உடுப்பி, டிச.9 பகவத் கீதையும், அரசியலமைப்பு சட்டமும் ஒன்றுதான் என்று ஆந்திர துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கிருஷ்ண மடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பவன் கல்யாண் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பகவத் கீதை
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில், அரசுக் கொள்கைகளின் வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கும் பக்கத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதை உபதேசம் செய்யும் ஓவியம் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் மதிப்பீடுகளான சமூக நீதி, பொறுப்புணர்வு, சமத்துவம், நலவாழ்வு, தர்மத்தை நிலைநாட்டுதல் ஆகியவை கீதையின் சாராம்சத்திலிருந்தே உருவானவை என்பதை அந்த ஓவியம் உணர்த்துகிறது. தர்மம் என்பது நீதியின் தார்மிக வழிகாட்டி, அரசியலமைப்புச் சட்டம் என்பது நீதியின் சட்ட ரீதியான வழிகாட்டி. இரண்டும் ஒரே இலக்கை நோக்கமாகக் கொண்டுள்ளன. பகவத் கீதையும், அரசியலமைப்பு சட்டமும் ஒன்றுதான். கையால் எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம்தான் பகவத் கீதை. இந்த இரண்டும் அமைதியான, கருணைமிகுந்த சமுதாயத்தை உருவாக்க முயல்கின்றன. இவ்வாறு அவர் பேசினார். இந்நிலையில் பவன் கல்யாணின் பேச்சுக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மூத்த காங்கிரஸ் தலைவர் பி.கே. ஹரிபிரசாத் கூறும்போது, “அரசியலமைப்புச் சட்டத்தை புரிந்து கொள்ள முடியாத பிரபலங்கள்தான் இதுபோன்று பேசுவார்கள். அரசியலமைப்புச் சட்டம் என்பது மதச்சார்பற்றது. அதில் தர்மத்துக்கு இடம் கிடையாது” என்றார்.
