
இந்தியா பல்வேறு சமுதாயங்களின் தொகுதி ஆகும். இதில் பார்சிகள், கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், ஹிந்துக்கள் இருக்கிறார்கள். இந்தச் சமுதாயங்களுக்கு அடிப்படையாக இருப்பது இனம் அல்ல. மதமே இவற்றின் அடிப்படையாகும். இது ஒரு மேற்போக்கான கருத்தேயாகும். இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான விஷயம் ஒரு பார்சி தம்மைப் பார்சி என்றும், ஒரு கிறிஸ்தவர் தம்மை ஒரு கிறிஸ்தவர் என்றும், ஒரு ஹிந்து தம்மை ஹிந்து என்றும் ஏன் கூறிக்கொள்கின்றனர் என்பதேயாகும். பார்சி, கிறிஸ்தவர், முஸ்லிம் ஆகியோரைப் பொறுத்தமட்டில் இதற்கு விடை காண்பது எளிது. ஒரு பார்சி தம்மைப் பார்சி என்று கூறுவது ஏன் என்று அவரிடம் கேட்டால், இந்தக் கேள்விக்கு விடை கூறுவது அவருக்குக் கடினமாயிராது. தாம் ஜொராஸ்டரைப் பின்பற்றுவதால் தாம் ஒரு பார்சி என்று அவர் கூறுவார். இதே கேள்வியை ஒரு கிறிஸ்த வரிடம் கேளுங்கள். அவருக்கும் இந்தக் கேள்விக்கு விடையளிப்பது கடினமாயிராது. ஏசு கிறிஸ்துவை நம்புவதால் அவர் கிறிஸ்தவர். இதே கேள்வியை ஒரு முஸ்லிமிடம் கேளுங்கள். அவருக்கும் இந்தக் கேள்விக்கு விடை அளிப்பதில் தயக்கம் இருக்காது.தாம் இஸ்லாமை நம்புவதால் தாம் ஒரு முஸ்லிம் என்று அவர் பதிலளிப்பார்.
இதே கேள்வியை ஓர் ஹிந்துவிடம் கேட்டீர் களானால், அவர் என்ன சொல்லுவதென்று தெரியாமல் முற்றிலும் திகைத்துப் போவார் என்பதில் சந்தேகம் இல்லை
ஹிந்துச் சமுதாயம் வணங்குகின்ற கடவுளர்களைத் தாம் வணங்குவதாகவும் அதனால் தாம் ஹிந்து என்றும் அவர் கூறினால் அவரது பதில் உண்மையாயிருக்க முடியாது. எல்லா ஹிந்துக்களும் ஒரே கடவுளை வணங்கவில்லை. சில ஹிந்துக்கள் ஒரு கடவுளை மட்டும் வணங்குவோராகவும், சிலர் பல கடவுளர்களை வணங்குவோராகவும், மற்றும் சிலர் எல்லாவற்றையும் கடவுளாக வணங்குவோராகவும் இருக்கிறார்கள், ஒரு கடவுளை மட்டும் வணங்குவோர் அனைவரும் ஒரே கடவுளை வணங்கவில்லை. சிலர் விஷ்ணுவையும், சிலர் சிவனையும், சிலர் இராமனையும், சிலர் கிருஷ்ணனையும் வணங்குகிறார்கள். சிலர் ஆண் கடவுளர்களை வணங்கவில்லை. இவர்கள் ஒரு பெண் தெய்வத்தை வணங்குகிறார்கள். இவர்களும் கூட ஒரே பெண் தெய்வத்தை வணங்கவில்லை. இவர்கள் வெவ்வேறு பெண் தெய்வங்களை வணங்குகிறார்கள். சிலர் காளியையும், சிலர் பார்வதியையும், சிலர் லட்சுமியையும் வணங்குகிறார்கள்.
பல கடவுளர்களை வணங்குவோர் எல்லாக் கடவுளர்களையும் வணங்குகிறார்கள். இவர்கள் விஷ்ணுவையும் சிவனையும் வணங்குவார்கள்.
இராமனையும் கிருஷ்ணனையும் வணங்குவார்கள் இவர்கள் காளி, பார்வதி, லட்சுமி ஆகியோரையும் வணங்குவார்கள். ஒரு ஹிந்து சிவனுக்குப் புனிதமான சிவராத்திரி நாளில் விரதம் இருப்பார். விஷ்ணுவுக்குப் புனிதமான ஏகாதசி நாளிலும் விரதம் இருப்பார். சிவனுக்குப் புனிதமானது என்பதால் வில்வ மரத்தை நடுவார், விஷ்ணுவுக்கு விருப்பமானது என்பதால் துளசிச் செடியை நடுவார்.
ஹிந்துக்களில் பல கடவுளர்களை வணங்குவோர் ஹிந்துக் கடவுள்களை வணங்குவதோடு நின்றுவிட வில்லை. ஒரு முஸ்லிம் பீரையோ அல்லது கிறிஸ்தவ மாதாவையோ வணங்குவதற்கு ஒரு ஹிந்து தயங்குவதில்லை. ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் முஸ்லிம் பீரிடம் சென்று காணிக்கை செலுத்துகிறார்கள். உண்மையில் சில இடங்களில் முஸ்லிம் பீர்களின் பரம்பரை அறங்காவலர்களாக பிராமணர்கள் இருக்கிறார்கள் இவர்கள் முஸ்லிம் பீரின் உடையை அணிகிறார்கள். ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் பம்பாய்க்கருகே உள்ள கிறிஸ்தவ மாதாவான மந்த் மவுலி ஆலயத்துக்குச் சென்று காணிக்கை செலுத்துகிறார்கள்.
இவ்வாறு முஸ்லிம் அல்லது கிறிஸ்தவ கடவுளர்களை வணங்குவது ஏதேனும் சில நேரங்களில் நடக்கும் நிகழ்ச்சியாகும். ஆனால் மதவிசுவாசம் நிரந்தரமான முறையில் மாற்றமடைந்துள்ள நிகழ்ச்சிகளும் உள்ளன. ஹிந்து என்று கூறப்படும் பலருடைய மதத்தில் வலுவான முகமதிய அம்சம் காணப்படுகிறது. இந்த வகையில் பஞ்ச்பிரியா என்ற விசித்திரமான பிரிவினர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் அய்ந்து முகமதிய ஞானிகளை வழிபட்டு அவர்களுக்குச் சேவல்களைப் பலியிடுகிறார்கள். இதற்கு முகமதிய தபாலி பக்கீர் ஒருவர் புரோகிதராகச் செயல்படுகிறார். இந்த அய்ந்து புனிதர்கள் யார். அவர்களின் பெயர் என்ன என்பது கூட நிச்சயமாகத் தெரியவில்லை.இந்தியா முழுவதிலும் பல ஹிந்துக்கள். பஞ்சாபில் உள்ள சக்கி, சாவார் போன்ற முகமதிய புனித தலங்களுக்கு யாத்திரை செல்கிறார்கள்.
மல்கானாக்கள் என்பவர்களைப் பற்றி திரு.ப்ளன்ட் குறிப்பிடுகையில் அவர்கள் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த ஹிந்துக்களிலிருந்து மதம் மாற்றப்பட்டவர்கள் என்று கூறுகிறார். இவர்கள் ஆக்ராவையும், அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களையும் முக்கியமாக மதுரா, எட்டா, மைன்புரி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ராஜ்புத், ஜாட் பனியா வகுப்பினர்களின் பரம்பரையில் வந்தவர்கள். இவர்கள் தங்களை முஸல்மான்கள் என்று கூறிக்கொள்ள விரும்புவதில்லை. பொதுவாகத் தங்களுடைய பூர்வீக ஜாதிப் பெயர்களையே கூறுகிறார்கள். மல்கானா என்ற பெயரை இவர்கள் ஒப்புக்கொள்வது அரிது. இவர்களுடைய பெயர்கள் ஹிந்துப் பெயர்களாக உள்ளன. இவர்கள் பெரும்பாலும் ஹிந்துக் கோவில்களில் வழிபடுகிறார்கள். ராம் ராம் என்ற வணக்கச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் தங்களுக்குள் மட்டுமே திருமணத் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் மற்றொரு புறம் இவர்கள் சில சமயங்களில் மசூதிக்குச் செல்லுகிறார்கள்: சுன்னத்துச் செய்துகொள்கிறார்கள்: இறந்தவரின் உடலைப் புதைக்கிறார்கள் முகமதியர்கள் முக்கியமான நண்பர்களாகயிருந்தால் அவர்களுடன் சேர்ந்து உணவு உண்பார்கள்.
குஜராத்தில் இதுபோன்ற பல வகுப்புகள் உள்ளன. மாட்டியா குன்பி என்ற வகுப்பினர் தங்களுடைய முக்கிய சடங்குகளைப் பிராமணர்களை வைத்து நடத்துகிறார்கள். ஆனால் இவர்கள் இமாம் ஷா என்ற பிரானா ஞானியையும் அவரது வழிவந்தவர்களையும் பின்பற்றுகிறார்கள்; முகமதியர்களைப் போலவே இவர்களும் இறந்தவரின் உடலைப் புதைக்கிறார்கள். ஷோக்கடா என்ற வகுப்பினர் தங்கள் திருமணங் களை ஹிந்து, முகமதியர் ஆகிய இரண்டு மதப்புரோகிதர் களையும் வைத்து நடத்துகிறார்கள். மோமன் என்ற வகுப்பினர் சுன்னத்துச் செய்து கொள்கிறார்கள்: இறந்தவர் உடலைப் புதைக்கிறார்கள்; குஜராத்தி குரானைப் படிக்கிறார்கள்: மற்றப்படி இவர்கள் ஹிந்துப் பழக்க வழக்கங்களையும் சடங்கு களையும் பின்பற்றுகிறார்கள்.
“ஹிந்துக்களின் நம்பிக்கைகளை நான் கொண்டிருக்கிறேன் அதனால் நான் ஹிந்து” என்று ஒருவர் கூறினால் அது சரியாக இருக்க முடியாது. ஏனென்றால் ஹிந்து மதத்துக்கென்று ஒரு குறிப்பிட்ட சமயக்கோட்பாடு கிடையாது. எல்லோராலும் ஹிந்துக்கள் என்று ஏற்றுக் கொள்ளப் பட்டவர்களின் நம்பிக்கைகளில் காணப்படும் வேறுபாடு கிறிஸ்தவர்கள் மற்றும் முகம்மதியர்கள் நம்பிக்கைகளில் காணப்படும் வேறுபாடுகளைவிட மிக அதிகம். மிக முக்கியமான சமய நம்பிக்கைகளை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் கூட இவற்றிலும் மிகுந்த வேறுபாடு காணப்படுகிறது. ஹிந்து சமய சாத்திர நூல்கள் எல்லாவற்றையும் ஏற்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் வேறு சிலர் தந்திர சாத்திரங்களை வியந்து பாராட்டுகிறார்கள்; மற்றும் சிலர் வேதங்கள் மட்டுமே முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கருதுகிறார்கள். மற்றும் சிலர் கர்மம், மறுபிறப்பு என்ற கொள்கையில் நம்பிக்கை வைப்பது தான் ஒரே முக்கியமான அம்சம் என்று கருதுகிறார்கள்.
ஹிந்து மதம் பல்வேறு கொள்கைகளும் கோட்பாடு களும் ஒன்று சேர்ந்த கலவைத் தொகுப்பாகும். ஏகதெய்வவாதிகள். பலதெய்வக் கொள்கையினர். எல்லாம் இறைவனே என்பவர்கள், சிவன், விஷ்ணு ஆகிய பெருங்கடவுள்களை அல்லது இவர்களின் தேவிகளான பெண் தெய்வங்களை வணங்குவோர். தேவ மாதாக்களை அல்லது மரங்களிலும் பாறை களிலும் நீரோடைகளிலும் உறைவதாகக் கருதப்படும் ஆவிகள், கிராம தேவதைகள் ஆகியோரை வணங்கு வோர் என்ற பல திறத்தவருக்கும் ஹிந்துமதத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய தெய்வங்களைத் திருப்தி செய்வதற்காக எல்லா விதமான இரத்தப்பலிகளையும் அளிப்பவர்கள், எந்த உயிரையும் கொல்வதில்லை என்பது மட்டுமின்றி, வெட்டு’ என்ற சொல்லையே பயன்படுத்தக்கூடாது என்ற கொள்கை உள்ளவர்கள், பிரார்த்தனையும், பஜனையுமே முக்கியமாக இடம் பெறும் சடங்குகளைப் பின்பற்றுவோர், மதத்தின் பெயரால் சொல்லமுடியாத வெறியாட்டங்களில் ஈடுபடுவோர் ஆகியோருக்கும் அது இடமளித்துள்ளது: வெவ்வேறு அளவில் முரண்பாடுகள் கொண்ட எத்தனை எத்தனையோ பிரிவுகளும் இதில் உள்ளன. இவற்றில் சில பிரிவுகள் பிராமணர்கள் எல்லோரினும் உயர்ந்தவர்கள் என்பதை மறுக்கின்றன அல்லது குறைந்த பட்சம் பிராமணரல்லாத மதத்தலைவர்களைக் கொண்டிருக் கின்றன.
மற்ற ஹிந்துக்கள் பின்பற்றும் பழக்க வழக்கங் களையே தாமும் பின்பற்றுவதால் தாம் ஓர் ஹிந்து என்று ஒருவர் கூறினால் அவருடைய கூற்று உண்மையாயிருக்க முடியாது. ஏனென்றால் எல்லா ஹிந்துக்களும் ஒரே மாதிரியான பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதில்லை.
வட நாட்டில் நெருங்கிய உறவினர்கள் திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தென்னாட்டில் சகோதரியின் மகளைத் திருமணம் செய்து கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை விடவும் நெருக்கமான உறவுத் திருமணங்களும் அனுமதிக்கப்படுகின்றன. பொதுவாகப் பெண்களின் கற்பொழுக்கம் உயர்வாக மதிக்கப்படுகின்றன.
ஆனால் சில சமுதாயங்கள் இதைப் பெரிதாகக் கருதுவதில்லை. குறைந்தபட்சம் திருமணத்துக்கு முன் அப்படிக் கருதுவதில்லை. மற்றும் சில சமுதாயங்கள் ஒரு மகளை மதரீதியாக விபச்சார வாழ்க்கை நடத்துவதற்கு அர்ப்பணிப்பதை வழக்கவிதியாகப் பின்பற்றுகின்றன. நாட்டின் சில பகுதிகளில் பெண்கள் தாராளமாக நடமாடுகிறார்கள். வேறு சில பகுதிகளில் அவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறார்கள். சில பகுதிகளில் பெண்கள் பாவாடை அணிகிறார்கள் வேறு சில பகுதிகளில் காற்சட்டைகள் அணிகிறார்கள்.
தாம் ஜாதி முறையில் நம்பிக்கை கொண்டிருப்ப தால் தாம் ஒரு ஹிந்து என்று ஒருவர் கூறினால் அதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எந்த ஒரு ஹிந்துவும் தம்முடைய அண்டை வீட்டுக்காரர் எதை நம்புகிறார் என்பதைப் பற்றி அக்கறை கொள்வதில்லை என்பதும், அவருடன் சேர்ந்து தாம் உணவு உண்ணலாமா, அவர் கையிலிருந்து தண்ணீர் பெறலாமா என்பதை அறிவதிலேயே அவருக்கு அக்கறை அதிகம் என்பதும் உண்மையே. வேறு வார்த்தைகளில் சொன்னால், ஜாதி முறைமை ஹிந்து மதத்தில் இன்றியமையாத அம்சம் என்பது இதன் பொருளாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹிந்துச் ஜாதி ஒன்றைச் சாராத ஒருவர் ஹிந்துவாயிருக்க முடியாது. இவையெல்லாம் உண்மை தான் என்றாலும் கூட ஜாதி முறைமையைப் பின்பற்றுவது மட்டும் போதாது என்பதை மறக்கக் கூடாது. பல முஸல்மான்களும் பல கிறிஸ்தவர்களும் கூட ஜாதி முறைமையைப் பின்பற்றுகிறார்கள். கலந்து உணவு உண்பதில் இதைப் பின்பற்றாவிட்டாலும், கலப்புத் திருமணம் செய்துகொள்வதில் நிச்சயமாகப் பின்பற்றுகிறார்கள். இதன் காரணமாக இவர்களை ஹிந்துக்கள் என்று கூறிவிட முடியாது. இரண்டு அம்சங்களும் இருக்க வேண்டும். ஒன்று, அவர் ஹிந்துவாக இருக்க வேண்டும். இரண்டு, ஜாதி முறைமையையும் பின்பற்ற வேண்டும். இது நம்மை மீண்டும் ‘ஹிந்து’ என்பவர் யார் என்ற பழைய கேள்விக்குக் கொண்டு செல்கிறது. நாம் இப்போது இருக்கும் இடத்திலேயே இது நம்மை விட்டுச் செல்கிறது.
தம்முடைய மதத்தைப் பற்றிய விஷயத்தில் தமது நிலை இவ்வாறு சங்கடமாகவும் குழப்பமாகவும் இருப்பது ஏன் என்பது ஒவ்வொரு ஹிந்துவும் சிந்திக்க வேண்டிய பிரச்சினை அல்லவா? ஒவ்வொரு பார்சியும், ஒவ்வொரு கிறிஸ்தவரும், ஒவ்வொரு முஸ்லிமும் விடை அளிக்க முடிகின்ற ஒரு எளிமையான கேள்விக்கு அவர் விடை அளிக்க முடியாமலிருப்பது ஏன்? இந்த மதக் குழப்பம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்று அவர் தம்மைத் தாமே கேட்டுக் கொள்ளத் தருணம் வந்துவிடவில்லையா?
– பி.ஆர்.அம்பேத்கர்
நன்றி: சிந்தன் புக்ஸ் வெளியிட்டுள்ள
‘ஹிந்து மதத்தில் புதிர்கள்’ நூல்
