ஜாதியை ஒழித்தால்தான் சமத்துவத்தை நிலைநாட்ட முடியும்!
அதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் தேவை!
சிதம்பரம். நவ.7 ஜாதியை ஒழித்தால் தான் சமத்துவத்தை நிலைநாட்ட முடியும். ஆகவே ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் தேவை என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
மாவட்டம் தோறும் ”ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும், முக்கியத்துவமும்” எனும் தலைப்பில் கருத்தரங்கங்கள் நடத்தவேண்டும் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இந்தியாவிலேயே காங்கிரசின் சார்பில் முதல் கருத்தரங்கமாக தமிழ்நாட்டில் நடைபெற்றது. அதில் அனைத்துக்கட்சியினரும் கலந்துகொண்டு கருத்துகளை எடுத்து வைத்தனர். ஆசிரியர் அவர்களும் நிறைவுரை ஆற்றி பெருமை சேர்த்திருந்தார். இரண்டாம் கூட்டமாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிதம்பரத்தில் கடலூர் சாலையில் அமைந்துள்ள பைசல் மண்டபத்தில், 6.11.2023 அன்று மாலை 5 மணியளவில் “ஜாதிவாரி கணக்கெடுப் பின் அவசியமும், முக்கியத்துவமும்” எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். ஆசிரியர் ஒன்றிய அரசின் ’விஸ்வகர்மா யோஜனா’ என்ற குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்துவிட்டு, 5.11.2023 அன்று மதுரையில் அதன் நிறைவு விழாவில் பேசிவிட்டு, தஞ்சாவூர் சென்று, அடுத்தநாள் காலை 9 மணிக்கு தஞ்சை யிலிருந்து புறப்பட்டு, அரியலூர், காட்டுமன்னார்குடி ஆகிய இடங்களில் தோழர்களை சந்தித்து, அவர்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டு, மாலை சரியான நேரத்தில் கருத்தரங்க அரங்கிற்குள் நுழைந்தார். உற்சாகமான ஒலி முழக்கங்களோடு ஆசிரியரை வரவேற்று மகிழ்ந்தனர் காங்கிரஸ் கட்சியின் தோழர்கள். சுற்றுப்பயணத்தில் ஒவ்வொரு மாவட்டமாக வெளியிடப் பட்ட நான்கு புத்தகங்களுள், “ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம், ஏன்?” என்று புத்தகமும் ஒன்று. அதை மேடையில் இருந்த கட்சித் தலைவர்களுக்கு ஆசிரியர் கொடுக்கச் சொன்னார். அதன்படி புத்தகம் கொடுக்கப் பட்டது. ஆசிரியர் பேசும் போது அந்த புத்தகம் கலந்து கொண்டவர்களிடையே விற்பனை செய்யப்பட்டது. மக்களும் ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டனர். கூட்டணிக் கட்சிகளிடையே இருந்த இணக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது.
கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன், அதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் பேசியபிறகு, சென்னை செல்ல வேண்டிய தேவை காரணமாக முன்கூட்டியே பேசிவிடுகிறேன் என்ற அடிப்படையில் ஆசிரியர் பேசி னார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன், கே.எஸ்.அழகிரி ஆகியோர் முன்னிலையில் ஆசிரியர் பேசினார்.
ஒற்றைக்குரலில் மண்ணின் மைந்தர்கள்!
அவர் தமது உரையில் யாரும் எதிர்பாராத வகையில் தோழர் பாலகிருஷ்ணன் அவர்களைப் பார்த்து, “உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று நாம் பேசினாலும், என்னருகே அமர்ந்திருக்கும் அருமைச் சகோதரர் சிந்தனைச் செல்வன் மண்ணின் மைந்தர்! தோழர் பாலகிருஷ்ணன் மண்ணின் மைந்தர்! கே.எஸ்.அழகிரி மண்ணின் மைந்தர்! ஏன் நானும் மண்ணின் மைந்தன் தான்!” என்று அனைவரையும் உணர்ச்சிக் காளாக்கிவிட்டு, “ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டு மென்று இந்த மண்ணின் மைந்தர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கின்ற மண்ணின் மைந்தர்களும் கேட்கிறார்கள். அதுதான் இந்தியா கூட்டணியாக இருக் கின்றது” என்று தொடக்கத்திலேயே கலந்துகொண்டிருந்த அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்துவிட்டதால், காங்கிரஸ் தோழர்கள் ஆசிரியரின் இந்தக் கருத்தை விசிலடித்துக் கொண்டாடினர். மேலும் அவர் கொஞ்சமும் இடைவெளி விடாமல், “புள்ளி வைத்த இந்தியாதான், புள்ளி வைக்காத இந்தியாவைக் காப்பாற்றப்போகிறது” என்று பூடமாகச் சொன்னதும், கைதட்டலும், விசிலும் பறந்து, அரங்கமே உற்சாகத்தில் திளைத்தது. பிறகு ‘‘திராவிட இயக்கத்தின் மாலை நேர வகுப்புகள் தெருக்களில்தான் நடைபெற்றன. தமிழ் நாட்டின் முதல் பேராசிரியர் பெரியார்தான் வகுப்புகள் எடுப்பார்” என்று அண்ணா கூறியது போல, ஆசிரியர் ஒரு பொறுப்புள்ள பேராசிரியர் எப்படி தன் மாணவர் களுக்கு அக்கறையோடு கற்றுக்கொடுப்பாரோ அது போல் ஜாதிவாரி கணக்கெடுப்பின் தேவை பற்றி கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். முன்னதாக தான் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் பற்றியும், அதை பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் வாசித்துக் காடியதையும் சுட்டிக்காட்டிப் பேசினார் ஆசிரியர்.
சமூக நீதி வகுப்பெடுத்த ஆசிரியர்!
தொடக்கத்தில், ”சமூகநீதி என்றால் என்ன?” என்ற கேள்வியுடன் நீதிக்கட்சிக் காலத்தில் சமூகத்தில் நிலவிய அநீதி தான் சமூக நீதியை நாம் தேடத்தொடங்கியதற்கான காரணம் என்பதை அம்பேத்கர், பெரியார் ஆகி யோரையும், ஆர்.எஸ்.எஸ். சமூக நீதியை ஏற்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி வரலாற்றில் சமூக நீதியின் பின்னணியை விளக்கமாக பேசினார். அப்படிப் பேசிவிட்டு, “அந்த சமூக நீதியை அடைவது எப்படி?” என்ற கேள்வியை எழுப்பி, அதற்கும் விளக்கம் தந்தார். அந்த விளக்கத்தில் திராவிட இயக்கத்தின் வரலாற்று பதிவுகள் ஏராளமாக இருந்தன. அதிலொன்று, ‘நந்தியே விலகி நில்’ என்றுதான் சொன்னார்களே தவிர, ’நந்தனே உள்ளே வா’ என்று சொல்லவில்லை என்று கலைஞர் சொன்னதை நினைவூட்டி, “நந்தனே உள்ளே வா என்று அழைத்துச் சென்றது திராவிடர் இயக்கம்! இந்தக் கூட்டணி!” என்று மேடையில் அமர்ந்திருந்த கட்சித் தலைவர்களை சுட்டிக்காட்டியதும், அரங்கமே கை தட்டல்களாலும், விசில்களாலும் நிறைந்தது. மேலும் அவர், “நீதிமன்றங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள் உள்ளதா என்று வன்னியர் இட ஒதுக்கீட்டில் நம்மைக் கேட்கின்றன. ஆனால் 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்குக் கேட்கவில்லை’ என்ற விமர்சனத்தை முன் வைத்து, ‘நமக்கு ஒரு நீதி, அவர் களுக்கு ஒரு நீதியா?’ என்ற கேள்வியை எழுப்பினார்.
இறுதியில், ”ஜாதியை ஒழித்தால்தான் சமத்துவத்தை நிலைநாட்ட முடியும். அதற்கு ஜாதிவாரிக் கணக்கெடுப்புத் தேவை” என்று கூறி பெருத்த கைதட்டல்களுக்கிடையே தனது உரையை நிறைவு செய்து, அனைவரிடமும் அனுமதி பெற்று சென்னைக்கு 7.20 மணிக்குப் புறப் பட்டார்.
கலந்து கொண்ட தோழர்கள்!
கடலூர் மாவட்டத் தலைவர் தண்டபாணி, மாவட்டத் துணைத் தலைவர் கோவி பெரியார்தாசன், மாவட்டச் செயலாளர் அன்பு சித்தார்த்தன், மாவட்ட இணைச் செயலாளர்கள் நா.பஞ்சமூர்த்தி, யாழ் திலீபன், மாவட்ட துணைச் செயலாளர் கண்ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கோ.வேலு, மாவட்ட அமைப்பாளர் தென்னவன், பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் மாணிக்கவேல், நகர அமைப்பாளர் செல்வரத் தினம், நகரத் தலைவர் கோவி.குணசேகரன், அரியலூர் மாவட்டத் தலைவர் நீலமேகம், செயலாளர் கோபால், துணைத் தலைவர் திலீபன், மாவட்ட துணைத்தலைவர் ரத்தின ராமச்சந்திரன், தலைமைக்கழக அமைப்பாளர் சிந்தனைச் செல்வன், சிதம்பரம் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் நெடுமாறன், பேராசிரியர் திருமால் மற்றும் சிதம்பரம் மாவட்டத் தோழர்கள் லெனின், முரளிதரன், பஞ்சநாதன், செங்குட்டுவன், பெரியார் படிப்பகம் பொறுப்பாளர் நீதிராஜன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செந்தில்நாதன், மாநிலச் செயலாளர் பி.பி.கே.சித்தார்த்தன், கடலூர் வடக்கு மாவட்டத் தலைவர் திலகர், சிதம்பரம் நகரத் தலைவர் மக்கீன், விருத்தாசலம் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாநில பொதுச்செயலாளர் சேரன், வி.சி.க.மாவட்ட செயலாளர் அரங்க தமிழ் ஒளி, சி.பி.எம்.தோழர் மூசா, திராவிடர் கழக பேச்சாளர் என்னாரெசு பிராட்லா, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், உடுமலை வடிவேல், யுகேஷ், அர்ச்சுனன், சாந்தகுமார், ஒளிப்படக் கலைஞர் பா.சிவகுமார், தமிழ்ச்செல்வன், அருள்மணி, டைசன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.