சென்னை, டிச. 11- துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில், 11.50 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த, விமான ஊழியர்கள் இருவர் உட்பட அய்ந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
தங்கம் கடத்தல்
துபாயில் இருந்து சென்னைக்கு வரும், ‘எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்’ விமானத்தில், அந்த விமான நிலைய ஊழியர்களே தங்கம் கடத்தி வருவதாக, சென்னை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து உள்ளது.
இதையடுத்து, காலை 8 மணிக்கு, விமானத்தில் இருந்து பயணியர் வெளியேறிய பின், விமான நிலைய ஊழியர்கள் வெளியே வந்தனர். அவர்களில், ஆண் ஊழியர்கள் இருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை விமான நிலையத்தில் உள்ள, சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அவர்கள் உடல் முழுதும், 10 இடங்களில், ‘ஸ்டிக்கர்’ ஒட்டி, 11.50 கோடி ரூபாய் மதிப்புள்ள, 9 கிலோ, 460 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில், அவர்களுடன் சென்னைக்கு வந்த நபர் ஒருவர், விமானம் புறப்பட இருந்த நான்கு மணி நேரத்திற்கு முன், இந்த தங்கத்தை கொடுத்ததாகவும், அந்த நபர், சென்னை விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருப்பதாகவும் தெரிவித்தனர்.
நாங்களும் அந்த ஓட்டலுக்கு சென்று தங்குவோம். அங்கு, அந்த நபரிடம் தங்கத்தை ஒப்படைத்து விட்டு, தரகாக பல லட்சம் ரூபாயை பெற்றுக்கொள்வோம். கடத்தல் தங்கத்தை வாங்கிச் செல்ல, அந்த ஓட்டலுக்கு அருகே இருவர் காத்திருப்பர் என, தெரிவித்தனர்.
விமான ஊழியர்கள்
இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சென்று, தங்கம் கடத்தல் சம்பவத்தின் முக்கிய புள்ளியையும், அவரிடம் தங்கத்தை வாங்கிச் செல்ல காத்திருந்த இருவர், விமான ஊழியர்கள் இருவர் உட்பட அய்ந்து பேரையும் கைது செய்தனர்.
தங்கம் கடத்தலில் ஈடுபட்ட நபர்களின், ‘நெட் ஒர்க்’ குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
