சென்னை, டிச.9– சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அதன் தொடர்ச்சியாக திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடத்தினர். அங்கு பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இடைக்காலத் தடை
இந்தச் சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடமிருந்து கைப்பற்றப் பட்ட ஆவணங்களை அவரிடமே திருப்பி ஒப்படைக்க உத்தரவிட்டது. மேலும், அவருக்கு எதிராக மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என்றும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, தன்னிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும்படி அமலாக்கத்துறை மேல்முறையீட்டு அதிகாரி தனக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாகக் கூறி ஆகாஷ் பாஸ்கரன் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இதே அமர்வில் நேற்று (8.12.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை உதவி இயக்குநர் விகாஷ்குமார் ஏன் ஆஜராகவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞர்
என்.ரமேஷ், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், “இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகக் கூறியதால் நேரில் ஆஜராக வேண்டாம் என விலக்கு அளித்தோம். ஆனால், அந்த மேல் முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகியிருக்க வேண்டும்” என்று தெரிவித்தனர். அப்போது அடுத்த விசாரணையின்போது அவர் கட்டாயம் நேரில் ஆஜராவார் என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
டிசம்பர் 15ஆம் தேதி
ஆஜராக உத்தரவு
மேலும், இந்த வழக்கில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணையத் தலைவர் பிரதீப்குமார் உபாத்யாயா மற்றும் நிர்வாகப் பதிவாளர் நஸ்ரின் சித்திக் ஆகியோர் நேரில் ஆஜராக விலக்களிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு அதிகாரிகளும் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டனர். குறிப்பாக, அமலாக்கத்துறை உதவி இயக்குநரான விகாஷ்குமார் டிசம்பர் 15இல் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
