புதுடில்லி, டிச. 12- வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்ததாக ஒன்றிய அரசு கொண்டாடுவதைக் யொட்டி மாநிலங்களவையில் 10.12.2025 அன்று சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, வந்தே மாதரத்தின் 50-ஆவது ஆண்டு விழாவின்போது, அதை இரண்டாகப் பிளந்து இரண்டு சரணங்களாகச் சுருக்கியுள்ளார்.
இதுதான் காங்கிரஸ் கட்சி ‘வந்தே மாதரம்’ பாடலை மதித்த லட்சணம். அது பிரிவினைக்கு வழிவகுத்தது. ‘வந்தே மாதரம்’ பாடல் குறைக்கப்படாமல் இருந்திருந்தால் நாடும் பிரிவினையைச் சந்தித்து இருக்காது.
‘வந்தே மாதரம்’ 100 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, ‘வந்தே மாதரம்’ எனச் சொன்னவர்கள் இந்திரா காந்தியால் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அவசரநிலை அமல்படுத்தப்பட்டது, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.
கார்கேவின் பதிலடி
அமித் ஷாவின் உரைக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, “வந்தே மாதரம்” என்ற முழக்கத்துடன் தனது உரையைத் தொடங்கினார். அப்போது அவர் பாஜகவை கடுமையாக சாடினார்: காங்கிரஸ்தான் வந்தே மாதரத்தை சுதந்திரத்திற்கான முழக்கமாக மாற்றியது. காங்கிரஸ் அதன் மாநாடுகளில் வந்தே மாதரம் பாடும் பாரம்பரியத்தைத் தொடங்கியது. நீங்கள் (பாஜக) அதைச் செய்தீர்களா?
தேசபக்தி
பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஜவஹர்லால் நேருவை அவமதிக்கும் வாய்ப்பை ஒருபோதும் தவறவிடுவதில்லை.உள்துறை அமைச்சர் இன்று முஸ்லீம் திருப்திப்படுத்தியதாக பேசுகிறார். நீங்கள் இப்போது இதைப் பற்றிப் பேசுகிறீர்களே, முஸ்லிம் லீக்குடன் கூட்டணி வைத்து வங்காள தேசத்தில் நீங்கள் ஒரு அரசாங்கத்தை அமைத்தபோது, உங்கள் தேசபக்தி எங்கே இருந்தது? உங்கள் வரலாற்றைப் படியுங்கள். ‘வந்தே மாதரம்’ தீர்மானம்: நேருவை மட்டும் குறிவைப்பது ஏன்? கார்கே, வந்தே மாதரத்தின் சில பகுதிகளை நீக்கியது குறித்து நேரு மீது மட்டும் குற்றம் சாட்டப்படுவதை மறுத்தார்: 1937 ஆம் ஆண்டு காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, தேசிய நிகழ்வுகளில் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாட வேண்டும் என்று பரிந்துரைத்தது. நேரு மட்டுமா தனியாக தீர்மானத்தை நிறைவேற்றினார்? காந்தியார், மவுலானா ஆசாத், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட தலைவர்கள்தான் தீர்மானத்தை ஆதரித்தார்கள். ஏன் நேருவை மட்டும் குறிவைக்கிறீர்கள்? அவரது பிம்பத்தை குறிவைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், அது சாத்தியமற்றது.
இந்த நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளுக்காக உழைப்பது மட்டுமே பாரத மாதாவுக்கு செலுத்தும் உண்மையான மரியாதை ஆகும். விடுதலைப் போரில் லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் சிறையில் ‘வந்தே மாதரம், பாரத மாதாவுக்கு ஜே’ என சொல்லிக் கொண்டு இருந்த போது, பிரிட்டிஷாருக்கு வேலை செய்து கொண்டிருந்த நீங்கள், இன்றைக்கு தேசப்பற்று குறித்து பாடம் எடுக்கிறீர்களா? தேசப்பற்று என்ற சொல்லைக் கேட்டு பயந்தவர்கள் நீங்கள்.” இவ்வாறு கார்கே பேசினார்.
