இண்டிகோ விமானச் சேவை முடக்கத்தால் மக்கள் அவதி
புதுடில்லி, டிச.8 இந்திய விமானப் போக்குவரத்தில் 63% பங்களிக்கும் இண்டிகோ விமான நிறுவனம், புதிய விமான கடமை நேர வரம்பு (FDTL) விதிமுறைகள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் சுமார் 7,000 விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக, இம்மாத துவக்கத் தில் இருந்து லட்சக்கணக்கான பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
செல்வந்தர்களும் பரிதாபத்திற்குரி யோர் ஆயினர்.விமானப் பயணிகளின் இந்த இன்னல்கள், பணக்காரர்கள் என்று கருதப்படும் பலரையும் கூட கடுமையாகப் பாதித்துள்ளது:
டில்லியில் நடக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனக் கலந்தாய்வுக்குச் செல்ல இருந்த தனியார் நிறுவன தலைமை அதிகாரி, விமானம் ரத்து செய்யப்பட்டதால் மும்பையிலிருந்து டில்லிக்கு ரூ1.4 லட்சம் செலவில் டாக்சியில் சென்றும், சரியான நேரத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியாமல் பல கோடி ஒப்பந்தத்தை இழந்துள்ளார். இதன் விளைவாக, அவர் மனநிலை பாதிக்கப்பட்டு டில்லி ரயில் நிலையப் பயணிகள் தங்குமிடத்தில் படுத்துறங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
கடுமையான நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு தொழிலதிபர், டில்லியிலிருந்து அலகாபாத் சென்ற நிலையில், விமானம் ரத்து செய்யப்பட்டதால் உடனடியாக டில்லி திரும்ப முடியாமல், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் அலகாபாத் விமான நிலையத்தில் தவித்து வருகிறார். சக பயணி ஒருவர் அவருக்கு உணவளிக்கும் நிலைக்கு அவர் ஆளானார்.
இந்தச் சூழலில், பாதிக்கப்பட்ட தொழிலதிபர் தனது சமூக வலைதளப் பதிவில், “என்னை பிச்சைக்காரனாக இந்த அரசு மாற்றிவிட்டது” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
கரோனா காலத்தில் ஏழைகள் உணவுக்காக சேவை அமைப்புகளை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், தற்போது விமானச் சேவை முடக்கம் காரணமாக பணக்காரர்களும் விமான நிலையத்தில் உணவுக்காகக் காத்திருக்கும் நிலைக்கு மோடி அரசு கொண்டு வந்துவிட்டது.
அதாவது, ஏழை பணக்காரன் என இரண்டு பேரையும் பிச்சைக்காரர் களாக்கியதுதான் மோடியின் புதிய ‘சமூக நீதி’யாகும்.
