நாகப்பட்டினம் மாவட்டம் சார்பில், ‘பெரியார் உலக’ நிதி ரூ.14 லட்சம் வழங்கப்பட்டது!
இடிக்கப்பட்டது பாபர் மசூதி அல்ல; இந்தியாவின் மதச்சார்பின்மை!
அப்போதும் அமைதிப் பூங்காவாக இருந்தது, ‘‘தமிழ்நாடு’’ மட்டும் தான்!
நாகை, டிச.9 ‘‘தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய பல்வேறு நிதிகளைத் தர மறுத்தார்கள்; அடாவடி ஆளுநரை வைத்து போட்டி அரசே நடத்தினார்கள்; தேர்தல் ஆணையத்தின் மூலம் எஸ்.அய்.ஆர். என்றார்கள். இந்தத் தொல்லைகளை எல்லாம் தாங்கிக் கொண்டுதான் ‘திராவிட மாடல்’ அரசு முதன்மை மாநிலமாக வெற்றி நடை போடுகிறது. தொடர்ந்து தோற்றுப்போனவர்கள் வேறு வழியின்றி மதக்கலவரத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள்” என்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடர் பரப்புரைக் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் ஒன்றிய பா.ஜ.க., மற்றும் அதன் பின்னிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சனம் செய்து உரையாற்றினார்.
நாகை மாவட்டம் திராவிடர் கழகம் சார்பில், “இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’ மற்றும் ‘‘பெரியார் உலகம் நிதியளிப்பு” என்ற பொருண்மைகளில், கடந்த 7.12.2025 அன்று மாலை 6 மணியளவில், நாகப்பட்டினம் அபிராமி அம்மன் திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நாகை மாவட்டச் செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா அனைவரையும் வரவேற்று மகிழ, மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமையேற்று உரையாற்றினார். தி.மு.க. நாகை நகர்மன்றத் தலைவர் இரா.மாரிமுத்து, தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் இல.மேகநாதன், கழகத் தோழர்களான மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக. பொன்முடி, நாகை நகரத் தலைவர் தெ.செந்தில்குமார், நாகை மாவட்ட துணைத் தலைவர் பொன்.செல்வராசு, மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் மு.இளமாறன், மாவட்ட துணைச் செயலாளர் சுர்ஜித், பொதுக்குழு உறுப்பினர் ந.கமலம், மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் செ.கவிதா, நாகை மாவட்ட மகளிரணித் தலைவர் பு.அலமேலு, நகர் அமைப்பாளர் நாகை சண்.ரவிக்குமார் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்களான மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.க.ஜீவா, மாநில அமைப்பாளர் இரா.முத்து கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழகத் தலைவர் நன்னிலத்தில் நடைபெற்ற கூட்டத்தை முடித்து விட்டு நாகப்பட்டினம் இரவு 9 மணிக்கு மேல் வந்த போது, உற்சாகத்துடன் அவ ருக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் எழுச்சிகரமான வரவேற்பை வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நாகை மாவட்டச் செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா வரவேற்று அமர்ந்தார். மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமையேற்று சிறப்பித்தார். கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், நாகை மாவட்ட வி.சி.க. சட்டப்பேரவை உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் முன்னதாக பேசி முடித்திருந்தனர். தொடர்ந்து, மேனாள் பால்வளத்துறை அமைச்சர் உ.மதிவாணன், தி.மு.க. நாகை மாவட்டச் செயலாளர் என்.கவுதமன், உலக தமிழர் பேரமைப்பு துணைத் தலைவர் எம்.ஜி.கே.நிஜாமுதீன், ம.ம.க.மாவட்டத் தலைவர் ஒ.எஸ்.இப்ராஹிம், ம.நீ.ம. நாகை மாவட்டச் செயலாளர் சையது அனல், ம.ஜ.க. முன்சி யூசுப் தீன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். மேடை நிர்வாகத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் மேற்கொண்டார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கழகப் புத்தகங்களின் தலைப்புகளை அறிமுகம் செய்வித்து, அதை வாங்கிப் பயன்பெறும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.
நாகை மாவட்டம் சார்பில்
‘பெரியார் உலக’ நிதியாக ரூ.14 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது!
கழகத் தலைவருக்கு மாவட்டக் கழகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், பொதுமக்கள் ஆசிரியருக்குப் பயனாடை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தொகை வழங்கியவர்களின் பெயர்களை வாசித்தார். அவர்கள் மேடைக்கு வந்திருந்து கழகத் தலைவரிடம் காசோலையைக் கொடுத்து மகிழ்ந்தனர். நாகை மாவட்ட பெரியார் உலகம் நிதிக்குழு பொறுப்பாளர்கள் அனைவரும் கழகத் தலைவருடன் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். நிறைவாக நாகை மாவட்டம் சார்பில் பெரியார் உலகம் நிதியாக ரூ.14 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்தனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
அடுத்து கழகத் தலைவர் உரையாற்றினார். அவர் தமது உரையை, “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கியவர்கள், அதற்காக உழைத்தவர்கள் அனை வருக்கும் தலை தாழ்ந்த நன்றி” என்று தொடங்கினார். அடுத்து, தான் மேஜை மீது ஏறி நின்று பேசிக் கொண்டிருந்த காலத்தில் இங்கே பிரச்சாரத்திற்கு வந்திருந்ததாகவும், ”சஞ்சீவி ஆர்ட்ஸ்” என்ற பெயரில் ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்த தோழர், பெரியாரின் முகத்தை பெரிதாக வரைந்ததையும், அதை யானை மீது வைத்து ஊர்வலம் நடத்தியதையும் நினைவு கூர்ந்ததோடு, அது நடந்தது 1945 ஆம் ஆண்டில் என்று சொல்லி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதைத் தொடர்ந்து இதே நாகையில் அன்றைய காலகட்டத்தில் இருந்த வெளிப்பாளையம்
டி.கே.விஜயராகவன் அவர்களையும், நாகை அவுரித்திட லில் தந்தை பெரியாரின் 80 ஆம் ஆண்டு பிறந்த நாளில், 80 சவரன் தங்கச் சங்கிலி போட்டார்கள் என்பன போன்ற அரிய, வரலாற்றில் பதிந்துவிட்ட சுவடுகளை நினைவு கூர்ந்து, ’’ஆகவே நான் நாகைக்கு புதியவன் அல்ல” என்றார்.
“இடிக்கப்பட்டது பாபர் மசூதியை மட்டுமல்ல, இந்தியாவின் மதச்சார்பின்மை!”
தொடர்ந்து டிசம்பர் 6 ஆம் தேதியைப் பற்றிக் குறிப்பிட்டு, “வாழ்க்கை என்பது நன்மையும், தீமையும் சேர்ந்ததுதான் என்பதை இந்த தேதி நினைவூட்டுகிறது” என்று சொல்லிவிட்டு, “இந்த நாள்தான் உலக அறிஞர் அம்பேத்கரின் நினைவு நாள். ஆனால், அதே நாளைத்தான் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தேர்ந்தெடுத்து பாபர் மசூதியை இடித்தார்கள்” என்றார். அதனால் இந்தியா முழுவதும் ஏற்பட்ட கலவரத்தைக் குறிப்பிட்டுக் காட்டி னார். அத்துடன், “இடிக் கப்பட்டது பாபர் மசூதியை மட்டுமல்ல, இந்தியாவின் மதச்சார்பின்மை” என்று ஆழமான ஒரு கருத்தை குறிப்பிட்டார். அதற்கு பிறகு அந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதிகளின் கையெழுத்து இல்லாமல் இருந்த விசித்திரத்தை மனதில் பதியும்படி சுட்டிக்காட்டினார். அதையொட்டியே காந்தியாரை, ஆர்.எஸ்.எஸ்.காரரான சித்பவன் பார்ப்பனர் கோட்சே கொலை செய்ததை நினைவுபடுத்தினார். அப்போதும் இந்தியா முழுவதும் கலவரம் ஏற்பட்டதையும், தமிழ்நாட்டில் வானொலியில் தந்தை பெரியார் அமைதி காக்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததையும் குறிப்பிட்டுக் காட்டினார். மேலும் அவர், இதுபோன்ற காரணங்களால் தான் ஆர்.எஸ்.எஸ். மூன்று முறை தடை செய்யப்பட்டது என்றும் அம்பலப்படுத்தினார்.
‘‘தமிழ்நாடு பெரியார் மண்’’ என்று சொன்னால் சிலருக்கு எரிச்சல் வருகிறது!
தொடர்ந்து, “தமிழ்நாடு பெரியார் மண் என்று சொன்னால் சிலருக்கு எரிச்சல் வருகிறது. நாம் சும்மா சொல்லவில்லை என்று அதற்கு ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழில் இருந்து ஆதாரம் காட்டினார். பாபர் மசூதியை இடித்ததை அடுத்து, வெளிவந்த ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில் ஒரு அதிசயம் நடக்கிறது. இந்தியா முழுவதும் இரத்த ஆறு ஓடுகிறது. தமிழ்நாடுதான் அமைதிப் பூங்காவாக இருக்கிறது. காரணம் என்னவென்றால், திராவிடம்; திராவிட உணர்வுகள்; அதற்கு வித்திட்டவர் தந்தை பெரியார். பெரியார் மண்ணாக இருப்பதால் தான் இப்படி இருக்கிறது” என்று அந்தக் கட்டுரையாளர் எழுதினார். வேண்டுமானால் பாபர் மசூதி இடித்ததற்குப் பிறகு இரண்டு நாளில் வெளிவந்த ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இந்த வரிசையில் தான் தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம் வந்திருக்கிறார்கள்” என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொடர் செயல்பாட்டை விளக்கினார்.
நமது முதலமைச்சர் எதற்கும் அசரவில்லை!
மேலும் அவர், “கல்வி நிதி; பேரிடர் நிதி போன்றவற்றை தர மறுத்தார்கள்; ஆளுநரை வைத்துப் போட்டி அரசையே நடத்த முயன்றார்கள்; தொகுதி மறுவரையறை என்று மிரட்டிப் பார்த்தார்கள்; தேர்தல் ஆணையத்தை வைத்து எஸ்.அய்.ஆர். கொண்டு வந்தும் பார்த்தார்கள். நமது முதலமைச்சர் எதற்கும் அசரவில்லை. எல்லாவற்றையும் எதிர்கொண்டு இன்று தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஆக்கி வைத்துள்ளார். இப்படி எல்லாவற்றிலும் தோல்வியைத் தழுவியவர்கள் வேறு வழியின்றி இப்போது மதக்கலவரத்தில் ஈடுபட திருப்பரங்குன்றத்திற்கு வந்திருக்கிறார்கள்” என்று அவர்களின் மறைமுகத் திட்டத்தை பச்சையாக விளக்கிச் சொன்னார். மேலும் அவர், “அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிற நீதிபதிகளும் சட்டத்தை சரியாகப் புரிந்து கொண்டு தீர்ப்புகள் வழங்க வேண்டும்” என்று நீதிபதிகளுக்கு வேண்டுகோள் வைத்தார்.

“மக்கள் அவரவர் வாக்குகளை திருட்டுக் கொடுத்து விடாமல் பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் சந்ததிகளின் சுயமரியாதையை உறுதி செய்யவும் ‘திராவிட மாடல்’ அரசை மறுபடியும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்று மக்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்து தமது உரையை நிறைவு செய்தார்.
பங்கேற்றோர்

நிகழ்ச்சியில் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.இராசேந்திரன், தி.மு.க.மாவட்டக் கழகப் பொருளாளர் மு.லோகநாதன், கீழ்வேளூர் கழக ஒன்றியத் தலைவர் பாவா.ஜெயக்குமார், கழக திருமருகல் ஒன்றியத் தலைவர் இராச.முருகையன், கழக மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் ப.காமராஜ், திருமருகல் கழக ஒன்றியச் செயலாளர் சு.இராஜ்மோகன், வேதை கழக ஒன்றியச் செயலாளர் மு.அய்யப்பன், கீழையூர் கழக ஒன்றியத் தலைவர் ரெ.ரெங்கநாதன், கீழ்வேளூர் கழக ஒன்றியச் செயலாளர் ரெ.பாக்கியராஜ் திராவிடர் கழகத் தோழர்களான மாவட்ட இளைஞரணித் தலைவர் வி.ஆர்.அறிவுமணி, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மு.குட்டிமணி, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கு.கமலநாதன், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் இரா.பேபி, மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர் த.ஜெயப்பிரியா, கீழ்வேளூர் நகரத் தலைவர் அ.பன்னீர்செல்வம், கீழ்வேளூர் நகரச் செயலாளர் ம.முத்துராஜா உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தோழர்கள், பொதுமக்கள் திரண்டிருந்து நிகழ்ச்சியில் பேசப்பட்ட கருத்துகளை செவி மடுத்துச் சென்றனர்.
