக்கம் சொல்ல வேண்டிய ஒரு கடமை உணர்வோடு.
ஆனால், நாங்கள் சில பொறுப்புணர்ச்சியோடு இங்கே பேசவேண்டும். இந்த அவையின் இந்த விவாத நேரத்தை மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன்.
ஊருக்கும், உலகத்திற்கும் தெரியாத சிலவற்றை நான் சொல்வதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.
பங்கிம் சந்திர சட்டோபாத்யாய்
எல்லோரும் குறிப்பிட்டார்கள், இந்தப் பாடல் பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் என்பவரால், 1875 இல் எழுதப்பட்டு, பின்னர், 1880, 1882 இல் ‘பங்களாதர்சன்’ என்ற பத்திரிகையில், ‘ஆனந்தமடம்’ என்ற பெயரில் தொடராக வெளிவந்தது. அதில் இந்தப் பாடல் இடம்பெற்று அது மிகுந்த புகழ் பெற்று உள்துறை அமைச்சர் குறிப்பிட்டதை போல எதிர்க்கட்சி தலைவர் சொன்னதை போல 1896 ஆவது ஆண்டு ரவீந்திர நாத் தாகூர் அவர்களால் கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாட்டில் அவரால் மெட்டமைக்கப்பட்டு பாடப்பட்டது. அது அத்தோடு நிற்கவில்லை. அந்த வந்தே மாதரம் என்ற அந்த இரண்டு சொற்கள் இந்தியா முழுவதும் எதிரொலித்தது. விடுதலை வேட்கையை கிளர்ந்து எழச் செய்தது. இது எந்த மொழியிலே என்று யாரும் பார்க்கவில்லை.
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை பரவியது!
இன்றைக்கு நாம் பாடுகின்ற ‘நாட்டுப்பண்’ என்று சொல்லுகிற ‘ஜன கண மன அதி’யாக இருக்கலாம் நாட்டு பாடல் என்று சொல்லுகிற வந்தே மாதரமாக இருக்கலாம் இரண்டும் வங்காள மொழியில் இருக்கிறது. எந்த மொழி என்று தெரியாது. ஆனால், உணர்ச்சிகளை கொந்தளிக்கிற போது அது எதை முன்வைக்கிறது என்கிற போது, அதில் எல்லோரும் ஒன்றிணைந்தார்கள். அன்றைக்கு ஏற்பட்ட அந்த உணர்ச்சி என்பது காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை பரவியது. எல்லோருக்கும் ஒரே உணர்வு இருந்தது. இந்த நாடு விடுதலை பெற வேண்டும் என்று.
மகாகவி பாரதி அவர்கள் ஓர் அழகான பாடலை, நிறைய எழுதி இருக்கிறார். விடுதலை வேட்கை குறித்து
‘‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடு
அதன் முந்தையர் ஆயிரம் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடு
அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணங்கள் சிறந்து விளங்கியதும் இந்நாடே
இதை நான் சிந்தை நிறுத்தி வந்தனை கூறி மனதில் நிறுத்தி என் வாயுற வாழ்த்துவேனோ
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்குவேனோ’’ என்று சொல்கிறார்.
வரலாறு எழுதப்படுவதைப் பொறுத்துதான்
அது அடுத்தவர்களால் நம்பப்படுகிறது!
அன்றைக்கு அந்தப் பாடல் எல்லா திசைகளிலும் ஒலித்தது. இந்த விடுதலை உணர்வு என்பது வெள்ளையர்களை எதிர்த்துப் போராடுவது என்பது, ஏதோ 20 ஆம் நூற்றாண்டு 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலே வந்ததைப் போல ஒரு தோற்றம், வரலாறு எழுதப்படுகின்றது. வரலாறு எழுதப்படுவதைப் பொறுத்துதான் அது அடுத்தவர்களால் நம்பப்படுகிறது.
வடபுலத்திலே வ.உ. சிதம்பரனார் சாலை உண்டா?
என்னுடைய கவலை, மற்றவர்களுடைய பங்களிப்பைக் கொஞ்சம் கூட நாங்கள் மறக்கவில்லை. உங்களுக்குத் தெரியாதது அல்ல; தமிழ்நாட்டில் திலகரின் பெயரால், திடல் வைத்திருக்கிறோம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயரால் சாலைகள் வைத்திருக்கிறோம். கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை என்று காந்தியினுடைய மனைவியின் பெயரால் மருத்துவமனை வைத்திருக்கிறோம். கமலா நேரு பூங்கா என்று நேருவினுடைய மனைவியின் பெயரால் பூங்கா வைத்திருக்கிறோம். நான் கேட்கிறேன். எங்காவது வடபுலத்திலே வ.உ. சிதம்பரனார் சாலை உண்டா? பாரதியார் தெரு உண்டா? யாருக்காவது வீரபாண்டிய கட்டபொம்மனைத் தெரியுமா? தயவு செய்து சொல்லுங்கள்.
ஏன் புறக்கணிக்கப்பட்டோம்? கேட்க வேண்டியது யார்? நாம்தான். நாங்கள் ஒரு மாநில கட்சிதான் திராவிட முன்னேற்ற கழகம். ஆனால், எந்த நிலையிலும் இந்த நாட்டுக்குப் போராடியவர்களை நாங்கள் கைவிட்டதும் இல்லை, அடையாளம் காட்ட தவறியதும் இல்லை என்பதை நான் பேருஉவகையோடு சொல்கிறேன். முதல் முதலாக வெள்ளையனை எதிர்த்துக் குரல் கொடுத்தது, போராடியது நெல்கட்டு செவல் என்று திருநெல்வேலிக்குப் பக்கத்தில் இருக்கிற பாளையத்தை ஆண்ட பூலித்தேவன் என்பவன்தான். அவன்தான் முதல் முதலில் ‘‘வெள்ளையனே வெளியேறு’’ என்ற முழக்கத்தை ஏற்படுத்தினான். அதுதான் 1942 இல் ‘க்விட் இந்தியா மூவ்மென்ட்’ என்பதற்கு முன்னோடி பூலித்தேவன்.
அதற்கு பின்னால் வீரபாண்டிய கட்டபொம்மன். நீங்கள் பின்னால் வரிகொடா இயக்கம் என்று சொல்வது முதல் முதலாகத் தொடங்கி வைத்தது வீரபாண்டிய கட்டபொம்மன் 1760 இல் பிறந்து 39 ஆவது வயதில் தூக்கில் இடப்பட்டவன். கொஞ்சம் கூட கலங்கவில்லை அப்பொழுதும் கூட அவன் ‘என் தாய்நாடே’ என்று சொல்லிவிட்டுத்தான் தூக்கிலே தொங்கி னான். வீரபாண்டிய கட்டபொம்மனை வடபுலம் அறியுமா?
பூலிதேவனோ, வீரபாண்டிய கட்டபொம்மனோ, சேது நாட்டை ஆண்ட சிவகங்கை சீமையை ஆண்ட வேலு நாச்சியார் –இழந்த பகுதியை மீட்டெடுத்த ஒரே வீராங்கனை அவர்தான். அவருடைய போர்த் தந்திரம், அவருக்கு தெரிந்த பன்மொழியால் புலவராக இருந்தவர். திப்பு சுல்தான் அய்தர் அலியின் துணையோடு, அவர் எத்தனை முறை வெள்ளையர்களை எதிர்கொண்டிருக்கிறார் என்பது என் தம்பி அமைச்சர் முருகனுக்குத் தெரியும்; உங்களுக்குத் தெரியும். மற்றவர்களைப் பார்த்து கேட்கிறேன், அவர்களைப்பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? அதைவிட மிகச் சிறப்பு இன்றைக்கு இந்த அவையில் நான் பதிவு செய்கிறேன்.
தலித் இனத்தைச் சார்ந்த குயிலி!
அன்றைக்கு வேலுநாச்சியார் அவர்களுடைய படைக்கு ஒரு கட்டத்தில் பின்னடைவு ஏற்படுகின்றது. வெள்ளை யர்களுடைய ஆயுத வலிமையை எதிர்த்தும், அவர்களுடைய அந்தப் போர் தந்திரத்தை எதிர்த்தும், போரிட முடியாத நிலை வருகிறது. அப்பொழுது எப்படியாவது இவரை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று, அவருடைய படைத் தளபதிகளில் ஒருவராக இருந்த குயிலி என்கிற ஒரு பெண். தலித் இனத்தைச் சார்ந்தவர் என்று சொல்கிறார்கள்; அவருடைய பூர்வாங்கத்தை ஆராய்ச்சி செய்தவர்கள். பல பெண்களோடு நடனக் குழுவைப் போல ஊருக்குள்ளே ஊடுருவிச் சென்று, கோட்டைக்குள்ளே சென்று, தன்னுடைய உடலெல்லாம் நெய்யை ஊற்றிக்கொண்டு, வெள்ளையர்களின் ஆயுதக் கிடங்கில் தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு குதித்து, அந்த ஆயுதக் கிடங்கை அழித்து, வேலுநாச்சியாரின் வெற்றியை சாதகமாக்கியது குயிலி என்கிற அந்த பெண் செய்த தியாகம், அவளுக்கு வயது 20–க்குள்ளாகத்தான்.
எத்தனையோ பேசுகிறோமே, ராணி லட்சுமிபாயைப் பற்றி பேசுகிறோம். வேலுநாச்சியாரை தெரியாது. குயிலியைப் பற்றி யாருக்குமே தெரியாது. எவ்வளவு பெரிய தியாகம். வெள்ளையர்கள் நடுநடுங்கிப் போனார்கள். ஆக, இப்படி பல வரலாறுகள் நம்மிடையே மறைக்கப்பட்டிருக்கின்றது.
மருது சகோதரர்கள் தூக்கிலே போடப்பட்டதும், ஒவ்வொ ருவனாக தூக்கிலே தொங்கவிடப்பட்டதும் கொஞ்சம் நஞ்சம் அல்ல. அதேபோலத்தான் பாரதியார் வறுமையிலே வாடி னாலும், அவர் பாடிய பாடல் திக்கெட்டும் ஒலித்தது. வ.உ.சி.யைப்பற்றி பிரதமர் பேசுகிறார். அவருடைய வார்த்தைகளிலே வருகிறது; பல பெயர்களைச் சொல்கிறார், அவருக்காக என்ன செய்திருக்கிறீர்கள்? அடுத்தவர்களைக் குறை சொல்வதோடு அல்ல; நான் தயவு செய்து கேட்கிறேன், மரபுகளைக் காப்பாற்ற வேண்டாமா? குடியரசுத் தலைவர் ரஷ்ய நாட்டிலிருந்து வருகிற அதிபருக்கு விருந்து அளிக்கிறார். அரசியல் சட்டத்தின் 79 ஆவது பிரிவு சொல்கிறது, நாடாளுமன்றம் என்பது இரு அவைகளைக் கொண்டது அதனுடைய ஒட்டுமொத்த அரசாங்கத்தின் தலைவராகக் குடியரசு தலைவர் இருப்பார் என்று. ஆனால், வெளிநாட்டிலிருந்து வருகிற ஒரு தலைவருக்கு தருகிற விருந்தில், எதிர்க்கட்சியைச் சார்ந்த மாநிலங்களவைத் தலைவரும் அழைக்கப்படவில்லை; மக்களவைத் தலைவரும் அழைக்கப்படவில்லை. இதை யாரிடம் போய்ச் சொல்வது?
என் மகன் இறந்தது எனக்கு பெரிதில்லை;
எனக்குக் கப்பல் வாங்குவதுதான் முக்கியம்!
சுதந்திரத்தைப் பெற்றோம், அதைக் குடியரசாக மாற்றி னோம். அந்தக் குடியரசு என்பது, குடியரசு என்பதை நிலை நாட்டுவதற்கு. மக்களாட்சி என்பதற்காக! இந்த வந்தே மாதரம் பாடல் கூட அப்படித்தான். தாகூர் காங்கிரசிலே பாடினார், காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியது என்பது அல்ல. அரசியல் சட்ட நிர்ணய சபை 1950 ஜனவரி 24 இல் இதை ஏற்றுக்கொண்டது. ஒரே நாளில், இரண்டுக்கும் ஒரே சம அந்தஸ்து – ஜன கண மன அதி–க்கும் உண்டு; வந்தே மாதரத்துக்கும் உண்டு என்று சொல்லி, அவர்கள் அதை நிலைநிறுத்தினார்கள். இப்பொழுது நான் கேட்க வருவது வ.உ.சிதம்பரனார் என்கிற பெயரைச் சொல்கிறீர்களே, அவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? வாணிகத்தின் மூலமாக இந்த நாட்டிலே உள்ளே ஊடுருவி நுழைந்த அந்த வெள்ளையர்களை வாணிகத்தால் தான் விரட்ட முடியும் என்று, அவர்களுக்கு எதிராகக் கடலிலே கப்பல் வாங்கினார். கப்பல் மூலமாகத்தான் வந்தார்கள்; இங்கே இருக்கிற சரக்குகளைக் கொண்டு போனார்கள்; இவர் பதிலுக்கு ஒரு கப்பல், சுதேசிக் கப்பலை வாங்கினார். வந்தே மாதரம் என்று அதை அழைத்தார். அதற்காக நிதி திரட்ட வடக்கே வருகிறார். இங்கு இருப்பவர்கள் எல்லாம் வருகிறார். ‘‘நான் வெள்ளையனை எதிர்த்து கப்பல் ஓட்ட போகிறேன். எனக்கு நிதி தாருங்கள்’’ என்று கேட்டு வருகிற போது அவருடைய மகன் இறந்து போன செய்தி வருகிறது. அவர் சொல்கிறார், ‘‘நான் போய் ஆக வேண்டியது ஒன்றுமில்லை. என் மகன் இறந்தது எனக்கு பெரிதில்லை; எனக்குக் கப்பல் வாங்குவதுதான் முக்கியம், வெள்ளையனை விரட்ட’’ என்று இங்கே நின்று, காசு வாங்கிக் கொண்டு போய் அந்தக் கப்பலை வாங்கினார். அவரை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டு, சரித்திரத்தில் இல்லாத அளவிற்கு இரண்டு ஆயுள் தண்டனைகளை பெற்ற ஒரே தலைவன் வ.உ.சிதம்பரனார்தான். சிறையில் என்ன நடந்தது? மற்ற கைதிகளைப் போல கூட நடத்தவில்லை. அவரை செக்கிழுக்க வைத்தார்கள். எண்ணெய் ஆட்டுகிற செக்கினை, மாட்டுக்குப் பதிலாக அவரை வைத்து இழுத்த கொடுமை, உங்களுக்குத் தெரியாததா தலைவர் அவர்களே, எத்தனை இடங்களில் நீங்களும் பேசி இருப்பீர்கள். எவ்வளவு அறிந்திருப்பீர்கள்? செக்கிழுத்து வெளியே வந்து சக்கையாக விழுந்தார். சிறையிலே அவரைப் போலவே சென்ற வீரன் சுப்பிரமணிய சிவா வெளியே வந்தபோது, தொழுநோய் வந்து செத்தார். என்ன தந்தது இந்த நாடு அவர்களுக்கு? அதைத்தான் கேட்டேன்.
நாங்கள் வைக்கிறோமே வடபுலத்தில இத்தனைப் பெயர்களை இவ்வளவு மரியாதை தருகிறோமே, இங்கே வாடியவர்களுக்காக, போராடியவர்களுக்கு நீங்கள் எங்களைப் பற்றி தெரிந்தாவது கொள்கிறீர்களா? குறைந்தபட்சம் உங்கள் பாடத்ததிட்டத்திலாவது சொல்லித் தாருங்கள். சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில், இப்படி எல்லாம் தலைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று.
ராணி அப்பக்கா என்று ஒருவர் கருநாடகத்திலே வாழ்ந்தார். யாருக்குத் தெரியும்? எத்தனைக் கொடுமைகள்? எவ்வளவு பேர் தியாகம்? கொஞ்சம் நஞ்சம் அல்ல! சோழவந்தானிலே பிறந்த ஒரு பெண் பத்மாசனி. மதுரையிலே வாழ்க்கைப்படுகிறார் சீனிவாசவர்தன் என்பவருக்கு. அவர் தேசபக்தி உள்ளவர். அவரோடு சேர்ந்து இவர் தெருவெல்லாம் பாரதியாரின் பாடல்களைப் பாடிக்கொண்டே போகிறார். வெள்ளையர்களுக்கு அதிர்ச்சியாகிறது; ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பற்றி, லாலா லஜபதிராய் அடிபட்டுச் செத்ததைப் பற்றி, பத்மாசனி தமிழ்நாட்டு வீதிகளில் முழங்கிய முழக்கம், எங்களுக்கு இருந்த உணர்வு இது பஞ்சாப் என்று பார்க்கவில்லை. ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலை என்று பார்க்கவில்லை; இது தேச விடுதலைக்காக நடைபெற்ற படுபாதகம். ஒருவர் தியாகம் செய்திருக்கிறார் உயிரை என்று தெருத்தெருவாக பாடியவள் பத்மாசினி. அவளைக் கொண்டு போய் சிறையில் அடைத்தார்கள் கர்ப்பிணியாக. உள்ளேயே குழந்தை பிறந்து செத்து போனது. வெளியே வந்து தொடர்ந்து தன்னுடைய பணியினைத் தொடங்குகிறார். அந்த பணியிலேயே இறந்து போனார் பத்மாசினியை யார் அறிவார்? என் தம்பி முருகன் அறிவாரா குறைந்தபட்சம்? இவ்வளவு பேர்!
செண்பகராமன்
நான் முக்கியமான ஒன்றை இன்றைக்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அது ரொம்ப அவசியமாகிறது. மீண்டும் தெரியுமா, தெரியுமா? என்றுதான் நான் கேட்க வேண்டும். திருவனந்தபுரத்திலே குமரி பக்கத்திலே பிறந்த செண்பகராமன் பிள்ளை – உங்களுக்குத் தெரியுமா? அண்ணன் சிதம்பரத்துக்குத் தெரியும். செண்பகராமன் பிள்ளை இங்கிருந்து ஒரு ஜெர்மானி நாட்டு உளவாளியின் மூலமாக அவருடைய அறிவாற்றலைப் புரிந்து கொண்டவர், நீ இங்கே இருக்காதே, போதாது, நீ வெளிநாட்டுக்கு வா என்கிற போது, இவருக்கு அப்பொழுதே சிறுவயதிலேயே விடுதலை வேட்கை வருகிறது. முதல் முதலாக ‘ஜெய்ஹிந்த்’ என்ற முழக்கத்தை உருவாக்கியதே செண்பகராமன் தான். அந்த செண்பகராமன், இங்கிருந்து கிளம்பி, இத்தாலிக்குப் போய் பல மொழிகளைப் பயில்கிறார். எல்லாவற்றையும் படித்துவிட்டு ஜெர்மன் நாட்டுக்கு போய் அங்கே இருக்கிற மன்னர் பேரரசர் கெசரின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக மாறி, அவருடைய அந்தரங்க ஆலோசகராக மாறுகிறார். அதற்குப் பின்னால் ஹிட்லரோடும் அவர் நெருங்குகிறார். அப்போதுதான் முதல் உலகப்போர் நடைபெறுகிற போது, அங்கிருந்து வந்த எம்–10 என்ற போர்க்கப்பலிலே அவர் தளபதியாக வந்து, யாருக்குமே தெரியாது எம்டன் குண்டு என்று கேள்விப்பட்டிருப்போம், தமிழ்நாட்டு எல்லைக்குள்ளே கடலோரத்திலே வந்து வெள்ளையர்களுடைய பர்மாசல் என்கிற எண்ணைக் கிடங்குகளை உடைத்துவிட்டு, சென்ஜார்ஜ் கோட்டையிலே குண்டு வீசிவிட்டு, வெற்றிகரமாக திரும்பிய வீரன் செண்பகராமன்.
ஹிட்லர் எழுதிக் கொடுத்த மன்னிப்புக் கடிதம்!
பின்னர் ஹிட்லரிடம் நெருங்குகிறான். ஹிட்லருக்கு இவன் மீது ஏகப்பட்ட மரியாதை. அவரிடம் அவன் பேசுகி றான், ‘என் நாடு விடுதலை அடைய வேண்டும். நான் அதற்காகத்தான் இவ்வளவு தொலைவு வந்தேன்’ என்று. அந்த நேரத்திலே ஹிட்லர் சொல்கிறான், ‘இந்தியர்கள் சுய ஆட்சிக்குத் தகுதியற்றவர்கள்’ என்று சொல்கிறான். இதைக் கேட்டு செண்பகராமன், கொந்தளித்துப் போய், ‘‘நீ பேசியது தவறு; மன்னிப்பு கேள்! அந்த மன்னிப்பையும் எழுத்து மூலமாகத்தா’’ என்று கேட்கிறார். வேறு வழியில்லாமல் அன்றைக்குச் செண்பகராமனுக்கு மக்களிடமிருந்த செல்வாக்கை உணர்ந்த ஹிட்லர், அவை தலைவர் அவர்களே பலபேர் தெரிந்து கொள்ள வேண்டும். ஹிட்லர் முதன் முதலாக தலை வணங்கி மன்னிப்புக் கடிதம் எழுதியது தமிழனாகிய செண்பகராமனுக்கு. எதற்காக? இந்த நாட்டைப் பற்றி அவமானப்படுத்தினான் ஒருவன் என்று, அந்நிய நாட்டின் மிகப்பெரிய சர்வாதிகாரியா இருந்தவனிடம் போய் பேசுகிற துணிச்சல் செண்பகராமனுக்கு இருந்தது. கடிதம் எழுதினான். எழுதிவிட்டு ஆற்ற முடியவில்லை. நம்மிடமிருந்து இப்படி ஒரு கடிதம் போய்விட்டதே, இதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று. அப்படி கைப்பற்ற முனைவது, அவனுடைய நாஜி. அந்தக் கடிதத்தை கைப்பற்ற முனைகிற முயற்சியில் மெல்ல கொல்கிற நஞ்சினை கொடுக்கிறார்கள், உணவிலே கலந்து. தெரியாமல் உட்கொள்கிறார். மெல்ல மெல்ல அவருடைய உயிர் போகிறது.
பார்சி இனத்தைச் சார்ந்த மராட்டிய பெண்மணி!
1907 ஆவது ஆண்டு உலக சோசியலிசம் மாநாட்டில் போய் ஒரு பெண் நின்று கொண்டு, ஒரு பார்சி இனத்தைச் சார்ந்த மராட்டிய பெண்மணி, தன் சேலை மடிப்புக்குள்ளே இருந்து மூவர்ணக் கொடியை எடுத்து காட்டி, ‘இது என் இந்திய நாட்டின் சுதந்திரக் கொடி எல்லோரும் வணக்கம் சொல்லுங்கள்’’ என்று சொன்ன அந்த மாநாட்டில், விளா டிமீர் லெனின் இருந்தார். எல்லோரும் சேர்ந்து அதற்கு வணக்கம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அந்த அம்மையாரோடு அரசியல் ரீதியாகத் தொடர்பில் இருந்தவர்கள் விளாடிமீர் லெனினும், மேக்ஸிம் கார்கியும். இந்த நாட்டிலே போராடிய அத்தனைப் பேருக்கும் அடைக்கலம் கொடுத்தார். அவர் வளர்த்த ஒரு பெண் லட்சுமிபாய் என்பவர்தான், இந்த செண்பகராமனை மணந்து கொண்டார். இந்தக் கதை, ஆம்! இது வரலாறா? இல்லை கதை. சோக கதை, சொந்தக் கதை, ஊருக்குத் தெரியாத கதை, தெரிய வேண்டிய கதை.
ஒரு தனி மனிதன் இங்கிருந்து ஜெர்மன் நாட்டுக்குப் போய், ஒரு சர்வாதிகாரியை மிரட்டுகின்ற அளவிற்கு வாழ்ந்து, கப்பலில் ஏறி தளபதியாக வந்து, உலகத்தில இருக்கிற எல்லோருக்கும் அதைப் பரப்புகிறான். அந்த செண்பகராமனை முதன் முதலாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெர்மன் நாட்டில் சந்தித்த போதுதான், ‘ஜெய்ஹிந்த்’ என்ற அவருடைய அந்த முழக்கத்தை எடுத்துக் கொண்டு திரும்புகிறார் என்பதும் ஒரு வரலாறு. மெல்லக் கொல்லும் விஷம், உயிர் போய்க்கொண்டிருக்கிறது; இங்ேக இருந்தால் உனக்கு ஆபத்து, வேறு நாட்டுக்குப் போ என்று சொல்கிற போது, போகிற வழியில் நாஜிக்கள் மறித்துத் தாக்குகிறார்கள். மருத்துவமனைக்குப் போகிறார், உயிர் பிரிகிறது.
செண்பகராமனின் விருப்பம்!
உயிர் பிரிகிற நேரத்தில், ரொம்ப ரொம்ப முக்கியம், அந்த நேரத்தில் அவர் சொன்னதுதான் மிகவும் முக்கியம். ‘‘நான் இந்தியா விடுதலை பெற்று, அதனுடைய சுதந்திர நாட்டின் போர்க் கப்பலில் இந்தியாவிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று விரும்பினேன்; ஆனால், இப்படியே இறக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. என் ஆசை, விருப்பம் அது என்று சொல்லி, இறந்து போகிறார்.
இறந்து போனவருடைய சாம்பலை, மூன்று ஆண்டுகள் மட்டுமே அவரோடு வாழ்ந்த அவருடைய மனைவி லட்சுமி பாய் மேடம் காமா அவர்களால் வளர்க்கப்பட்ட அவர், அந்த அஸ்தியைக் கையிலே வைத்துக் கொண்டு இந்தியாவிற்குத் தப்பி வருகிறார். எத்தனை ஆண்டுகள் காத்திருந்தார் தெரியுமா? அவன் விரும்பியது நடக்க 32 ஆண்டுகள் காத்திருந்தார். நாடு விடுதலை அடைந்தது. என்றைக்காவது நியாயத்தை யாராவது கேட்டிருக்கிறார்களா?
மாற்றி எழுதப்பட்ட வரலாற்றை,
திருத்தி எழுதுங்கள்!
திருமதி இந்திராகாந்தி அம்மையார், பிரதமராக ஆனவு டன், அவருக்கு எப்படியோ அந்தச் செய்தி வந்து, அதன் மூலமாக அந்த அம்மையார் அவருடைய தியாகத்தைப் பாராட்டு கின்ற அளவிற்கு அய்என்எஸ் டில்லி என்கிற கப்பலில், மும்பையிலிருந்து, திருவனந்தபுரத்திற்கு அவருடைய அந்த அஸ்தியை அனுப்பி, கரமனை ஆற்றிலே கரைக்கச் செய்த கடமையை அவர் ஏற்று செய்தார். இது காங்கிரஸ் கட்சி, இது இந்திரா காந்தி அம்மையார் ஒன்றுமில்லை, எது இல்லை என்பது அல்ல; ஒரு மிகப்பெரிய தியாகி, நீண்ட நெடுங்காலம் பாராட்டப்பட்டது எப்பொழுது? அங்கீகாரம் கிடைத்தது எப்பொழுது? இப்போது கேட்கிறேன். மீண்டும் நான், என் தம்பியைக் கேட்கிறேன். செண்பகராமனை இவராவது அறி வாரா? அவன் தமிழன், நேதாஜிக்கு முன்னோடி! ‘ஜெய்ஹிந்த்’ என்ற முழக்கத்தை முன்னால் வைத்தவன். அவனுடைய அந்த வீரதீர செயல்! எம்–10 கப்பல் வந்து ஆற்றிய அந்த மிகப்பெரிய செயல்! தளபதியாக இருந்தது! ஹிட்லரை மிரட்டியது! ஹிட்லரிடமே மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிய ஒருவனுடைய பெயர், இந்திய நாட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் இல்லை. அதைத்தான் சொல்கிறேன்; வரலாறு மாற்றி எழுதப்பட்டது; மறைத்து எழுதப்பட்டது; மறந்து போகவில்லை, மறைத்து எழுதப்பட்டது. மாற்றி எழுத வேண்டும் இதையெல்லாம். நான் திரித்து எழுதுங்கள் என்று சொல்லவில்லை; திருத்தி எழுதுங்கள்.
இனியாவது, இனியாவது எல்லாவற்றிற்கும் ஒரு சாயத்தைப் பூசுவது; எல்லாவற்றிற்கும் ஒருவர் உரிமை கொண்டாடுவது என்பதாக இல்லாமல், ‘எனக்கே எல்லாம் எனக்கே எல்லாம்’ என்று சொல்வதற்கு மாறாக, இதற்கெல்லாம் ஒரு தீர்வு காணுங்கள். எல்லோரையும் ஒன்றாகக் கருதுங்கள்! நீங்கள் பேசுகிற தேசியம் உண்மை என்றால், ‘காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஒன்று’ என்று நடத்துங்கள்! எல்லோரையும் ஒன்றாக நடத்துங்கள்! எல்லா மொழிகளையும் ஒன்றாக நடத்துங்கள்! எல்லா இனத்தவருடைய தியாகத்தை யும் போற்றுங்கள்! கிடையாதே! ஆனால், நாங்கள் யார்? மாநில கட்சி. விமர்சிக்கிறீர்களே, திராவிடம் பேசுகிறோம் என்று. ஆம்! திராவிடம் தான் பேசுகிறோம்; அதுதான் எங்கள் தத்துவம். ஆனால், முதல் முதலாக வ.உ.சி. இழுத்த செக்கு எங்ேக இருக்கிறது என்று தேடி, அது கோவை சிறையில் இருக்கிறது என்று கண்டுபிடித்து, அதை சென்னையிலே நினைவு சின்னமாக மாற்றியது, எங்கள் தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபொழுது.
மருதுபாண்டியருக்கு மணிமண்டபம் அமைத்தது யார்? சிலை வைத்தது யார்? நேற்றைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரையிலே 150 கோடி ரூபாய் செலவிலே, வேலுநாச்சியாருடைய பெயரால் ஒரு மேம்பாலம் அமைத்தி ருக்கிறார். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
போர்க் கப்பலுக்கு அய்என்எஸ் செண்பகராமன் பெயர் சூட்டுங்கள்!
நான் வரலாற்றை அப்படியே சொல்கிறேன். இவ்வளவு வரலாறு சொன்னேன் அல்லவா ! ெசண்பகராமன், அடுத்து நீங்கள் புதிதாகக் கப்பல் கடலில் மிதக்கவிடப்படுகின்ற போர்க் கப்பலுக்கு அய்என்எஸ் செண்பகராமன் என்று பெயர் வையுங்கள்; நாங்களும் சேர்ந்து பாராட்டுகிறோம்.
தெற்கே, தமிழ்நாட்டில், கருநாடகத்தில், கேரளாவில் எல்லா பகுதியிலும் வாழ்ந்த தியாகிகளுக்கும் மரியாதை தாருங்கள். அவர்களுக்கும் அங்கீகாரம் தாருங்கள். வரலாற்றைச் சரியாக எழுதுவோம். பள்ளி பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் சொல்லித் தருவோம்!
– இவ்வாறு மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா உரையாற்றினார்.
