காரைக்கால், டிச.10– “நீட்” தேர்வில் எப்படி தற்கொலைகள் நடக்கின்றனவோ அதுபோலவே இந்திய தேர்தல் கமிஷன் நடத்தும் “S.I.R.” லும் தற்கொலைகள் நடக்கின்றன என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காரைக்காலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
“இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் தமிழ் நாடு தழுவிய அளவில் நடைபெற்று வரும் தொடர் பரப்புரைக் கூட்டம், காரைக்கால் பகுதி திராவிடர் கழகம் சார்பிலும், 8.12.2025, திங்கட்கிழமை அன்று, திருநள்ளாறு சாலையில் உள்ள கப்பப்பா காலனி அருகில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுயமரியாதைச் சுடரொளிகள் காரை சி.மு.சிவம், ஜி.கே.நாராயணசாமி, ரெ.ஜெயபாலன், ந.சு.தமிழ்ச்செல்வன் ஆகியோரின் நினைவாக மேடை அமைத்து சமுகத் தொண்டு செய்த பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பெருமை சேர்க்கப்பட்டிருந்தது.
நிகழ்வில், மாவட்டச் செயலாளர் பொன்.பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்க, மாவட்டத் தலைவர் குரு.கிருட்டிணமூர்த்தி தலைமையேற்று உரையாற்றினார். காரைக்கால் மாவட்டத் துணைத் தலைவர்கள் மு.பி.பெரியார் கணபதி, மாவட்டக் காப்பாளர் நா.அன்பானந்தம், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் அம்பலவாணன், விவசாய தொழிலாளர் அணி மாநிலச் செயலாளர் மோகன், நாகை மாவட்டத் தலைவர் நெப்போலியன், நாகை மாவட்டச் செயலாளர் புபேஷ் குப்தா, திருவாரூர் மாவட்டத் தலைவர் சுரேஷ், இளைஞரணி மாநிலச் செயலாளர் நாத்திக.பொன்முடி, பொதுக்குழு உறுப்பினர் மகேஷ்வரி, திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர் சரஸ்வதி, காரைக்கால் மாவட்டப் பொறுப்பாளர் செந்தமிழன் ஆகியோர் முன்னிலை ஏற்றுச் சிறப்பித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கழகப் புத்தகங்களை அறிமுகம் செய்வித்து வாங்கிப் பயன் பெறுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார். மேடையை நிர்வகிக்கும் பொறுப்பை மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் மேற்கொண்டார். முன்னதாக திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் தோழர் இளமாறன் தொடக்க உரை ஆற்றினார். குறித்த நேரத்தில் கழகத் தலைவர் வருகை தந்தார். அவருக்கு மாவட்டக் கழகம் சார்பில் எழுச்சிகரமான வரவேற்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல் தவணையாக பெரியார் உலகம் நிதி வழங்கப்பட்டது. கழகத் தலைவருக்கு மாவட்டம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. இறுதியாக கழகத் தலைவர் உரையாற்றினார்.
பா.ஜ.க.கூட்டணி அரசு
மாநில அந்தஸ்தை பெற்றுத் தந்ததா?
அவர் தமது உரையை, “பெரியாரின் தொண்டு என்பது தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமல்ல இந்தியா முழுவதும் பயன் கொடுத்து வருகிறது” என்று மண்டல் கமிசனை நினைவு படுத்தி, தமிழ்நாட்டுக்காகப் போராடினாலும் ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டால் புதுச்சேரி உட்பட இந்தியாவே பயனடைந்து வருகிறது” என்று திராவிடர் கழகத்தின் தன்னலமற்ற தொண்டை நினைவூட்டி தொடங்கினார்.
அதைத் தொடர்ந்து, “காரைக்காலாக இருந்தாலும், புதுச்சேரி என்றாலும் தமிழ்நாட்டுடன் அரசியல் ரீதியாக பிரிந்திருக்கிறதே தவிர, மற்றபடி பண்பாட்டு ரீதியாக நாம் என்றும் ஒன்று பட்டு இருக்கிறோம்” என்பதை சுட்டிக்காட்டி விட்டு, “நியாயங்கள் எந்தப்பக்கம் இருக்கிறதோ நாங்கள் அந்தப்பக்கம் இருப்போம்” என்று திராவிடர் கழகத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். அத்துடன், “இங்குள்ள பா.ஜ.க.கூட்டணி அரசு புதுச்சேரிக்கு வாக்களித்தபடி மாநில அந்தஸ்தை இதுவரை பெற்றுத் தந்ததா என்று உரியவர்களைக் கேளுங்கள்” என்று விழிப்புணர்வு ஊட்டினார்.
திராவிட உத்கல வங்கா” ஆர்.எஸ்.எஸ்சின் கண்களை உறுத்துகிறது
தொடர்ந்து அவர், “ஜன கண மன அதி நாயக ஜெயகே” என்ற நாட்டுப்பண்ணுக்குப் பதிலாக, ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட “வந்தே மாதரம்” என்ற பாடல் மீண்டும் வரவேண்டும் என்று பிரதமர் மோடி கருத்திலேயுள்ளதை எடுத்துரைத்து, இப்போதிருக்கும் நாட்டுப்பண்ணில் இருக்கும் “திராவிட உத்கல வங்கா” என்பது ஆர்.எஸ்.எஸ்.சின் கண்களை உறுத்துகிறது; மனதில் கசக்கிறது” என்று பிரதமரின் அறிவிப்பின் பின்னணியில் உள்ள சூழ்ச்சியை அம்பலப்படுத்தினார். அதேசமயம், பங்கிம் சந்திரர் எழுதிய “வந்தே மாதரம்” பாடல் சிறுபான்மையினரை இழிவுபடுத்துவதாக உள்ளதால், 1938 இல் சட்டமாக்க முயற்சித்ததும், அது எதிர்க்கப்பட்டு கைவிடப்பட்டதையும் ஆசிரியர் சுட்டிக் காட்டத் தவறவில்லை.
“கொம்யூன் தேர்தலில்” கூட நிற்க மாட்டோம்!
தொடர்ந்து அவர், “திராவிடர் கழகத்தில் இருக்கும் நாங்கள் பஞ்சாயத்துத் தேர்தலில் கூட நிற்க மாட்டோம். உங்களுக்குப் புரிவதற்காகச் சொல்கிறேன், ”கொம்யூன் தேர்தலில்” கூட நிற்க மாட்டோம். ஆனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைச் சொல்லக்கூடியவர்கள் நாங்கள்” என்றார். மேலும் அவர், “நீட் தேர்வில் எப்படி தற்கொலைகள் நடக்கின்றனவோ அதுபோலவே இந்திய தேர்தல் கமிஷன் நடத்தும் S.I.R. லும், அரசு ஊழியர்களின் மன அழுத்தம் காரணமாக தற்கொலைகள் நடக்கின்றன. இவை மிகவும் கண்டனத்துக்கு உரியது என்று கூறினார்.
தமிழ்நாடு ஒருபோதும் ஏமாறாது!
தொடர்ந்து ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக பயன்படுத்தும், ”திரிசூலம்” தத்துவத்தை விளக்கினார். அந்த திரிசூலங்களான சி.பி.அய்., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுவதை நீதிமன்றங்கள், ‘வரம்பு மீறி செயல்பட்டதாக’ கண்டித்துள்ளதை எடுத்துரைத்து, ஒன்றிய அரசின் சட்ட விரோத ஆட்சியை மக்களுக்கு புரிய வைத்தார். மேலும் அவர் இன்னுமொரு சட்டவிரோதமான S.I.R. மூலம் வாக்குத் திருட்டும் அதன்மூலம் ஆட்சித் திருட்டும் நடைபெற்று வருவதை விவரித்துவிட்டு, ‘தமிழ்நாட்டிலும் பீகார் போல ஆட்சி அமைப்போம்’ என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளதை சுட்டிக்காட்டி, ”தமிழ்நாடு ஒருபோதும் ஏமாறாது” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். தொடர்ந்து, “ஆகவே, புதுச்சேரி மக்களும் ஏமாந்துவிடக்கூடாது. தமிழ்நாடு வழிகாட்டுகிறது” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இருந்து கழகத் தோழர்கள் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் வந்திருந்து இறுதிவரை இருந்து கழகத் தலைவரின் உரையைச் செவிமடுத்து பயன்பெற்றனர். காவல்துறையினர் நல்ல முறையில் பாதுகாப்பு நல்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
