ரூ.1000 வழங்குவது தொடக்கம் மட்டும்தான்: ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ நிச்சயம் உயர்த்தப்படும்! ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ விழாவில் முதலமைச்சரை மு.க.ஸ்டாலின் உறுதி!

6 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

செனை, டிச.13– தமிழ்நாட்டில் இனி 1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 மகளிர்க்கு மாதா மாதம் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் மூலம் ரூ. 1000 வழங்கப்படும்; இந்த ஆயிரம் ரூபாய் என்பது தொடக் கம்தான், நிச்சயம் உரிமைத் தொகை உய ரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் கள் “வெல்லும் தமிழ்ப் பெண்கள் சாதனை விழாவில் இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (12.12.2025) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தமிழ்நாட்டின் சாதனைப் பெண்களின் வெற்றிக் கொண்டாட்டம் விழாவில், ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, ஆற்றிய உரை வருமாறு:

நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்து மூன்று மணிநேரம் ஆகியிருக்கிறது. இங்கே பேசிய எல்லோருடைய பேச்சையும் கேட்டேன் என்று சொல்வதைவிட, நெஞ்சை உருக்குகின்ற, தன்னம்பிக்கையையும், புது நம்பிக்கையையும் கொடுக்கும் உங்களின் கதைகளை, பேச்சை கேட்டு, மகிழ்ச்சியில் என்று சொல்வதை விட, நெகிழ்ச்சியில் இருந்தேன் என்று தான்சொல்ல வேண்டும்! உள்ளத்திலிருந்து பேசிய உங்களுக்கும் – உற்சாகமாக கைத்தட்டல்களை வழங்கிய சகோதரிகள் அனைவருக்கும் என்னுடைய நன்றி! நன்றி! நன்றி!

என்னுடைய நன்றி என்பது, இந்தக் கடமையை சிறப்பாக, இன்னும் சிறப்பாக ஆற்ற வேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடு! இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இரண்டு பேரை அழைத்திருந்தோம். ஒருவர் மரியாதைக்குரிய அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள்; தன்னுடைய 100 வயதில் நிறைவாழ்க்கை வாழ்ந்து, பொது வாழ்க்கையில் வெற்றி பெற்றவர். மிகவும் பொருத்தமானவர்;

மற்றொருவர் இளம் வெற்றியாளர் சகோதரி துளசிமதி முருகேசன். எவ்வளவு சிறப்பாக பேசினார். விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல; அரசியல் துறைக்கும் வந்தாலும், இவர்கள் தான் நம்பர்–1–ஆக இருப்பார்.

இந்த வயதில், அனைத்து சவால்களையும் வென்று, சாதனை செய்திருக்கிறார்; அவரும் மிகவும் பொருத்தமானவர். இவர்களை விட சிறப்பான விருந்தினர்கள் யாரும் இருக்கவே முடியாது.

சமத்துவ சமுதாயமே நம்முடைய இலட்சியம்!

நாம் வாழும் சமூகம் – ஜாதி – மத – இன – மொழி – பாலின பாகுபாடு இல்லாமல், “எல்லாருக்கும் எல்லாம்” என்ற சமத்துவ சமுதாயமாக இயங்க வேண்டும் என்பதுதான் நம்முடைய இலட்சியம்! அதனால்தான், 2021 மே 7–ஆம் நாள், தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்றவுடனே, “நம்முடைய அரசு, திராவிட மாடல் அரசு” என்று சொல்லி, ஏராளமான முன்னோடி திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கினேன்.

நம்முடைய இலட்சியப் பயணத்தில் மிகப்பெரிய முன்னெடுப்பாக, வரலாற்றை திருத்தி எழுதும் திட்டமாக அமைந்திருப்பதுதான் “கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்”! இந்த திட்டத்தை அறிவிக்கும்போதே, தெளிவாக சொல்லிவிட்டோம் – இது உதவித்தொகை இல்லை; உரிமைத்தொகை! திட்டங்கள் என்பது, கொள்கைகளின் சிந்தனைகளின் செயல்வடிவம்! ஒரு திட்டத்தின் வெற்றி என்பது, அதை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் மட்டுமல்ல; அந்தத் திட்டத்தை பொதுமக்கள் எந்தளவுக்கு சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு, தங்களின் வாழ்க்கைத்தரத்தை, சமூக நிலையை மேம்படுத்திக் கொள்கிறார்கள் என்பதில்தான், அந்த திட்டத்தின் உண்மையான வெற்றி இருக்கிறது! அந்த வகையில், ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்’ மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது!

பெரும்பாலும், மாநிலத்தில் இருக்கின்ற மகளிர்  மாதம் ஆயிரம் ரூபாயை பெறுகிறார்கள்; ‘விடியல் பயண’த்தில், மாதந்தோறும் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் மீதமாகிறது. ‘புதுமைப் பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களில் தங்களின் பிள்ளைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைப்பதால், அந்த வகையிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் பணப்புழக்கமும், சேமிப்பும் அதிகரித்திருக்கிறது.

இப்படி திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்களை முதலீடாக மாற்றி, தங்களின் பொருளாதார வலிமையை தமிழ்நாட்டுப் பெண்கள் உயர்த்திக்கொள்கிறார்கள். இதைதான், இந்தத் திட்டத்தின் வெற்றியாக நான் பார்க்கிறேன். இது நேரடியான பலன்கள் என்றால், கையில் காசு இருப்பதால் பெண்களுக்கு கூடும் சமூக மதிப்பு – அந்த பணத்தால், சத்தான காய்கறிகளை வாங்குவது – குழந்தைகளுக்கான கல்விக்கு செலவிடுவது என்று வாழ்க்கைத்தரம் உயரவும், மறைமுகமாகவும் இது உதவிக்கொண்டு இருக்கிறது!

இங்கு பேசியதை எல்லோரும் கேட்டீர்கள் – கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் – நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டம் – விடியல் பயணம் – மக்களைத் தேடி மருத்துவம் – சுய உதவிக் குழுக்கள் – வெற்றி நிச்சயம் – நலம் காக்கும் ஸ்டாலின் – பெண் தொழில் முனைவோர் – விளையாட்டு – தோழி விடுதிகள் என்று நம்முடைய திராவிட மாடல் அரசின் எண்ணற்ற திட்டங்களால் பயனடைந்த “வெல்லும் தமிழ்ப் பெண்களாக” அவர்களின் வெற்றிக்கதைகளை சொல்லும்போது, திராவிட இயக்கத்தின் தொண்டனாக, எனக்கு அளவில்லாத பெருமை உண்டாகியிருக்கிறது!

கொச்சை படுத்தியவர்களும் செயல்படுத்துகின்றனர்!

இந்த ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட’த்தின் வெற்றியின் உச்சம் என்ன தெரியுமா? அண்டை மாநிலங்கள்கூட இந்தத் திட்டத்தை தங்களுடைய மாநிலங்களில் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்! இன்னும் சொல்கிறேன்… மக்கள்நலத் திட்டங்களை இலவசங்கள் என்று கொச்சைப்படுத்துகின்றவர்கள் கூட இந்த திட்டத்தை, அவர்கள் மாநிலத்தில் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், சத்திஸ்கர், ஒடிசா, புதுச்சேரி – அதுமட்டுமல்ல, தற்போது கருநாடகா, ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம், மேற்குவங்கம், சிக்கிம் என பத்து மாநிலங்களில் உரிமைத் தொகை – மகளிர் மறுமலர்ச்சிக்கான திட்டமாக உயர்ந்து நிற்கிறது! இதையெல்லாம் நான் மேடை அலங்காரத்தி ற்காக, பெருமைக்காக சொல்கிறேன் என்று யாரும் கருதவேண்டாம். நாம் கொண்டு வந்து செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தால், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து, பொருளாதார அறிஞர்கள் ஆய்வு செய்து, அறிக்கையாகவே வெளியிட்டிருக்கிறார்கள்!

‘தினத்தந்தி’ நாளேடு பாராட்டு!

முன்னணி ஊடகங்கள் பலவற்றில் தலையங்கங்களும் வந்திருக்கிறது – கட்டுரைகளும் வெளியாகியிருக்கிறது! கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27–ஆம் தேதி, ‘தினத்தந்தி’ பத்திரிகையில் ஒரு தலையங்கம் எழுதியிருந்தார்கள். அந்தத் தலையங்கத்தில், ஒரு கார்ட்டூனும் போட்டிருந்தார்கள்… அதில், மகளிர் சுயமரியாதையோடு வாழ, நான் மூன்று திட்டங்களை செயல்படுத்தியிருப்பதாக போட்டு, புதுமைப்பெண் திட்டம் – விடியல் பயணம் – நடுநாயகமாக இருக்கக்கூடிய கலைஞர் உரிமைத்திட்டம் ஆகிய அரியணைகளில் பெண்கள் உட்கார்ந்திருப்பதாக வரைந்திருந்தார்கள்.

அதோடு, மகளிர் சமுதாயத்தை கைதூக்கி விடுவதற்காக இந்தத் திட்டங்கள், காலா காலத்திற்கும் பெயர் சொல்லும் திட்டங்களாக இருக்கும்” என்று பாராட்டி எழுதியிருந்தார்கள்! இந்த பாராட்டுகளை எல்லாம் தலையில் ஏற்றிக்கொள்ளாமல், நெஞ்சில் ஏந்தி, தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞர் ஆகியோர் வழங்கியிருக்கும் உணர்வோடு சொல்கிறேன்… இந்த ஆயிரம் ரூபாய் என்பது, ஒரு தொடக்கம் மட்டும்தான்!

1,30,69,831 சகோதரிகளுக்கு மாதாமாதம் உதவித்தொகை!

பத்தாண்டுகள் பாழ்படுத்தப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீட்டெடுத்து, வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு – இந்தியாவிலேயே எந்த மாநிலமும் சாதிக்காத அளவுக்கு பொருளாதாரம் வளர்ச்சி அடையும். 16 விழுக்காடு GSDP பொருளாதார வளர்ச்சியை நம்முடைய திராவிட மாடல் அரசு சாத்தியப்படுத்தியிருக்கிறது! இந்த வளர்ச்சியில் மகளிருக்கான பங்கு நிச்சயம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன்!

‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட’த்தில் இதுவரைக்கும் – ஒரு கோடியே 13 இலட்சத்து 75 ஆயிரத்து 492 சகோதரிகளுக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் என்று இதுவரைக்கும் 28 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறோம்! எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று சொன்னேன். அதற்காக, மக்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலமாக, விடுபட்ட மகளிரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து இன்றைக்குக் (12.12.2025) காலையில், 16 இலட்சத்து 94 ஆயிரத்து 339 பேருக்கு அக்கவுண்ட்டில் ஆயிரம் ரூபாய் போட்டுவிட்டோம்! இனிமேல், தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கோடியே 30 இலட்சத்து 69 ஆயிரத்து 831 சகோதரிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதா மாதம் தொடர்ந்து கிடைக்கும்!

தலைநிமிரும் தமிழ்நாட்டில், பெண்கள் உயர்ந்து நடைபோட, நிச்சயம் உரிமைத்தொகையும் உயரும்! பெண்களின் உரிமையும் உயரும்! உறுதியாக சொல்கிறேன்… எதிர்காலத்தில் வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றை எழுதும்போது, “மகளிர் முன்னேற்றத்தின் புதிய அத்தியாயத்தை ஸ்டாலினுடைய திராவிட மாடல் ஆட்சியில் தொடங்கியது” என்றுதான் எழுதுவார்கள்! இந்த உரிமைத்தொகை உங்களின் உயர்வுக்குமட்டுமல்ல – உங்கள் மகள்களின் – மகன்களின் கல்விக்குப் பயன்பட வேண்டும் என்று விரும்புகிறேன்!

கல்விதான் சிறந்த முதலீடு! யாராலும் அழிக்க முடியாத சொத்து! தலைமுறைகள் தழைக்க பெண்கள் முன்னேற்றமும், அதற்கு பெண் கல்வியும் அவசியம்! நீங்கள் முன்னேறி வந்து, சிறகடித்து பறக்க வேண்டும்! ஆணும், பெண்ணும் சரிநிகர் என்று சாதனைகள் படைக்க வேண்டும்! அதற்கு, உங்கள் சகோதரனாக – உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றைக்கும் இருப்பேன்! இருப்பேன்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *