திருப்பரங்குன்றமே தீரவில்லை – திண்டுக்கல் பக்கம் வண்டியை திருப்பும் பா.ஜ.க.!

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மூக்கை  நுழைத்த பாஜக, அடுத்ததாக திண்டுக்கல் பக்கம் தனது பார்வையைத் திருப்பி இருக்கிறது. ‘திண்டுக்கல்லின்  மலைக்கோட்டை உச்சியில் அபிராமி அம்மன் சிலையை வைத்து வழிபட வேண்டும்’ என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. முன்னோட்டமாக மலைக்கோட்டையை பார்வையிட்டு இருக்கிறார் பாஜக இளைஞரணி செயலாளரான எஸ்.ஜி.சூர்யா.

பல ஆண்டு காலம் அமைதியாக இருந்த திருப்பரங்குன்றம் விவகாரம் மீண்டும் வெடித்துக் கிளம்பி இருக்கிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென மதுரையைச் சேர்ந்த இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

விசாரணையைத் தொடர்ந்து மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி மதுரை மாவட்ட நிர்வாகம் அதற்கு அனுமதி மறுத்தது. உடனடியாக அங்கு திரண்ட பாஜகவினரும் இந்து முன்னணியினரும் தொடர்ந்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். ‘பாரத் மாதாகீ  ஜே!’, ‘ஜெய் சிறீராம்!’ முழக்கமிட்டதிலிருந்து,  இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்று தெரிந்தது.  இதையடுத்து, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எச். ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இது ஒருபுறமிருக்க, கோவில் நகரங்களை குறி வைத்து பாஜக களமிறங்க இருப்பதாக தெளிவாகவே  தெரிகிறது. ஏற்ெகனவே அதிமுக கூட்டணியில் பழனி, காஞ்சிபுரம், சிறீவில்லிபுத்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட கோவில் நகரங்கள் உள்ள தொகுதிகளை தேர்தலில் போட்டியிடக் கேட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தை அடுத்து, அதிரடியாக திண்டுக்கல் பக்கம் தனது பார்வையை பாஜக திருப்பி இருக்கிறது. அதுதான் திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்யும் விவகாரம்.

என்ன சொல்கிறார்கள்?

திண்டுக்கல் என்ற பெயர் வந்ததற்கு அதன் நடுவே இருக்கும் மிகப்பெரிய பாறை தான் காரணம். தலையணை போல இருப்பதால் ‘திண்டு’ போன்ற ‘கல்’ என்பது மருவி திண்டுக்கல் ஆனது என்று சொல்வதுண்டு. மேலும் திண்டுக்கல்லுக்கு பத்மகிரி அல்லது திண்டிசுரம் என்ற பெயர்களும் உள்ளன. ‘அனுமன் சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துச் சென்றபோது விழுந்த ஒரு சிறு கல்தான்’ திண்டுக்கல் எனவும் – வழக்கம்போல புராணப் புளுகுக்கும் பஞ்சமில்லை.

திண்டுக்கல் மய்யத்தில் அமைந்துள்ள இந்த மலை மீது ஒரு மிகப்பெரிய கோட்டை இருக்கிறது. 1605 ஆம் ஆண்டு முத்துக்கிருஷ்ண நாயக்கர் இந்தக் கோட்டையை கட்டியதாக சொல்லப்படுகிறது. காலப்போக்கில் திப்பு சுல்தான் வருகைக்குப் பிறகு அவரது கட்டுப்பாட்டில் திண்டுக்கல் மலைக்கோட்டை வந்தது. தொடர்ந்து வெள்ளையர்கள் கட்டுப்பாட்டில் இருந்த மலைக்கோட்டை சுதந்திரத்திற்குப் பிறகு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் தான் கடத்த சில ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள குளத்தை சுத்தம் செய்த போது திரிசூலம் சாமி சிலைகள் மீட்கப்பட்டன.

அப்போதிலிருந்து, ‘மலைக்கோட்டை மேல் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்தது. அது மட்டுமில்லாமல், இந்து அமைப்புகள் ‘கார்த்திகை தீபத்தை மலைக்கோட்டை மேல் இருக்கும் தீபத்தூணில் ஏற்ற வேண்டும்’ எனக் கோரிக்கையும் விடுத்து வருகின்றனர். தற்போது திருப்பரங்குன்றம் விவகாரம் பெரிதாகி இருக்கும் நிலையில், பாஜகவின் அடுத்த பார்வை திண்டுக்கல் பக்கம் விழுந்திருக்கிறது.

இதையடுத்து பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தை அறிவிக்க இருப்பதாகவும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்துத்துவவாதிகள் மலைக்கோட்டை மேல் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்யத் துடிக்கின்றனர்.

தற்போது இந்த விவகாரத்தை கையில் எடுக்க முயற்சிக்கும் பாஜக, முதற்கட்டமாக பாஜக இளைஞரணி மாநில செயலாளரான எஸ்.ஜி சூர்யாவை திண்டுக்கல் அனுப்பி வைத்துள்ளனர்.திருப்பரங்குன்றம் செல்வதற்கு முன்பாக திண்டுக்கல் வந்த அவர் மலைக்கோட்டையைப் பார்வையிட்டதோடு அதுபற்றிய தகவல்களை  சேகரித்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஜனவரி மாதத்திற்குள் இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை பாஜக தொடங்கலாம் என்று திட்டமிட்டு வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். பிஜேபி வகையறாக்களைப் பொறுத்த  வரையில் இரண்டு வகையான அஜண்டாக்கள் உண்டு. ஒன்று மறைக்கப்பட்டது (Hidden Ajenda); இதனை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். காரணம், மத வெறித்தனத்தை அடிப்படையாகக் கொண்டது – ஹிந்துத்துவா என்ற பெயரிலான பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவது. இதனை வெளிப்படையாகச்  சொன்னால், மக்்களின் கடும் எதிர்ப்பை எதிர் கொள்ள நேரிடும்.

அதனால் முதற்கட்டமாக மக்கள் மத்தியில் பாமரத்தனமாகக் குடி கொண்டிருக்கும் பக்தி மூடத்தனத்தைக் கருவியாக எடுத்துக் கொண்டு கோயில், குளம், புனஷ்காரம் என்ற பெயரால் இலாவகமாக ஊடுருவுவதுதான் அவர்களின் வெளிப்படையான அணுகுமுறை! (Direct Agenda).

தமிழ்நாட்டைப்  பொறுத்தவரை ஒரு நூற்றாண்டுக் காலம் சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாட்டால், அவர்களின் திட்டங்கள் எடுபடவில்லையென்றாலும், ஆன மட்டும், அவ்வப்போது திருப்பரங்குன்றம், திண்டுக்கல் என்று மந்தியாகத் தாவிக் கொண்டுதான் இருப்பார்கள். தமிழ்நாட்டிற்கென்று தனி மண் வாசனை (Soil Psychology) உண்டு. அது இந்தப் பிற்போக்கு சக்திகளை முற்றிலும் முறியடிக்கும் என்பது கல்லின் மேல் பொறிக்கப்பட்ட அழியா எழுத்தாகும்!

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *