சென்னை, டிச.8– கடந்த ஒரு வாரத்தில் ‘டிட்வா’, ‘சென்யார்’ ஆகிய இரு புயல்களால் பல தெற்கு ஆசிய நாடுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் புயல்கள் காரணமாக இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் மிக மோசமான ஒரு பேரழிவைச் சந்தித்தது. இந்தப் பேரழிவுகளில் இருந்து நூலிழையில் தமிழ்நாடு தப்பி இருக்கிறது. இது தொடர்பாக செய்திகளில் கூறப்படுவதாவது:
தென்கிழக்கு ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் நவம்பர் மாதம் வழக்கமாகவே மழையின் அளவு அதிகரிக்கும். அந்தக் காலகட்டத்தில் ஏற்படும் புயல்களால் பல்வேறு இடங்களிலும் கனமழை கூட பெய்யும். அப்படித் தான் கடந்த சில நாட்களாகவே பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மழை கொட்டி வருகிறது. இதனால் பாதிப்பு மோசமாகவே இருக்கிறது.
இரு புயல்கள்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் ‘டிட்வா’, ‘சென்யார்’ ஆகிய இரு சக்திவாய்ந்த புயல்கள் அடுத்தடுத்து உருவாகின. இது பல நாடுகளில் பெரும் பேரழிவை ஏற்படுத்தின. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.. பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். பலர் தங்கள் வீடுகளையும் இழந்தனர். இந்தப் புயல்களால் இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
கடந்த வாரம் மலாக்கா ஜலசந்தியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவான ‘சென்யார்’ புயல், தென் சீனக் கடல் வழியாக சென்றது. இதன் காரணமாகப் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டியது. குறிப்பாக சென்யார் புயல் இந்தியக் கடலோரத்திலிருந்து விலகி, இந்தோனேசியா, மலேசியாவை நோக்கிச் சென்றது. சென்யார் புயலால் இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் ஒரு வாரமாகக் கனமழை கொட்டியது. இதன் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி 900 பேர் உயிரிழந்தனர்.
மிக மோசமான உயிரிழப்பு
இப்படி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பெரும் புயல்களால் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் உயிரிழப்புகள் ஒரு பக்கம் என்றால் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாகவும் இன்னொரு பக்கம் உயிரிழப்புகள் அதிகரித்தன. இதன் காரணமாகவே வெறும் சில நாட்களில் இந்தோனேசியாவில் 1000க்கும் மேலானோர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர்.
டிட்வா
அதேபோல ‘டிட்வா’ புயலும் கூட மிக மோசமான அழிவை ஏற்படுத்தியது. அது இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் கனமழையைக் கொடுத்தது. இதன் காரணமாக அங்கும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இப்படிக் குறுகிய காலத்தில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கைப் பேரிடர்களால் மொத்தமாக 1700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
தப்பிய தமிழ்நாடு
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு நூலிழையில் தப்பியுள்ளது என்றே சொல்ல வேண்டும். முதலில் நம்மை ‘டிட்வா’ புயல் தாக்கிய போதிலும் மோசமான சம்பவம் எதுவும் நடக்கவில்லை. ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்த போதிலும் பாதிப்புகள் பெரியளவில் இல்லை. ஓரிரு உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் கூட பெரும்பாலும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
அதேபோல இந்த ‘சென்யார்’ புயலும் கூட இந்தியாவைத் தாக்கவில்லை. தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் இந்தப் புயல் உருவானாலும் கூட நல்வாய்ப்பாக இது தமிழ்நாடு பக்கம் வரவில்லை. அப்படியே இந்தோனேசியா, வியட்நாம் பக்கம் போய்விட்டது. இதன் காரணமாக அடுத்தடுத்து இரு புயல்கள் தாக்கிய போதிலும், நல்வாய்ப்பாகத் தமிழ்நாட்டிற்குப் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
