டில்லி, டிச.13 அனுராக் தாக்கூர் இவருக்கு பாஜக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரே தகுதியாக மோடி எதிர்பார்த்தது இவரது அடாவடி தான்.
டில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பின் வன்முறையும், புதிய குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டதிலும் இவரது பங்கு அளப்பரியது.
‘‘இவர் பொதுவெளியில் போராட்டக் காரர்களை சுட்டுக்கொல்லுங்கள் துப்பாக்கி நான் தருகிறேன்’’ என்றார். இவர் சொல்லிய சில நாட்களுக்குப் பிறகு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் ஆதாரவாளர் துப்பாக்ககிச் சூடு நடத்தினார். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. 27.01.2020 அன்று டில்லி மாநில சட்டமன்ற தேர்தல் பரப்புரையிலும் நாட்டிற்கு எதிரானவர்களை சுட்டுத்தள்ளுங்கள் என்று பேசினார். இவர் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுதான் இவர் பாஜக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தகுதியாக எடுத்துக்கொண்டார் மோடி.இவர் தான் நேற்று (12.12.2025) மக்களவையில் பேசுகையில், இந்த அவையில் ஒரு முக்கிய விவகாரத்தை எழுப்ப விரும்புகிறேன். நாட்டில் ஒரு மாநிலமே ஸநாதனத்துக்கு எதிரான மாநிலமாக மாறி வருகிறது. . கோயிலுக்குச் செல்வதற்கு, பக்தர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தீபம் ஏற்ற கோயிலுக்குச் சென்றால், அங்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தீபம் ஏற்ற நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தாத அரசுக்கு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடுமையான விமர்சனத்தையும் முன் வைத்துள்ளது. அதற்காகப் போராடிய ஹிந்து பக்தர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது.அங்கு நீதிமன்ற அவமதிப்பு நடந்துள்ளது. ஏன் ஒரு ஹிந்துக் கோயிலில், பக்தர்களை தீபம் ஏற்ற அரசு அனுமதிக்கவில்லை என்று கூறினார்.
அனுராக் தாக்கூர் இவ்வாறு பேசியபோது, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையின் முன் பகுதிக்கு வந்து முழக்கம் எழுப்பினர். இதனால், அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. அமைதி ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் பலனளிக்காததால் அவை சற்று நேரம் ஒத்திவைக்கப்பட்டு பிறகு கூடியது.
வன்முறைப் பேச்சிற்கு புகழ்பெற்ற ஒருவர் அவையில் அரசு விளக்கேற்ற ஹிந்துக்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்கிறார். தடியடி நடத்தி விளக்கேற்ற வந்தவர்களை விரட்டினார் என்று இல்லாத ஒன்றைக் கூறுகிறார். ஆனால் அவைத்தலைவர் ஓம்பிர்லா புன்னகையோடு அவரது பேச்சை தொடர்ந்து அனுமதிக்கிறார். இவர் பேசி முடித்ததும் டில்லியில் தமிழ்நாடு முதலமைச்சரின் உருவப்படத்தை வைத்து பாஜகவினர் கொடும்பாவி எரித்தனர். அதில் ஹிந்துக்களின் எதிரியே, ஸநாதனத்தை கொச்சைப்படுத்தாதே, ஹிந்துக்கள் மீது தடியடி நடத்திய தமிழ்நாடு அரசே, என்று சத்தம் எழுப்பினர்!
