லக்னோ, டிச.8 எஸ்.அய்.ஆர். படிவத்தில் தவறான தகவல் கொடுத்ததாக, நாட்டிலேயே முதல்முறையாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மீது பிஎன்எஸ், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தம்
பீகாரை தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்கள், புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் வாக் காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்அய்ஆர்) பணி கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கியது. இப்பணிகளை டிசம்பர் 4-ஆம் தேதியுடன் முடிக்க உத்தரவிடப்பட்டது. எனினும், பருவமழை உள்ளிட்ட காரணங் களால் படிவங்களை சமர்ப்பிக்க 11-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.
எஸ்அய்ஆர் படிவங்களில் வாக்காளர்கள் பூர்த்தி செய்துள்ள விவரங்களை வாக்குச்சாவடிநிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) சரிபார்த்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில், எஸ்அய்ஆர் படிவத்தில் தவறான தகவல் கொடுத்ததாக, உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 31-ஆவது பிரிவின்கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராம்பூரின் ஜவஹர் நகரில் வசிப்பவர் நூர்ஜஹான். இவர் வெளிநாட்டில் (குவைத்) வசிக்கும் தனது மகன்கள் ஆமிர் கான், டேனிஷ் கான் சார்பாக தனது கையெ ழுத்துடன் எஸ்அய்ஆர் படிவத்தை சமர்ப்பித்துள்ளார். படிவங்களை பிஎல்ஓ சரிபார்த்த போது, ஆமிர் கான், டேனிஷ் கான் ஆகிய இருவரும் நீண்ட காலமாக வெளிநாட்டில் வசிப்பது தெரியவந்தது.ஆனால், அவர்கள் இந்தியாவில் வசிப்பதாக நூர்ஜஹான் தவறான தகவல் தந்துள்ளார்.
இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 31-ஆவது பிரிவை மீறும் செயல். இது தண்டனைக்குரிய குற்றம். மேலும் வேண்டுமென்றே உண்மையை மறைத்தது பிஎன்எஸ் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் என்று முதல் தகவல் அறிக்கையில் (எஃப்அய்ஆர்) கூறப்பட்டுள்ளது. ‘‘தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி எஸ்அய்ஆர் பணி வெளிப்படையாக நடைபெறுகிறது. படிவத்தில் தவறான தகவல் கொடுப்பது, உண்மையை மறைப்பது விதிகளை மீறிய செயல்’’ என்று ராம்பூர் மாவட்ட ஆட்சியர் அஜய் குமார் திவேதி கூறினார்.
எஸ்.அய்.ஆர். படிவத்தில் தவறான தகவல் கொடுத்ததாக நாட்டிலேயே முதல்முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணைய விதிகளின்படி, எஸ்அய்ஆர் படிவத் தில் தவறான தகவல் தெரிவித்தல், உண்மையை மறைத்தல், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் படிவம் சமர்ப்பித்தல் ஆகிய செயலில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
