புதுடில்லி, டிச.9 அரசியலமைப்பின் முன்னுரை ‘மதச்சார்பற்ற’ மற்றும் ‘சோசலிஸ்ட்’ என்ற வார்த்தைகளை நீக்க மாநிலங்களவையில் பீகார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பீமா சிங் தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்தார்.
இந்த வார்த்தைகள் முகவுரையில் தேவையில்லை, அவசரநிலையின் போது ஜனநாயக விரோத முறையில் சேர்க்கப்பட்டன. இந்த வார்த்தைகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், அசல் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இல்லை என்று அவர் தெரிவித்தார்.
அவசரநிலையின்போது வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இது ஜனநாயகத்தின் படுகொலை. இதுபோன்ற சூழ்நிலையில்தான் இந்திரா காந்தி இந்த இரண்டு வார்த்தைகளையும் சேர்த்தார். எனவே, பின்னர் சேர்க்கப்பட்ட இந்த இரண்டு வார்த்தைகளையும் நீக்கிவிட்டு, அரசியலமைப்பு அதன் அசல் வடிவத்தில் இருக்க வேண்டும் என்று பீமா சிங் வாதிட்டார்.
