நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலுவின் கேள்விக்கு ஒன்றிய அரசின் பதில்
புதுடில்லி, டிச.12 2018 முதல் 2025 வரை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் 841 நீதிபதிகளில் 49 பேர் மட்டும் பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் என ராமதாஸ் அத்வாலே தெரிவித்தார்.
கடந்த 7 ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட 841 நீதிபதிகளில், 49 பேர் மட்டுமே பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் (2%) என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நிய மிக்கப்படும் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை கடைப்பிடிக்க ஒன்றிய அரசு சட்டம் ஏதும் கொண்டு வருகிறதா என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், சட்டம் இல்லாத சூழ்நிலையில் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதில், ஒன்றிய அரசு எத்தகைய நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் வினவியிருந்தார்.
சமூகநலத்துறை அமைச்சரின்
எழுத்துப்பூர்வ பதில்!
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள ஒன்றிய சமூகநலத்துறை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, அரசமைப்பு சட்டம் 124, 217, 224 பிரிவுகளின் கீழ் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதாகவும், அதில் இடஒதுக்கீடு முறை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2025 நவம்பர் வரை 841 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 32 பேர் பட்டியலினத்தவர் என்றும், 17 பேர் பழங்குடியினர் என்றும் தெரிவித்துள்ளார்.
129 பெண்கள் நீதிபதிகளாக…
மேலும், 103 இதர பிற்படுத்தப்பட்டோர், 46 சிறு பான்மையினர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 129 பெண்களும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
பொதுப் பிரிவினர் 76.45% ஆவர்.
பட்டியலினத்தவர் 3.8%
பழங்குடியினர் 2%
பிற்படுத்தப்பட்டவர் 12.2%
சிறுபான்மையினர் 5.5%
பெண்கள் 14%.
