சென்னை, டிச. 10- அரசு மருத்துவ மனைகளில் 42 மருத்துவ உதவியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கு இணைய வழியில் விண்ணப் பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நேற்று (9.12.2025) வெளியிட்ட அறிவிப்பில் கூறப் பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசின் பொது சுகாதார சார்நிலைப் பணியில் கள உதவியாளர் பதவிகள்: 42 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பதவிக்கு பிளஸ் 2 (12-ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் பாடத்தில் ஓராண்டு காலச் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். இந்தப் படிப்புக்கு தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககத்தின் அங்கீகாரம் அவசியம்.
விண்ணப்பதாரர்கள் நல்ல உடல்நலமும், நல்ல கண் பார்வையும் பெற்றிருக்க வேண்டும். களப்பணியைச் செய்யக்கூடிய ஆற்றலும் அவசியம்.
வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு: 32 வயது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் பொதுப் பிரிவில் உள்ள ஆதரவற்ற விதவைகளுக்கு: வயது வரம்பு கிடையாது.
தகுதியான நபர்கள் ‘வெயிட்டேஜ்’ (Weightage) முறையில் தேர்வு செய்யப்படுவர். மொத்த 100 சதவீத வெயிட்டேஜ் பின்வருமாறு:
தேர்வு வெயிட்டேஜ் சதவீதம் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பச் சான்றிதழ் தேர்வு 50% பிளஸ் 2 தேர்வு 30%எஸ்.எஸ்.எல்.சி (10-ஆம் வகுப்பு) தேர்வு 20%.
மொத்த காலியிடங்களில், தமிழ் வழி படித்தவர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: உரிய கல்வித் தகுதியும், வயது வரம்பும் உடையவர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப் பட்டுள்ளது.
