கேள்வி 1: தமிழ்நாட்டில் என்றைக்கும் பெரியார் ஏற்றிய தீபம்தான் ஒளிரும். பெரியார் ஏற்றிய நெருப்பு 2026-லும் அதே ‘ஃபயர்’ உடன் ‘திராவிட மாடல்’ அரசு தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உற்சாகத்துடன் பேசியிருப்பது, தந்தை பெரியாரின் பேருழைப்பால் ஏற்பட்ட பயன் என்று கருதலாமா?
– செல்வி பாபு, மானாமதுரை.
பதில் 1: தோழரே, அதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படலாமா?

கேள்வி 2: தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக (அக்டோபர்-15) நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பியிருந்த சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பியிருப்பது ஏற்புடையதா?
– கி. கோவிந்தராஜ், வந்தவாசி.
பதில் 2: விஷமத்தனம். வம்பு செய்யும் வக்கிரப் புத்தி. தமிழ்ப் பண்பாடு, மருத்துவ எதிர்ப்பின் வெளிப்பாடு!
கேள்வி 3: “நீதித்துறையை அடிபணியச் செய்ய அச்சுறுத்துகிறது ‘இந்தியா’ கூட்டணி” என்று பா.ஜ.க.வின் அண்ணாமலை கூறியுள்ளாரே?
– ஓவியன், அரும்பாக்கம்
பதில் 3: அரைவேக்காடு – அண்ணாமலைகளுக்கு நம் கேள்வி! நீதித்துறையின் மீது வெறுப்புக் காட்டி பணிய வைப்பது யார்? டில்லி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீசிய செருப்பர்கள் எந்த அமைப்பைச் சார்ந்தவர்கள்? பணிய வைக்க பயமுறுத்த முற்படுவோர் யார்?

கேள்வி 4: “உயர்கல்வி நிறுவனங்களில் 3ஆம் மொழியை கட்டாயமாக்கும் பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆணையை, தமிழ்நாட்டில் செயல்படுத்தக்கூடாது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி இருப்பது ஏற்றுக்கொள்ளப்படுமா?
– க. தமிழ்ச்செல்வி, செய்யாறு.
பதில் 4: அவர் கூறிய கருத்துப்படி, நாம் நமக்கென பல்கலைக்கழகத்தில் – ஒத்திசைவுப் பட்டியலின்படி, கட்டாயத் திட்டத்தை – திணிக்கும் திட்டத்தை ‘திராவிட மாடல்’ அரசு ஒருபோதும் ஏற்காது, அனுமதிக்காது!
கேள்வி 5: “பகவத் கீதையும், அரசியல் அமைப்புச் சட்டமும் ஒன்றுதான்” என்று ஆந்திர துணை முதலமைச்சரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்திருப்பது அரசியல் சட்டத்திற்கு முரணான கருத்து அல்லவா?
– அ. ஆசைத்தம்பி, அய்தராபாத்.
பதில் 5: மனக்குழப்பத்தின் உச்சம்! உளறலில் ஒண்ணாம் நம்பர்!

கேள்வி 6: “கிரிமிலேயர் கொள்கைக்கு ஆதரவாகப் பேசியதால் சொந்த சமூகத்தினரால் விமர்சிக்கப்பட்டேன்” என்று உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மும்பை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியிருப்பதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
– சு. முத்தியாலம்மாள், வடபழனி.
பதில் 6: அதில் அவரது கூற்று (பேச்சு) தெளிவற்றதாகும். சமூக நீதிக்கு எதிரான நம்மால் ஏற்க முடியாத கருத்து ஆகும்.
கேள்வி 7: இந்தியாவில் பச்சிளம் குழந்தைகள் குடிப்பதற்குக்கூட பால் இன்றியும், அணிவதற்கு ஆடை இன்றியும் அல்லல்படும் அவலநிலையில், சபரிமலையில் மண்டல பூஜையின்போது அய்யப்பன் சிலைக்கு தங்க அங்கி அணிவித்து அழகு பார்ப்பது அவசியம்தானா?
– ம. பாலகிருஷ்ணன், பாலக்காடு-கேரளா.
பதில் 7: பக்தியின் பேரால் படுநாசம் – பொருளுக்கும் புத்திக்கும்! என்பதற்கு இதைவிட நல்ல உதாரணம் வேறு உண்டா?
கேள்வி 8: “தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து வாக்குகளை திருடுவது மிகப்பெரிய தேச விரோதச் செயல்!” என்று மக்களவையில் எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆவேசமாகப் பேசியிருப்பதை சம்பந்தப்பட்ட தேச பக்தர்கள் உணர்வார்களா?
– பி. அக்சயா, ஆயிரம்விளக்கு.
பதில் 8: ‘தேசபக்தி’க்கும் ஹிந்துத்துவா காவிகளுக்கும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட கதைதான்!
கேள்வி 9: இந்தியாவில் நாள்தோறும் டன் கணக்கில் பிளாஸ்டிக் உற்பத்தியும், அதன் பயன்பாடும் கொஞ்சமும் குற்ற உணர்வின்றி மக்களிடையே நடைபெற்று வருவதைத் தடுக்கும் பொருட்டு, அதற்குரிய மாற்று ஏற்பாட்டை ஒன்றிய-மாநில அரசுகள் மேற்கொள்ளுமா?
– இரா. அலமேலு, செங்குன்றம்.
பதில் 9: இதில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் நிலவரம் பற்றிய கவனம் முக்கியமான அவசரத் தேவையாகும் – ஒன்றிய, மாநில அரசுகளுக்கு!
கேள்வி 10: முதன் முறையாக உலக ஜூனியர் ஆக்கிப் போட்டிக்கு நான்கு பெண் நடுவர்களை நியமித்திருப்பது ‘பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி’ என்று பெருமிதம் அடையலாம் அல்லவா?
– ஜெ. இராஜேஸ்வரி, மேல்மருவத்தூர்.
பதில் 10: பெருமிதப்பட வேண்டிய பெருவெற்றி. மனுதர்மத்தின் மரண ஓலம்!
