புதுடில்லி, டிச.13- விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிய தலைவர்களைத் தாக்கி ஆர்எஸ்எஸ் – பாஜக குண்டர்கள் கடத்தியதற்கு அய்க்கிய விவசாயிகள் முன்னணி கடும் கண்டனம் தெரிவித் துள்ளது.
பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தின் கியோஞ்சர் மாவட்டத்தில் பாஜகவின் ஜிண்டால் – தென் கொரியாவின் போஸ்கோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருக்காலை அமைக்க உள்ளன. இந்த உருக்காலை அமையவுள்ள பகுதிகள் வளமான விவசாய நிலங்கள் ஆகும். இந்த விவசாய நிலங்களை விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி ஒடிசா பாஜக அரசு ஜிண்டால் – போஸ்கோ நிறுவனங்களுக்கு தாரைவார்த்துள்ளது.
விவசாயிகள் போராட்டம்
கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக விவசாய நிலங்களை பறிப்பதை கண்டித்து “ஜிண்டால் போஸ்கோ புரோதிரோத் மன்ச் (Jindal Posco Protirodh Manch)” என்ற பெயரிலான எதிர்ப்பு இயக்கத்தின் கீழ், கியோஞ்சர் மாவட்டத்திற்குட்பட்ட கிராம விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டிசம்பர் 9 அன்று கியோஞ்சர் மாவட்டத்தின் ஜமுனாபோசி கிராமத்தில் ‘ஜிண்டால் போஸ்கோ புரோதிரோத் மன்ச்’ சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அய்க்கிய விவசாயிகள் முன்னணியின் (எஸ்கே எம் – சம்யுக்த கிசான் மோர்ச்சா) தேசிய தலைவரும், அகில இந்திய விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பின் (AIKKMS) தலைவருமான சத்யவான் மற்றும் பிற விவசாய தலைவர்கள் உரையாற்றி திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல் சத்யவான் மற்றும் பிற விவசாயத் தலைவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல், அவர்களை கடத்திச் சென்று கியோஞ்சர் காவல் நிலையத்தில் குற்றவாளிகளைப் போல ஒப்படைத்துள்ளது ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல்.
கண்டனம்
இத்தகைய சூழலில், சத்யவான் உள்ளிட்ட விவசாயிகள் தலைவர்கள் மீதான தாக்குதலுக்கு அய்க்கிய விவசாயிகள் முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அய்க்கிய விவசாயிகள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சத்யவான் உள்ளிட்ட விவசாயிகள் தலைவர்கள் மீதான தாக்குதல் மற்றும் அவர்களை கடத்திச் சென்றதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒடிசா பாஜக அரசாங்கம் இந்த விவகாரத்தில் நடுநிலை வகிப்பதுபோல காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. ஆனால் தேசபக்தி கொண்ட போராட்டக்காரர்களை அச்சுறுத்துவதற்கான ஒரு தீய முறையையும் ஆதரித்தும் வருகிறது. சத்யவான் மற்றும் பிற தலைவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆர்எஸ்எஸ் – பாஜக குண்டர்கள் லத்திகள் மற்றும் பிற ஆயுதங்களுடன் தாக்கியுள்ளனர். இதில் சத்யவானின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்எஸ்எஸ் – பாஜக குண்டர்கள் தலைவர்களைக் கடத்திச் சென்று, கியோஞ்சர் மாவட்டத்தின் துருமங்கா காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு காவல்துறையினர் தலைவர்களைப் பல மணி நேரம் சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தனர். காவல் நிலையத்திற்கு வெளியேயும் உள்ளேயும் தலைவர்களின் கைபேசிகளைப் பறிக்க குண்டர்கள் பலமுறை முயன்றனர். குறிப்பாக காவல்நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்ட தலைவர்களை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
