சென்னை, டிச. 13- மேகதாட்டு அணை தொடர்பாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் பெரிய அணை கட்ட கருநாடக அரசு முயற்சித்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் ஆணை கடந்த நவம்பர் 22இல் வெளியானது.
அதில், மேகதாட்டு அணை தொடக்க நிலையில் தான் உள்ளது. இத்திட்டம் உச்ச நீதிமன்ற முந்தைய தீர்ப்புக்கு உட்பட்டதா என்பதை நிபுணர்கள் அடங்கிய ஒன்றிய நீர்வளக் குழுமம் தான் தீர்மானிக்க முடியும். மேலும், தமிழ்நாடு தனது வாதங்களை ஒன்றிய நீர்வளக் குழுமத்திடம் முன்வைக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தீர்ப்பில் தெரிவிக் கப்பட்டுள்ள சில கருத்துகளும் முரணாக உள்ளன. எனவே, இந்த வழக்கில் தமிழ்நாடு சார்பாக வாதிடும் மூத்த வழக்குரைஞர்களின் ஆலோசனையின்படியும், முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படியும் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழ்நாடு அரசு தற்போது மனு தாக்கல் செய்துள்ளது.
அத்துடன், ஒன்றிய நீர்வளக் குழுமத்திடமும், மேகதாட்டு அணை எவ்வாறு தமிழ்நாட்டிற்குப் பாதகமாக இருக்கும் என்பதைக் குறிப்பிட்டு ஒரு விரிவான மனு அளிக்கப்பட்டுள்ளது. டெல்டா விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கருநாடகாவின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
